தூத்துக்குடி, ஜூலை 21- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் சார்பில் பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
19.7.2025 அன்று மாலை 6 மணியளவில் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ் தலைமையுரையுடன் கருத்தரங்க நிகழ்ச்சி தொடங்கியது.
கல்வி வளர்ச்சியில் காமராசரின் பங்கு
திருவை ஒன்றிய கழகத் தலைவர் சு.திருமலைக்குமரேசன் அனைவரையும் வரவேற்றார். முன்னிலை ஏற்றோர் சார்பாகத் தி.மு.க. இலக்கிய அணி அமைப்பாளர் மோ.அன்பழகன் காமராசருக்கும் அண்ணா, கலைஞருக்குமான அரசியல் உறவை எடுத்துரைத்தார். அடுத்து, பகுத்தறிவாளர் கழகத் தோழர் சீ.மனோகரன், ‘கல்வி வளர்ச்சியில் காமராசரின் பங்கு’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றினார்.
படிப்புக்குத் தடை
நீதிக்கட்சிக் காலத்தில் பார்ப்பனரல்லாத மாணவர்கள் படிக்க ஏற்பட்ட தடைகள் உடைக்கப்பட்ட செய்திகள், இடஒதுக்கீடு அளித்தவரே இந்தித் திணிப்புக்கு ஆதரவு தந்து பெரியாரால் கண்டிப் புக்குள்ளான முத்தையா முதலியாரின் நடவடிக்கை, அய்யாவால் அரியணை ஏற்றப்பட்டு அரும்பணியாற்றிய காமராசர், மூடிய பள்ளிகளைத் திறந்த செய்திகள், பள்ளிகள் ஏன் முடியிருந்தது? என்ற அரசியல் விமர்சனங்கள் பற்றிய செயதிகள் ‘படிப்புக்கு தடை பசி’ என அறிந்து மதிய உணவுக்காக காமராசர் செய்த ஏற்பாடு என ஒரு விளக்கமான பட்டியலிட்டுக் கருத்துரையாற்றினார்.
இறுதியாக காமராசரும் அரசியல் போக்கும் என்ற தலைப்பில் மாவட்டக் கழக காப்பாளர், கழக பேச்சாளர் மா.பால்ராசேந்திரம் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், இளைஞராய் வைக்கம் சென்று ஜாதி ஒழிப்புப் போரில் கலந்து கொண்டது, 1940இல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராய் வருவதற்கு முதலில் ஆதரவு காட்டிப் பின், பின் வாங்கிய பார்ப்பன சூழ்ச்சி, 1941இல் ஆங்கில அரசின் வரிவிதிப்பை எதிர்த்துச் சிறை சென்ற செய்தியும், நகராட்சித் தலைவர் பொறுப்பை விடுத்த செய்திகள், 1955இல் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தந்தை பெரியரின் தேசியக் கொடி எரிப்புப் போரினை பிரதமர் நேருவின் உறுதிமொழி பெற்று ஒத்தி வைக்கச் செய்த வரலாறு.
குலக்கல்வித் திட்டத்தை…
1953இல் இராசாசியின் குலக்கல்வித் திட்டத்தை அய்யாவின் ஆதரவோடு எதிர்த்து, பார்ப்பனரின் சூழ்ச்சியையும் வென்று முதலமைச்சரான செய்திகள், சட்டமன்றத்தில் தமிழோடு ஆங்கிலமும் பள்ளிப் படிப்போடு இருந்து ஆக வேண்டுமெனக் கண்டிப்புடன் பேசி இந்தித் திணிப்புக்கு விடை கண்டு, அண்ணாவால் பெருமையாகக் கருதப்பட்ட செய்திகள், தந்தை பெரியார் ரங்கூன் செல்ல இருந்த பயணத் தடைகளைத் தகர்த்து, அய்யா தடைகளை அறியாது பயணிக்க வழி ஏற்படுத்திய செய்திகள், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இருந்த இடையூறுகளை அகற்றி, ஏழை வீட்டு மாணவர்கள் மருத்துவர்களாக அரசியல் செய்த செய்திகள், தேர்தல் தோல்வி கண்டு துவளாது, காரணம் கண்டு, அடுத்து வெற்றிபெற வழிகாண்போமெனத் தொண் டர்களுக்கு அறிவுரை கூறிய செய்திகள். 1971 சட்டமன்றத் தேர்தலில் தான் செய்த மிகப் பெரிய தவறாக, இராசாசியுடன் கூட்டணி சேர்ந்ததே தன் தோல்விக்குக் காரணமென மூப்பனாரிடம் நொந்து கொண்டது என, காமராசரின் அரசியல் நடவடிக்கைகளில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைப் பட்டியலிட்டு சிறப்புரையாற்றினார்.
மாவட்ட வழக்குரைஞரணிச் செயலாளர் இ..திரவியம் நன்றி கூற நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் கி.கோபால்சாமி, இரா.ஆழ்வார், கோ.இளமுருகு, சேமா.சந்தனராஜ் பாண்டியன், தாஸ், மாரிமுத்து, பொ.போஸ் மற்றும் பல தோழர்கள் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டனர்.