மதுரை, ஜூலை 22- தமிழ்நாட்டில் ‘பூத்’ அளவிலான கிளை அமைப்புகளைச் சீரமைக்க, களமிறங்கிய பா.ஜ., ஆய்வுக் குழுவினர், பிற கட்சியினர் அதிலிருப்பது தெரிந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனராம்.தமிழ்நாட்டில் தாமரையை மலரச் செய்தே ஆக வேண்டும் என பா.ஜ., தலைமை சபதம் எடுத்திருக்கிறதாம். மேலும், 2026 தேர்தலில் அமைச்சரவையில் இடம், இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் என்ற எண்ணத்தில் உள்ளனர்.
இதற்காக, கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள், மேனாள் நிர்வாகிகள் அடங்கிய குழுக்களை அனுப்பி, பூத் அளவிலான கிளை அமைப்புகளில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
பா.ஜ., கிளை அமைப்புகளை பொறுத்தவரை, தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட 12 பேர் உள்ளனர். இந்த அமைப்புகள், கட்சியின் மாவட்ட, மண்டல நிர்வாகத்தால் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டு, செயல்படுகிறது என்பதை முதற்கட்டமாக, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட, 18 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கிளைகளில் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளனவாம்.
கிளை அமைப்புகளில் பெரும்பாலானவை, உண்மையானவை இல்லை; அவர்களுக்கும் மண்டல, மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கும் தொடர்பே இல்லாதது தெரிய வந்தது. கிளை அமைப்புகளின் உறுப் பினர்களை, செல்போனில் அழைத்தால், ‘நான் வேறு கட்சியைச் சேர்ந்தவன், என்னை எப்படி பா.ஜ.,வில் சேர்த்தீர்கள்’ என பதிலளித்து அதிர்ச்சி அடையச் செய்துள்ளனர்.
‘உண்மையான’ உறுப்பினர்களும் அதிருப்தியுடனேயே உள்ளனராம். காரணம், “பா.ஜ.,வின் மண்டல, மாவட்ட, ஒன்றிய அளவிலான தலைவர்களில் பலரும் கல்வி நிறுவனம் நடத்துவோராகவும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.
அவர்கள், கிளையில் ஏதேனும் நிகழ்வில் பங்கேற்று விட்டு, அதன்பிறகு, கிளை அமைப்பினருடன் எவ்விதத் தொடர்பும் இன்றி உள்ளனர். தி.மு.க.,
– அ.தி.மு.க., போன்ற கட்சிகளில், நல்லது, கெட்டதுக்கு உடனே தொடர்பு கொண்டு விசாரிப்பது, நிதியுதவி அளிப்பது போல, பா.ஜ.,வில் எந்த இணக்கமும் இல்லை.
“கடந்த தேர்தல்களின்போது கூட, கட்சி அளித்த நிதி, இந்த கிளை அமைப்புகளுக்கு போய்ச் சேரவில்லை” என்று கூறியுள்ளனர் அக்கட்சியின் தொண்டர்கள். இதுபோன்ற தகவல்களால் ஆய்வுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.
மிஸ்டு காலில் கட்சி உறுப்பினர்களைச் சேர்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் கட்சி உறுப்பினர் பட்டியலில் சேர்த்தவர்களாயிற்றே! பொறுப்பாளர்கள் மட்டும் புதிதாக எங்கிருந்து வருவார்கள்? இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் முதல்
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கு முகாம்
சென்னை, ஜூலை 22- மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்கள் நவம்பர் மாதத்துக்கு பிறகு தொடங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். வடசென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவர் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 2024ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் பிரதி மாதம் ஒவ்வொரு வார வியாழக்கிழமையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம, நகர்ப்புற மக்களின் இருப்பிடம் நோக்கி அரசு திட்டங்கள் சென்றடைய ஏதுவாக 10 ஆயிரம் முகாம்கள் ஜூலை முதல் அக்டோபர் வரை நடைபெற உள்ளன. சென்னையில் 400 முகாம்கள் நடைபெறும்.
மண்டல வாரியாக முகாம்
இந்த முகாம்கள் மண்டல வாரியாக நடைபெறும் என்பதால் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவர் சான்றுடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மற்றும் மக்களுடன் முதலமைச்சர் முகாம்கள் வரும் நவம்பர் மாதத்துக்கு பிறகு பிரதி வாரம் வியாழக்கிழமை முதல் தொடர்ந்து நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.
கல்வித் துறையின் கவனத்துக்கு!
நம்பியூர் அரசுப் பள்ளியில் மதப் பஜனையா?
தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் மீது குற்றச்சாட்டு!
நம்பியூர், ஜூலை 22- ஈரோடு மாவட்டம் நம்பியூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் பள்ளி மாணவர்களை சட்டவிரோதமாக “ராம்பஜன்” பாடல்களைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், இது மாணவர்களிடையே மதவெறியைத் தூண்டும் செயல் என்றும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.
மதரீதியாகத் திசைதிருப்புதல்
பள்ளி நிர்வாகத்தின் இந்தச் செயல் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிரானது என்றும், மாணவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் முயற்சி என்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ், இந்துத்துவ சித்தாந்தங்களை (சங்கித்தனம்) பள்ளி வளாகத்திற்குள் பரப்புவதன் மூலம், மாணவர்களை மத ரீதியாகத் திசை திருப்புவதாகப் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு, தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வலுத்ததையடுத்து, அவரைப் பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.