பெங்களூரு மாநகராட்சியை 5 ஆக பிரிக்க கருநாடக அரசு முடிவு

2 Min Read

பெங்களூரு, ஜூலை 22- பெங்களூரு மாநகராட்சிக்கு 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது பெங்களூரு மாநகராட்சியை கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, தெற்கு என 5 ஆக பிரித்து கருநாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள தாகவும் கூறப்பட்டுள்ளது.

மேம்பட்ட சேவை வழங்க…

பெங்களூரு மாநகராட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய வரைவு அறிவிப்பு ஒன்றை கருநாடக அரசு வெளியிட்டுள்ளது. நகர நிர்வாகத்தை பரவலாக்குவது மற்றும் மக்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில் பெங்களூரு மாநகராட்சியை மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்தி என 5 ஆக பிரித்து கருநாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மக்கள் ஆட்சேபனை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் மத்திய பெங்களூரு மாநகராட்சியில் மட்டும் சிவாஜி நகர், சாந்தி நகர், சிக்க்பெட், காந்திநகர் மற்றும் சாமா ராஜ்பேட் போன்ற பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் உள்ளூர் நிர்வாகத்தை மேம்படுத்துதல், அடிமட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் குடிமக்கள் சேவைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

5 மாநகராட்சிகளாகப் பிரிப்பு

எனவே இனி பெங்களூரு மாநகராட்சியானது, பெங்களூரு மேற்கு மாநகராட்சி, பெங்களூரு கிழக்கு மாநகராட்சி, பெங்களூரு வடக்கு மாநகராட்சி, பெங்களூரு தெற்கு மாநகராட்சி, பெங்களூரு மத்திய மாநகராட்சி என்று 5 மாநகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த மாநகராட்சிகளுக்கான பெயர்கள், எல்லைகளும் வரையறுக் கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே பெங்களூருடன் புறநகரில் உள்ள ஆனேக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது பெங்களூரு புறநகர், ராமநகர் மாவட்டங்களில் உள்ள கிராமங் களும் பெருநகர பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்கப்பட்டு உள்ளன.

ஆட்சேபனை தெரிவிக்கலாம்

இது தொடர்பாக ஆட்சேபனை மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க பொதுமக்களுக்கு அரசு கால அவகாசம் வழங்கி உள்ளது. அதன்படி அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

இன்று முதல் அடுத்த 30 நாட்களுக்குள் பெங்களூரு விதான சவுதா 4ஆவது மாடியில் உள்ள நகர வளர்ச்சி துறை கூடுதல் ஆணையரை சந்தித்து பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்டம் 2024 ஏப்ரல் 24 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த சட்டம் BBMP சட்டத்தை ரத்து செய்து, புதிய கிரேட்டர் பெங்களூரு நிர்வாக ஆணையம் மற்றும் 7 மாநகராட்சிகளை உருவாக்க வழிகாட்டுகிறது. இதன் மூலம் நகரின் நிர்வாக அமைப்பு நவீனமயமாக்கப்படும்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *