மதுரை, ஜூலை 22- மதுரை காமராஜர் சாலையில் நடைபெற்ற தொல்லியல் கழகத்தின் 33ஆவது ஆண்டுக் கருத்தரங்கம், 35ஆவது ஆவணம் இதழ் மற்றும் கல்வெட்டு அறிஞர் ராசகோபால் பவளவிழா மலர் திசையாயிரம் நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
“ஒரு காலத்தில் நிதிநிலை அறிக்கையில் துண்டு விழுந்தால், உடனே கைவைக்கும் துறையாக தொல்லியல் துறை இருந்தது. ஆனால், தற்போது நான் நிதி அமைச்சராகவும், தொல்லியல் அமைச்சராகவும் இருப்பதால், இத்துறையில் நிதி ஒதுக்கீட்டை ஒருபோதும் குறைக்காத நிதி அமைச்சராக இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். நேரத்தை வேண்டுமானால் குறைப்பேனே தவிர, நிதியை குறைக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாகக் கூறினார்.
மறுமலர்ச்சி
கடந்த நான்கு ஆண்டுகளில் தொல்லியல் துறையில் மாபெரும் மறுமலர்ச்சி உருவாகியுள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், இது அரசின் அகழாய்வு மற்றும் அருங்காட்சியக முயற்சிகளால் மட்டும் அல்லாமல், இளைய சமுதாயத்திடம் தொல்லியல் மீதான ஆர்வம் அதிகரித்ததாலும், புதிய கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தும் முயற்சி அதிகரித்ததாலும் ஏற்பட்டது என்றார்.
அகழாய்வுக்காக ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கி வந்த நிலையில், தற்போது 7 கோடி ரூபாய் ஒதுக்க முயற்சி எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், அகழாய்வுக்கு இணையாக கல்வெட்டுகள், அருங்காட்சியகங்கள், நாணயங்கள் ஆகிய துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், பல்வேறு கல்வெட்டுகளை ஆவணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
30 கோடி ரூபாய் செலவில் தேசிய கருத்தரங்குகள்
தமிழ்நாட்டில் கல்வெட்டுகளைக் கண்டுபிடிப்பதில் அடைந்துள்ள வளர்ச்சியை அனைவருக்கும் தெரியும் வகையில் 30 கோடி ரூபாய் செலவில் தேசிய கருத்தரங்குகள் விரைவில் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்தார். மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளான பானை ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், மடைகள், கண்மாய்கள் போன்றவற்றை கண்டறிந்து ஆவணப்படுத்துவதை அரசு ஊக்கப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அருங்காட்சியகம்
உலகத் தமிழ் சங்கத்தில் கல்வெட்டுகளுக்கென ஒரு தனி அருங்காட்சியகம் அமைக்கப் படும் என்றும், அதில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, கல்வெட்டு எழுத்துக்கள் காலப் போக்கில் எப்படி மாறி இருக்கின்றன என்பதை விளக்கும் சிறப்பான அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அகழாய்வுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பிற தொல்லியல் துறைகளுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.