ரூ.100 கோடிக்கு இணையதள மோசடி 9 பேருக்கு ஆயுள் தண்டனை கொல்கத்தா நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு

viduthalai

கொல்கத்தா, ஜூலை 19 கொல்கத்தாவில் உள்ள கல்யாணி நீதிமன்றம், நாடு முழுவதும் ரூ.100 கோடிக்கு மேல் சைபர் மோசடியில் ஈடுபட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது நாட்டின் சைபர் குற்ற வரலாற்றில், இத்தகைய மோசடிக்கு விதிக்கப்படும் முதல் ஆயுள் தண்டனை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா முழுவதிலும்

இணைய வழியில் மக்களை ஏமாற்றி மோசடி கும்பல், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 108 பேரிடம் ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகையை ஏமாற்றியுள்ளது. மகாராட்டிரம், அரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 9 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு சைபர் மோசடி வழக்குகளிலும் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு கடந்த ஆண்டு ரனகத் பகுதியைச் சேர்ந்த ஒருவரை, “டிஜிட்டல் கைது செய்திருப்பதாக” கூறி, அவரிடமிருந்து ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர் பாக நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. தீவிர விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றம் இந்த 9 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் மீது மோசடியாக ஆவணங்களைத் தயாரித்தல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டை, நீதிமன்றம் “பொருளாதார பயங்கரவாதம்” என்று கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், இந்த குற்றவாளிகள் அனைவரும் தங்களுக்கு எதிராக மிக உறுதியான டிஜிட்டல் சாட்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

குற்றவாளிகளிடமிருந்து ஏராள மான வங்கிக் கணக்குப் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகள், சிம் கார்டுகள், அலைபேசிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மோசடிப் பணத்தை நாடு முழுவதுமுள்ள ஏராளமான வங்கிக் கணக்குகளுக்கு இவர்கள் பரிமாற்றம் செய்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சுமார் அய்ந்து மாத காலம் நடைபெற்ற இந்த விசாரணையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வங்கி மேலாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு, கிட்டத்தட்ட 2,600 பக்கங்களைக் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளதுடன், இணைய வழி மோசடிகளைத் தடுப்பதில் இந்திய நீதித்துறை உறுதியுடன் செயல்படும் என்பதையும் உணர்த்துகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *