மும்பை, ஜூலை.21- மராட்டியத்தில் துணை முதலமைச்சர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மாணிக்ராவ் கோகடே. இவர் மாநில வேளாண்துறை அமைச்சராக உள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அலைபேசியில் ‘கேம்’ விளையாடும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ரோகித் பவார் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், ‘ஆளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியால் பா.ஜனதாவை கலந்து ஆலோசிக்காமல் செயல்பட முடியவில்லை. அன்றாடம் 8 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் வேளாண்துறை அமைச்சர் வேலையில்லாமல் ஆன்லைன் ரம்மி விளையாடி கொண்டு இருக்கிறார்’ என்று பதிவிட்டுள்ளார்.
சரத்பவார் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடிய மாணிக்ராவ் கோகடே பதவி விலகவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதேபோல் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா கட்சியும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால் சட்டமன்ற கூட்டத்தின் போது ரம்மி விளையாடவில்லை. பேரவை ஒத்திவைக்கப்பட்டபோது சட்டமன்ற நடவடிக்கைகளை பார்க்க யூடியூப்பை திறக்க முயற்சித்தேன். அந்த சமயத்தில் ரம்மி விளையாட்டு திடீரென வந்ததாக அமைச்சர் மாணிக் ராவ் கோகடே கூறியுள்ளார்.