(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
கருப்பு – கண்களை உறுத்துகிறதோ!
கேள்வி: உங்கள் வாழ்க்கையில் ‘இந்த முடிவுதான் என்னைக் காப்பாற்றியது என்று நான் கூறவே முடியாது, ஏன்?
பதில்: என் வாழ்க்கையில் எந்தப் பெரிய முடிவை யும் நான் எடுக்கவில்லை. வாழ்க்கையின் எல்லா முக்கிய திருப்பங்களிலும் காஞ்சி மஹான் காட்டிய வழியில் சென்றேன். அதைக்கூட நான் முடிவெடுத்து செய்தேன் என்பதைவிட, நான் அறியாமல் நடந்தது என்பதே உண்மை. அவன் அருளாலே, அவன்தாள் பணிந்து என்பதுதான், வாழ்க்கை எனக்கு உணர்த்திய பாடம். சில சமயங்களில் அஹங்காரத்தால், எதை என் சாதனை என்று நினைத்தேனோ, அதுவும் அதுவாக நடந்ததுதான் என்பது, முதிர்ச்சி வரவர எனக்கு விளங்கத் தொடங்கியது.’
– ‘துக்ளக்’கில் திருவாளர் எஸ்.குருமூர்த்தி
அப்படியா? சாதனை என்பது வெறும் அற்பம் தானா? சாதனைகளுக்காக விருதுகள் வழங்குவது கூட அஹங்காரத்தால் அப்படி நடப்பது தானா?
காந்தியார் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்ன ணியில் ஆர்.எஸ்.எஸ். இருந்தது என்பதற்காக
ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட நிலையில், அந்தத் தடையை நீக்க வேண்டும் என்று வக்கீல் டி.ஆர்.வி. சரஸ்வதியை நேருவிடம் அனுப்பி தடையை நீக்கி உதவி செய்தவர் காஞ்சி சங்கராச்சாரியார் என்று இதே திருவாளர் எஸ்.குருமூர்த்தி எழுதினாரே (‘துக்ளக்’, 12.5.2021 பக். 15) – அது எந்த வகையைச் சேர்ந்தது? இது காஞ்சி மஹான் சாதனை என்று சொல்லலாமா?
இந்த மஹான் காட்டிய பாதையில்தான் திருவாளர் குருமூர்த்தி அய்யர் செல்கிறார் என்றால், அது எந்த யோக்கியதையில் இருக்கும் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம் அல்லவா?
சங்கரமடத்துக்கும் குருமூர்த்திக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தம் குறித்து ‘நக்கீரன்’ இதழ் (3.6.2023) கிழி கிழி என்று கிழித்ததே – குருமூர்த்தி மூச்சுவிட வில்லையே? ஏன்? ஏன்?
கருப்பு நிற ஆடைகள்
– அச்சுறுத்துகிறது அவாளை
ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதம் “கருப்பு நிறஆடைகள் பயன்படுத்துவதை தவிர்ப்போம்!” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைத் தீட்டியுள்ளது.
இன்று நம்நாட்டில் உள்ள இளந்தலைமுறையினர் அதிகமாக சுருப்பு வர்ணத்தை பயன்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மிக அதிகமாக கருப்பு நிறத்தை பயன்படுத்துவதை பார்க்கிறோம்.
இது எப்படி உருவானது? திட்டமிட்ட ரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இதனை திரைப்படங்கள் மூலமாக திணித்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் இப்படி கருப்பு நிற ஆடை அணிவது கட்டாயப்படுத் தப்பட்டது. மூடநம்பிக்கையை நீக்கப் போராடுவதாக கூறும் திராவிட கழகத்தினர் கூட இப்படி மூடத் தனமாக கருப்பு வர்ணத்தை பிடித்துக்கொண்டனர். ஏன்? இதற்குப் பதிலாக மஞ்சள், நீலம், பச்சை வர்ணத்தை பயன்படுத்தலாம் தானே!
மற்ற நிறங்களை பயன்படுத்தும் வரை ஈம்மிடம் இருந்த நல்ல தன்மைகள், நல்ல குணங்கள் சுருப்பு வர்ணத்தை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு மாறிவிட்டதை உணரலாம். பாரதத்தில் முஸ்லிம் ஆண்களோ, பெண்களோ வெண்மையான உடை அணிந்த வரை பிரச்சினை இல்லை. எப்போது கருப்பு நிறத்திற்கு மாற ஆரம்பித்தனரோ அன்றி லிருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது. கருப்பு வர்ணத்தை பயன்படுத்தும் முஸ்லீம்கள் கூட ஹஜ் பயணம் செய்து காபாவை வணங்கும் போது தூய வெண்மையான ஆடைகளையே அணிவதைப் பார்க்கிறோம்.
வரும் நாட்களில் சுருப்பு வர்ணத்தை பயன் படுத்துவதை ஆன்மிக, மங்கல நிகழ்ச்சிகளில் தவிர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக இதனை இளந்தலைமுறையினருக்கு புரிய வைத்து கருப்பு வர்ணத்தில் துணிகள், ஆடைகள் வாங்கு வதை நிறுத்த வேண்டும்.
என்று எழுதியுள்ளது ஆர்.எஸ்.எஸ். வார இதழ்.
கவனிக்க வேண்டும் “இன்று நம் நாட்டில் உள்ள இளந்தலைமுறையினர் அதிகமாக கருப்பு வர்ணத்தை பயன்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மிக அதிகமாக கருப்பு நிறத்தைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம்” என்று அங்கலாய்க்கிறது ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரதம்’.
புரிகிறதா? சங் பரிவார்களை, பார்ப்பனர்களை அதிகம் உறுத்துவது எது என்பது தெரிகிறதா?
கருப்பு உடை என்றவுடன் அவர்களுக்கு நினை விற்கு வருவது தந்தை பெரியார்! கருவேல் முள்ளாகக் குத்துவது கருஞ்சட்டைத் தோழர்களான திராவிடர் கழகத் தோழர்கள்.
திராவிடர் கழகத்தினர் மூடத்தனமாககருப்பு வர்ணத்தைப் பிடித்துக் கொண்டனர். ஏன், இதற்குப் பதிலாக மஞ்சள், நீலம், பச்சை வர்ணத்தை பயன்படுத் தலாம் தானே என்று நமக்கு அறிவுரை கூறுகிறது.
ஆம் கருப்பு – இழிவைக் குறிக்கிறது. ஆரியத்தின் வர்ணாசிரம சனாதனத்தால் இன்று வரை நாங்கள் சூத்திரர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். இந்தப் பிறவி இன இழிவை நினைவூட்டுவதற்கும், அதனை ஒழித்துக்கட்டும் வரை ஓயமாட்டோம் என்ற நினைப்பு நொடிதொறும், நொடிதொறும் நம் இதயத் துடிப்பாக இருக்க வேண்டும் என்று நினைவுட்டுவதற்குத்தான் இந்தச் கருப்புச் சட்டை.
இளைஞர்கள், மாணவர்கள் அதிகமாக கருப்புடை அணிவதைக் கண்டு நம் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
இன இழிவை ஒழித்துக்கட்ட புறப்பட்டது காண் இளைஞர் பட்டாளம் என்பதை எண்ணி எண்ணி இறும்பூதெய்துகிறோம். இந்தக் காட்சியைக் கண்டு ஆரியம் அலறுகிறது என்பதற்கு அடையாளம்தான் ஆர்.எஸ்.எஸ். இதழின் அலறலும் – ஆத்திரமும்!
இன்னொரு அற்புதமான புதியதோர் கண்டு பிடிப்பை செய்திருக்கிறது விஜயபாரதம்.
