திருச்சூர், ஜூலை 20- கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த பக்தர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சில தனிநபர்களும் நிறுவனங்களும் மோசடிகளில் ஈடுபடுவதாகக் குருவாயூர் தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.
பக்தர்களுக்கு எச்சரிக்கை
அண்மையில் ஒரு பக்தர், வாட்ஸ்அப் மூலம் வந்த தகவலை நம்பி தரிசனம் ஏற்பாடு செய்வதற்காகப் பணம் செலுத்தி ஏமாற்றப்பட்டதாகப் புகார் அளித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதைத் தொடர்ந்து, குருவாயூர் தேவஸ்தானம் பக்தர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. குருவாயூர் தேவஸ்தானத் தலைவர் வி.கே.விஜயன், கோவிலின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்த காட்சிப் பதிவில், “தரிசன ஏற்பாடுகளுக்கோ அல்லது காணிக்கை வசூலிப்பதற்கோ எந்த தனியார் நிறுவனத்திற்கோ, தனிநபருக்கோ தேவஸ்தானம் அங்கீகாரம் வழங்கவில்லை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், “பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் போலி தகவல்களை நம்பி பக்தர்கள் ஏமாற வேண்டாம்,” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள் ளார்.
இதுபோன்று யாராவது உங்களைத் தொடர்பு கொண்டால், உடனடியாகக் கோவில் அதிகாரிகளிடம் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.