டாக்கா, ஜூலை 22- வங்கதேச தலைநகர் டாக்காவில், விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று பள்ளிக் கட்டடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 50-க்கும் அதிகமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச விமானப்படைக்குச் சொந்தமான F-7 BGI ரக பயிற்சி விமானம் டாக்காவின் வடக்கே உள்ள உத்தரா பகுதியில் அமைந்துள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. பிற்பகல் 3:06 மணியளவில் புறப்பட்ட இந்த விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தில் பெரும் தீ பரவி, கரும்புகை வானுயர எழும்பும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின. தீயணைப்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் பலர் கண்ணீர்விட்டு கதறி அழுத காட்சிகள் காண்போரின் மனதை உருக்குவதாக இருந்தன.
இந்த துயரச் சம்பவம் குறித்து வங்கதேச இடைக்கால அரசாங்கத் தலைவர் முகம்மது யூனுஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்றும், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குடியரசு துணைத் தலைவர்
ஜெகதீப் தன்கர் பதவி விலகல்
புதுடில்லி, ஜூலை 22- குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் (74) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி யுள்ளார். உடல்நலக் குறைவு மற்றும் மருத்துவ காரணங்களால் பதவியில் இருந்து உடனடியாக விலகுவதாக அவர் தெரி வித்துள்ளார்.
நாட்டின் 14ஆவது குடியரசு துணைத் தலைவ ராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெகதீப் தன்கரின் அய்ந்தாண்டு பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில் அவர் திடீரென பதவி விலகல் அறிவிப்பை வெளி யிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை 10ஆம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தன்கர், 2027 வரை பதவியில் நீடிக்கப் போவதாகவும், அதன் பிறகே ஓய்வுபெற போவதாகவும், அதுவே சரியான தருணமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
பா.ஜ.,வை எதிர்த்து
ஹிந்து மகாசபா போட்டியாம்
சென்னை, ஜூலை 22- தமிழ்நாடு கூடுதல் காவல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன், தேவாசீர்வாதம், புதிய இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது, என்று கூறுவது, ஹிந்துக்களை அவமானப்படுத்துவதாகும்.
விநாயகர் சதுர்த்தியன்று, வீடு தோறும்; வீதி தோறும் விநாயகர் சிலைகளை வைத்து கொண் டாட வேண்டும்.
அடுத்த ஆண்டு மாசி மகம் விழாவின் போது, இந்தியாவில் உள்ள அனைத்து துறவியர் மற்றும் எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் சக்கரபாணி மகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாநாடு நடை பெற உள்ளது.
சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடுவோம். பா.ஜ., போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவோம்.
– பாலசுப்பிரமணியன், அகில பாரத ஹிந்து மகா சபா, மாநில தலைவர்
பாலியல் துன்புறுத்தலா?
இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்
குழந்தைகள், சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து செய்திகள் வெளியானபடி உள்ளன. இதுகுறித்து யாரிடம்? புகார் அளிப்பது எனத் தெரியாமல் இருப்பர். அவர்களுக்காக தமிழ்நாடு அரசு, 1098 என்ற உதவி எண்ணை அறிவித்துள்ளது. இதை தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டோர் (அ) விவரம் தெரிந்தோர் புகார் அளிக்கலாம். அவர்களின் தகவல் ரகசியம் காக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.