கரக்பூர், ஜூலை 20- மேற்கு வங்க மாநிலம் அய்அய்டி கரக்பூரில் பி.டெக். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 4ஆம் ஆண்டு படித்து வந்த ரிதம் மொண்டல் (வயது 21) என்ற மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இது நான்காவது தற்கொலை சம்பவம் ஆகும்.
தூக்கிட்டுத் தற்கொலை
கொல்கத்தாவைச் சேர்ந்த ரிதம் மொண்டல், விடுதியில் உள்ள ராஜேந்திர பிரசாத் ஹாலில் அமைந்துள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றிரவு உணவை முடித்துக் கொண்டு, தனது அறைக்குச் சென்றபோது அவரது நடத்தையில் எந்த அசாதாரணமும் தெரியவில்லை என விடுதியில் அவருடன் தங்கியுள்ள மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அய்அய்டி கரக்பூர் அதிகாரி ஒருவர் இது தொடர்பாகக் கூறுகையில், “அவர் தங்கியிருந்த அறையின் கதவை தட்டினோம். ஆனால் திறக்கப்படவில்லை. இதனால் வளாகத்திற்கு வெளியில் உள்ள வெளிமய்ய காவலர்களை அழைத்து வந்து, விடுதி காவலர் களுடன் கதவை உடைத்து உள்ளே சென்றோம். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடரும் தற்கொலை சம்பவங்கள்
ஜனவரி 12: 3ஆம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர் ஷான் மாலிக் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
ஏப்ரல் 20: ஓசேன் இன்ஜினியரிங் பிரிவில் கடைசி ஆண்டு படித்து வந்த அனிகெட் வால்கர் தற்கொலை செய்து கொண்டார்.
மே 4: பிடெக் 3ஆம் ஆண்டு மாணவர் ஆசிப் கமர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது தொடர்பாக கவுன்சிலிங் பெற ஒவ்வொரு விடுதி அறையிலும் பார் கோடுகள் (Bar Codes) அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு எந்த நேரம் ஆலோசனை தேவை என்றாலும் அதை பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், தொடர் தற்கொலைகள் நடந்து வருவது அய்அய்டி நிர்வாகத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.