தென்கொரியா, ஜூலை 19- மகள் அதிக மதிப்பெண் பெற பள்ளிக்குள் புகுந்து கேள்வித தாளை திருட முயன்ற பெண் பிடிப்பட்டார். உடந்தையாக இருந்த ஆசிரியரும் கைதானார்.ஜூலை 4ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கேள்வித் தாளை திருட முயற்சி
தேர்வுத் தாள்களைத் திருட முயன்றபோது அலாரம் ஒலித்ததால் அவர்கள் கையும் களவுமாகப் பிடி பட்டதாக கொரிய செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட 31 வயது மேனாள் ஆசிரியர், கடந்த பிப்ரவரி மாதம் வரை அந்தப் பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். அவருடன் பிடிபட்ட 48 வயதுப் பெண், அதே பள்ளியில் படிக்கும் மாணவியின் தாய் ஆவார். இந்த மேனாள் ஆசிரியர், அந்த மாணவிக்கு டியூசன் வகுப்பு எடுத்து வந்திருக்கிறார். இருவரும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பள்ளிப் பாதுகாவலரும் கைது
இவர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இதே போன்ற திருட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக பள்ளிப் பாதுகாவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மாணவி 2023ஆம் ஆண்டு முதல் பள்ளியில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாணவி பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார், அவரது மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கல்விக்குக் கடும் போட்டி நிலவும் தென் கொரியாவில், கடந்த ஆறு ஆண்டுகளில் தேர்வுத் தாள்களை விற்க முயன்ற குற்றத்திற்காக சுமார் 250 பொது மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.