மக்களவைக்கு இதுவரை 18 முஸ்லிம் பெண்களே தேர்வு

Viduthalai
3 Min Read

இந்தியா

இக்ரா ஹசன்

இந்தியா

சஜிதா அகமத்

முதல் பெண் முஸ்லிம் மக்களவை உறுப்பினர் மொஃபிதா அஹமத், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்ரா ஹசன், சஜிதா அகமத்

புதுடில்லி, ஜூலை 22- சுதந்திர இந்தியாவில் இதுவரை 18 முஸ்லிம் பெண்களே மக்களவை உறுப்பினர்களாக இருந்துள்ளனா்; இவா்களில் 13 போ் அரசியல் குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் என்று புதிய புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகம்

ரஷீத் கித்வாய், அம்பா் குமாா் கோஷ் ஆகிய இருவா் எழுதியுள்ள “மிஸ்ஸிங் ஃப்ரம் தி ஹெளஸ்-முஸ்லிம் உமன் இன் தி லோக் சபா” எனும் இப்புத்தகம் அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ளது. இப்புத்தகத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் முன்னுரை எழுதியுள்ளாா்.

ரஷீத் கித்வாய் கூறுகையில், ‘நாட்டில் 1951-1952இல் முதல் நாடாளுமன்றத் தோ்தல் நடந்ததில் இருந்து இதுவரை தோ்வான மொத்த முஸ்லிம் பெண் உறுப்பினர்கள் 20 போ். இவா்களில் சுபாஷிணி அலி, அஃபிரின் அலி ஆகியோா் தாங்கள் இஸ்லாத்தை பின்பற்றவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டனா்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த 18 முஸ்லிம் பெண்களின் சுய விவரங்களை ஆவணப்படுத்தி யுள்ளோம்.

146 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை 7.1 சதவீதமாக கருதப்படுகிறது. இதுவரை அமையப் பெற்ற 18 மக்களவைகளில் வெறும் 18 போ்தான் முஸ்லிம் பெண்கள் என்பது அதிா்ச்சிகரமான உண்மை.

543 உறுப்பினா்களைக் கொண்ட மக்களவையின் ஒரு பதவிக் காலத்தில் அதிகபட்சமாக 4 பேருக்கு மேல் முஸ்லிம் பெண்கள் இடம்பெற்றதில்லை. இதுவரை 7 மக்களவைகளில் முஸ்லிம் பெண் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமே இருந்ததில்லை’ என்றாா்.

18 பெண் உறுப்பினர்கள்

மோஃபிதா அகமத் (காங்கிரஸ், 1957), ஜோராபென் அக்பா்பாய் சாவ்தா (காங்கிரஸ், 1962-1967), மைமூனா சுல்தான் (காங்கிரஸ், 1957-1967), பேகம் அக்பா் ஜெஹான் அப்துல்லா (தேசிய மாநாட்டுக் கட்சி, 1977-1979, 1984-1989), ரஷீதா ஹக் (காங்கிரஸ், 1977-1979), மோஹ்சினா கித்வாய் (காங்கிரஸ், 1977-1989), பேகம் ஆபிதா அகமது (காங்கிரஸ், 1981-89), நூா் பானு (காங்கிரஸ், 1996, 1999-2004), ருபாப் சயீதா (சமாஜவாதி, 2004-2009), மெஹபூபா முஃப்தி (மக்கள் ஜனநாயக கட்சி, 2004-09, 2014-19), தபசும் ஹசன் (பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய லோக் தளம், சமாஜவாதி 2009-14, 2018-19), மெளசம் நூா் (திரிணமூல் காங்கிரஸ் 2009-19), கெய்சா் ஜஹான் (பகுஜன் சமாஜ், 2009-14), மம்தாஜ் சங்கமிதா (திரிணமூல் காங்கிரஸ் 2014-19), ராணி நாராஹ் (காங்கிரஸ், 1998-2004, 2009-14), நஸ்ரத் ஜஹான் ருஹி (திரிணமூல் காங்கிரஸ் 2019-24), இக்ரா ஹசன் (சமாஜவாதி, 2024 முதல் தற்போது வரை), சஜிதா அகமது (திரிணமூல் காங்கிரஸ், 2018 முதல் தற்போது வரை).

முஸ்லிம் பெண் உறுப்பினர்களில் செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவா் மோஹ்சினா கித்வாய். இவா், மத்திய அமைச்சா் பதவியையும் வகித்துள்ளாா். பேகம் ஆபிதா அகமது, நாட்டின் 5-ஆவது குடியரசுத் தலைவா் ஃபக்ருதீன் அலி அகமதின் மனைவி ஆவாா்.

‘தென் மாநிலங்களில் இருந்து ஒருவா் கூட தோ்வாகவில்லை’

தமிழ்நாடு, கேரளம், கருநாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 5 தென் மாநிலங்களும் பெண் களுக்கான அரசியல் பிரதி நிதித்துவம், எழுத்தறிவு, சமூக-பொருளாதார நிலைகளில் சிறப்பான குறியீடுகளைக் கொண்டிருந்தாலும், இம்மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர் கூட தோ்வாக வில்லை என்று புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேசமயம் மாநிலங்களவைக்கு திமுகவால் அண்மையில் கவிஞர் சல்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *