நமது விமானங்களுக்கு என்ன ஆயிற்று? உண்மையைக் கூறுங்கள்! மோடி-டிரம்ப் காணொலியைப் பகிர்ந்து ராகுல் கேள்வி!

viduthalai
2 Min Read

புதுடெல்லி, ஜூலை 20- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம் களை தாக்கி எதிர்த்தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் இந்தியாவிற்கு எதுவும் சேதம் இல்லை என்று கூறிய நிலையில் இந்தியா 5 போர் விமானங்களை இழந்தது என்று டிரம்ப் முதல் முறையாக கூறியுள்ளார்.

இது தொடர்பான காணொலியைப் பகிர்ந்த ராகுகாந்தி விமானங்களை இழந்தவிவகாரத்தில் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையைக் கூறவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்ப்பின் தொடர் உரிமை கோரல்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட சண்டை மூன்று நாள்களுக்கு மேலாக நீடித்த நிலையில், பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முயற்சியால்தான் இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தப்பட்டது என தெரிவித்தார். ஆனால், இந்த சண்டை நிறுத்தத்தில் எந்த மூன்றாவது நாட்டின் தலையீடும் இல்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்து வந்தது.

தற்போது மீண்டும் ஒருமுறை, இந்தியா- பாகிஸ்தான் சண்டையைத் தானே நிறுத்தியதாக டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “நாங்கள் (அமெரிக்கா) ஏராளமான போரை நிறுத்தியுள்ளோம்.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை மிகவும் தீவிரமாக சென்று கொண்டிருந்தது. அங்கு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உண்மையிலேயே 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நான் நினைக்கிறேன். இரண்டும் தீவிர அணுசக்தி நாடுகள். இருவரும் மாறிமாறி தாக்கிக் கொண்டனர். நாங்கள் வர்த்தகம் மூலம் அதைத் தடுத்து நிறுத்தினோம்.

நீங்கள் எங்களோடு ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறீர்கள் என்று நாங்கள் தெரிவித்தோம். மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான நீங்கள் ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், ஒருவேளை அணு ஆயுதங்களை வீசப் போகிறீர்கள் என்றால், நாங்கள் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று கூறினோம்” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரசின் கேள்வி

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதை முதலில் இந்தியா மறுத்தாலும், பின்னர் இந்திய ராணுவ அதிகாரி ஒரு இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒப்புக்கொண்டார். ஆனால் 5 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இந்நிலையில், டிரம்ப் 24ஆவது முறையாக சண்டை நிறுத்தம் செய்ததாகக் கூறியிருப்பது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டிரம்ப்பின் காட்சிப் பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “மோடிஜி, 5 விமானங்கள் பற்றிய உண்மை என்ன? நாட்டிற்குத் தெரிந்துகொள்ள உரிமை உண்டு!” என்று பதிவிட்டுள்ளார்.

வரும் ஜூலை 21ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *