சென்னை, ஜூலை. 21- எதைப் பற்றி வேண்டுமானாலும் புலன் விசாரணை செய்ய அமலாக்கத்துறை ஒன்றும் ‘சூப்பர் போலீஸ்’ இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
நில ஒதுக்கீடு ரத்து
சத்தீஷ்கார் மாநிலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை சென்னையைச் சேர்ந்த ஆர். கே.எம்.பவர்ஜென் என்ற நிறுவனம் பெற்றது. இந்த நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்து இருந்தது. இது தொடர் பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த ஒதுக் கீட்டை ரத்து செய்தது. சி.பி.அய். விசாரணைக்கும் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டங்களாக நகர்ந்து வந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கின் அடிப்படையில் ஆர். கே.எம்.பவர் ஜென் கம்பெனியின் வங்கிக்கணக்கை முடக்கம் செய்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.குமார், எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து அமலாக்கத்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஒரு குற்றம் நடந்தால் அது குறித்து காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு தனிநபர்கள் கொண்டு வரலாம். ஆனால், இந்த வழக்கில் புகார்கள் எதுவும் இல்லை. நிலக்கரி எடுக்கும் பணியும் நடைபெறவில்லை.
சூப்பர் போலீஸ் இல்லை
அப்படி இருக்கும்போது, எதைப் பற்றி வேண்டுமானாலும் விசாரிக்க அமலாக்கத்துறை ஒன்றும் ‘சூப்பர் போலீஸ்’ இல்லை. கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த ‘டிரோன்’ என்ற கருவியும் இல்லை. ஒரு குற்றச்செயல் நடந்திருந்தால் மட்டுமே அதுகுறித்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க முடியும். குற்றமே நடக்காதபோது, அமலாக்கத்துறையினரால் இது போல நடவடிக்கை எடுக்க முடியாது.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இழப்பீடு
மேலும், அமலாக்கத்துறை அதி காரிகளின் இந்த நடவடிக்கையினால், தங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து மனுதாரர் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், அமலாக்கத்துறைக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.