இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மூன்றாவது பணிமனை அமைக்க 30 ஏக்கரில் நிலம் தேர்வு

2 Min Read

சென்னை, ஜூலை 20- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3ஆவது பணிமனை அமைக்க சோழிங்கநல்லுார் – சிறுசேரி இடையே 30 ஏக்கரில் நிலம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தொலைவுக்கு பாதைகள் அமைக்கும் பணி நடைபெறுகின்றன. இப்பணிகள் அனைத்தும் வரும் 2028இல் முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்கள் உட்பட மொத்தம் 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களை நிறுத்தி பராமரிக்க மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதுபோல, 3ஆவது பணிமனை சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடைேய 30 ஏக்கரில் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில்களை பராமரித்து இயக்கும் வகையில், 3 இடங்களில் பணிமனை அமைக்க உள்ளோம். மாதவரத்தில் 48.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.284.51 கோடியிலும், பூந்தமல்லியில் 38 ஏக்கர் பரப்பளவில் ரூ.187.5 கோடி மதிப்பிலும் பணிமனைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரு பணிமனைகளில் சராசரியாக, 60 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. சோழிங்க நல்லுார் – சிறுசேரி இடையே 3ஆவது பணிமனை என்பது அவசியமாகும்.

ஏற்கெனவே, சிறுசேரியில் நிலம் கையகப்படுத்த திட்டமிட்டோம். ஆனால், அங்கு ஒரே இடத்தில் போதிய நிலம் கிடைக்கவில்லை. எனவே, செம்மஞ்சேரி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 25 முதல் 30 ஏக்கர் நிலம் தேர்வு செய்ய இருக்கிறோம். இதற்கான பணிகளை தொடங்கி உள்ளோம். அடுத்த 2 வாரங்களில் இடங்களை தேர்வு செய்து, தமிழ்நாடு அரசு வாயிலாக கையகப்படுத்த இருக்கிறோம். 3ஆவது பணிமனை அமைத்தால், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மெட்ரோ ரயில்களை சீராக இயக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *