டேராடூன், ஜூலை 20- உத்தராகண்டில் அரசு ஊழியர்கள் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் எந்த பொருள் வாங்கினாலும் உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
உத்தராகண்ட்டில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில் தான், அம்மாநில அரசு ஊழியர்களின் கோபத்தை சம்பாதித்துள்ளது. இதற்கு கடந்த 14ஆம் தேதி உத்தராகண்ட் அரசு போட்ட உத்தரவு தான் காரணம்.
அதாவது அரசு ஊழியர்கள் அதிகளவில் சொத்து வாங்கி குவிப்பதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. மேலும் அதுதொடர்பான அரசாணையும் வெளியிட்டுள்ளது. இதுதான் அரசு ஊழியர்களின் கோபத்துக்கு முக்கிய காரணமாகும்.
உத்தராகண்ட் அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
“எந்த அரசு ஊழியர்களாக இருந்தாலும் கூட தங்களின் ஒரு மாத ஊதியம் அல்லது ரூ. 5,000-அய் விட அதிகமான மதிப்புள்ள எந்தவொரு அசையும் சொத்தையும் விற்பனை செய்தாலோ அல்லது சொத்து, பொருட்களை வாங்கினாலோ, அல்லது வேறு வழியில் பணப்பரிவர்த்தனை செய்தாலோ அதுபற்றி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அசையா சொத்துகளை கொடையாக கொடுத்தாலும் அரசிடம் தெரிவிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தான் அம்மாநில அரசு ஊழியர்களை கோபப்படுத்தி உள்ளது.
85 சதவீத பணிகள் நிறைவு
வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை
நவம்பர் முதல் இயக்கப்படும்
சென்னை, ஜூலை 20- சென்னையில் பறக்கும் ரயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984ஆம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995ஆம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
2ஆம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998ஆம் ஆண்டு தொடங்கி, 2004ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும், 2ஆம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008ஆம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு நீதிமன்றம் மூலம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்கும்.
அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனர்.
பள்ளி மாணவர்களின் வளர்ச்சி…
ஜூலை 25இல் முதல் ஆலோசனை!
மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்கள் குறித்து ஆலோசிக்கும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டின் முதல் கூட்டத்தை ஜூலை 25இல் நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதில், மாணவர்களின் இடைநிற்றல், திறன் இயக்க பயிற்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.