சண்டிகர், ஜூலை 20 பஞ்சா மாநிலம் ஹரர் தொகுதி ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர் அன்மொல் கஹன் மான் (வயது 35). பாடகியான இவர் 2020ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். 2022ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அன்மொல் சுற்றுலா, கலாசாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தார். ஆனால், 2024ம் ஆண்டு அன்மொல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அன்மொல் கஹன் மான் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நேற்று பதவி விலகினார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலை விட்டு விலகுவதாகவும் அன்மொல் அறிவித்துள்ளார்.
அரசியலை விட்டு விலகுவதற்கான காரணம் குறித்து அன்மொல் தெரிவிக்கவில்லை. அதேவேளை, பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான அரசில் அங்கீகாரம் இல்லாததால் அன்மொல் அரசியலை விட்டே விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மராட்டிய பிஜேபி அரசின் இஸ்லாமிய மத வெறுப்பு
‘இஸ்லாம்’ என்று தொடங்கும் ஊர் பெயர் மாற்றம்
மும்பை, ஜூலை 20 சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ‘இஸ்லாம்பூர்’ ஊரின் பெயரை ‘ஈஸ்வர்பூர்’ என மாற்றவேண்டும் என இந்துத்வா அமைப்பான சிவ் பிரதிஸ்தான் வலியுறுத்தி வந்தது. மேலும் இது தொடர்பாக சாங்கிலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிவ் பிரதிஸ்தான் தலைவர் சம்பாஜி பிடே, கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை ஓயமாட்டேன் என்று கூறி இருந்தார்.
இந்தநிலையில் ‘இஸ்லாம்பூரின்’ பெயரை ‘ஈஸ்வர்பூர்’ என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக மராட்டிய அரசு நேற்று அறிவித்தது. மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து சட்டமன்றத்தில் உணவு மற்றும் வினியோகத்துறை அமைச்சர் சகன் புஜ்பால் கூறியதாவது;-
‘‘அமைச்சரவைக் கூட்டத்தில் பெயர் மாற்றம் குறித்த முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை முடிவை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக மாநில அரசு அனுப்பும். இந்த பெயர் மாற்றம் தொடர்பாக இஸ்லாம்பூரை சேர்ந்த சிவசேனா தலைவர் ஒருவர் விடுத்த கோரிக்கை 1986-ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்தது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்