“மற்ற நிறங்களைப் பயன்படுத்தும் வரை நம்மிடம் இருந்த நல்ல தன்மைகள், நல்ல குணங்கள், கருப்பு நிறத்தைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு மாறி விட் டதை உணரலாம். பாரதத்தில் முஸ்லீம் ஆண்களோ, பெண்களோ வெண்மையான உடை அணிந்தவரை பிரச்சினை இல்லை. எப்போது கருப்பு நிறத்திற்கு மாற ஆரம்பித்தனரோ, அன்றிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பித்தது” என்று புலம்புகிறது பூணூல்களின் ஏடான விஜயபாரதம்.
அணியும் உடையின் நிறத்தினால்தான் குணங்கள் அமைகின்றனவாம். கண்டு பிடித்துவிட்டனர் இந்தக் கொலம்பசுகள்.
சபரிமலைக்கும் போகும் பக்தர்கள் கருப்பு உடை அணிந்து செல்லுகிறார்களே, அதைப்பற்றி ‘விஜய பாரதம்’ விளக்குமா? அவர்கள் எல்லாம் குணக் கேடர்களா?
நீதிபதிகள் கருப்புக் கோட் அணிந்து வீற்றிருக்கிறார் களே – அவர்கள் எல்லாம் குணம் கெட்டவர்களா?
காவி உடை அணிந்த ‘ஜெகத்குரு’ ஜெயேந்திர சரஸ்வதி, எழுத்தாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்ததை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
450 ஆண்டு கால வரலாறு படைத்த இஸ்லாமியர் களின் வழிபாட்டுத் தலத்தை அயோத்தியில் ஒரு பட்டப் பகலில் இடித்துத் துவம்சம் செய்தவர்கள் கருப்புடை தரித்தவர்களா – காவி உடை அணிந்த வர்களா?
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் காவி உடை களைத் தானே அணிகின்றனர். அவர்கள் மக்களிடம் திரிசூலம் வழங்குகிறார்களே, ஏன்? அமைதியைக் காக்கவா? மக்களிடம் மனிதாபிமானத்தைப் பரப்பவா? சொல்லுங்கள் பார்க்கலாம்.
திரிசூலம் என்றால் ஒரு சூலம் இஸ்லாமியர்களையும், இன்னொரு சூலம் கிறிஸ்தவர்களையும், மற்றொரு சூலம் மதச்சார்பின்மையைப் பேசுகின்றவர்களையும் பதம் பார்க்கும் என்று பரப்புரை செய்வதுதான் ஹிந்துத்துவாவின் உயர் தனிப் பண்பாடோ!
பண்பாட்டைப் பற்றி பார்ப்பன ஏடுகளா பேசுவது? ரிஷிப் பத்தினிகளின் கற்பைச் சூறையாடி ரிஷிகளால் சாபமிடப் பட்டவனைப் பகவான் என்று கன்னத்தில் போட்டுக் கொள்ளும் கூட்டமா, ‘அய்யகோ, ஒழுக்கம் கெட்டு விட்டதே’ என்று ஒப்பாரி வைப்பது.
பெற்ற மகளையே பெண்டாண்டவன் என்று கூறி, அவன் தான் படைத்தல் கடவுள் என்று பசப்பும் பச்சைப் பார்ப்பனத் தனத்திற்கு என்ன பெயர் சூட்டலாம்?
அகலிகையின் கதை என்ன? பட்டியலிட்டால் கூவம் கூட முகம் சுளிக்குமே!
குளிக்கப் போன பெண்களின் ஆடையைத் திருடிக் கொண்டு மரத்தில் ஏறி உட்கார்ந்து, பெண்களை நிர்வாணக் கோலத்தில் ரசித்தவன் எல்லாம் பகவான் என்று பாடி ஆடும் பண்பாடு அற்றவர்களா – ‘பக்தி தனிச் சொத்து, ஒழுக்கம் பொதுச் சொத்து!’ என்று சொன்ன தந்தை பெரியாரையும் அவர்தம் கருப்புச் சட்டைத் தொண்டர்களையும் பார்த்து பழி சுமத்துவது!
‘விஜயபாரதங்களே’ ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்! – வேண்டவே வேண்டாம்!