ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில்
ஜாதிப் பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
சென்னை, ஜூலை 22- ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சகம் விரிவான பதிலளித்துள்ளது. மக்களவையில் திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இதுகுறித்துக் கேள்வியெழுப்பியிருந்தார்.
கனிமொழி எம்.பி.யின் கேள்விகள்
உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், UGC விதிமுறைகள் 2012இன்படி ஒன்றிய அரசின் கீழ் வரும் ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக் கழகங்களில் சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளதா? ஒன்றிய அரசின் கல்லூரி, பல்கலைக்கழக வளாகங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்பட்ட சம்பவங்கள் குறித்த தரவுகளை அரசு பராமரிக்கிறதா? போன்ற கேள்விகளை கனிமொழி எழுப்பியிருந்தார்.
ஒன்றிய கல்வி
அமைச்சகத்தின் பதில்
இந்தக் கேள்விகளுக்கு மக்களவையில் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இணையமைச்சரான டாக்டர் சுகந்தா மஜும்தார் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அவரது பதிலின் முக்கிய அம்சங்கள்:
ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள 48 ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களிடையே சமத்துவத்தை உறுதிப்படுத்தும் சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட சட்டபூர்வ தன்னாட்சி அமைப்புகளாகும். மேலும் அவை அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கென உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
ஒன்றிய கல்வி அமைச்சகமும்,
UGC-யும் உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட் டைத் தடுக்கவும், பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.
ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் பாரபட்சம், பாகுபாடு உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி, வலைதளங்கள் அல்லது புகார் பதிவேடுகள் மூலம் புகார்களைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் நிறுவப்பட்டுள்ளன.
SC, ST, OBC மாணவர்கள், ஆசிரி யர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களிடமிருந்து பெறப்படும் பாகுபாடு குறித்த புகார்களின் அடிப்படையில், தவறு செய்யும் நபர்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர் குறைதீர்க்கும் குழுக்களை (SGRC) அமைத்தல், குறைதீர்ப்பு அதிகாரிகளை நியமித்தல், சம வாய்ப்புக் குழுக்களை நிறுவுதல், மாணவர்களுக்கு கவுன்சிலிங் மய்யங்கள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை.
மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சமத்துவமான சூழலை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றார்.