80 ஆண்டுகாலத்திற்கு முன்பு இவ்வளவு பெரிய மேடை, இவ்வளவு பெரிய கூட்டம் நடைபெறாது!
திருச்செங்கோட்டில் கோவிலுக்குமுன் உள்ள மண்டபத்தில் நடைபெறும்கூட்டத்தின் நடுவே பன்றியை விரட்டி விடுவார்கள்; மேடையில் கற்கள் வந்து விழும்!
திருச்செங்கோடு, ஜூலை 19- திருச்செங்கோடு நகரம் எங்களுக்குப் புதிதல்ல. சுயமரியாதை இயக்கம் நூறாண்டு கால இயக்கமாகும். நூறாண்டு கால இயக்கத்தில், 80 ஆண்டுகாலத்திற்கு முன்பு இவ்வளவு பெரிய மேடை, இவ்வளவு பெரிய கூட்டம் நடைபெறாது. வழக்கமாக திருச்செங்கோட்டில் கோவிலுக்கு முன்பு ஒரு மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்தில்தான் எங்களுடைய கூட்டம் நடைபெறும். தந்தை பெரியார் பங்கேற்கும் கூட்டம் உள்பட அங்கேதான் நடைபெறும். அந்தக் கூட்டமும் இன்றைக்கு இந்தக் கூட்டம் அமைதியாக நடைபெறுவது போன்று நடக்காது. கூட்டத்தின் நடுவே பன்றியை விரட்டி விடுவார்கள். மேடையில் கற்கள் வந்து விழும் என்று பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
திருச்செங்கோட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா!
கடந்த 28.6.2025 அன்று மாலை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா, திறந்த வெளி மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வர லாற்றுப் பெருமைமிக்க திருச்செங்கோடு மாநகரில் உங்களையெல்லாம் சந்திக்கக் கூடிய ஒரு மகத்தான திருப்பமாக இருக்கக்கூடிய ஒரு நல் வாய்ப்பு. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு வந்தி ருக்கின்ற அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டிற்குப் போகாது;
அது நாட்டிற்குத்தான் போகும்!்
நான் இங்கே வந்தவுடன், எனக்கு எடைக்கு எடை நாணயங்கள் கொடுப்பதாகச் சொன்னார்கள். கிட்டத்தட்ட 50 ஆயிரம் ரூபாய். நாங்கள் உண்டி யல் குலுக்கினாலும், துண்டேந்தினாலும் எந்தப் பணமும் வீட்டிற்குப் போகாது; அது நாட்டிற்குத்தான் போகும்.
“பெரியார் உலக’’த்திற்கு
திருச்செங்கோடு நகர மக்கள்
நன்கொடை அளித்திருக்கிறீர்கள்
தந்தை பெரியார் அவர்கள் பெயரால், இந்தியாவே பாராட்டக்கூடிய நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர், திராவிட நாயகரால் அடிக்கல் நாட்டு விழா செய்யப்பட்டு, திருச்சிக்குப் பக்கத்தில் சிறுகனூர் என்கிற இடத்தில், 40 ஏக்கராவில், 95 அடி உயரம் என்று அவர் வாழ்ந்த காலத்தைக் குறிக்கக்கூடிய அளவில், அடிபீடம் 60 அடி உயரத்தில் அமைகின்ற “பெரியார் உலக’’த்திற்கு திருச்செங்கோடு நகர மக்கள் நன்கொடை அளித்திருக்கிறீர்கள் என்பது – என்னை எடை போட்டுப் பார்த்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்றுதான் நான் நினைக்கின்றேன்.
பெரியார் உலகப் பணிகள், மூன்றில் ஒரு பங்கு பணி நிறைவு பெற்றுவிட்டது. அதற்குத் திருச்செங்கோடு மக்கள் பங்கும், பணியும் இருக்கிறது. அதுவும் நம்முடைய மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில், சாட்சியத்தோடு நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய பெருமை இன்றைக்குக் கிடைத்திருக்கின்றது.
திருச்செங்கோடு நகரம் எங்களுக்குப் புதிதல்ல. சுயமரியாதை இயக்கம் நூறாண்டு கால இயக்கமாகும். நூறாண்டு கால இயக்கத்தில், 80 ஆண்டுகாலத்திற்கு முன்பு இவ்வளவு பெரிய மேடை, இவ்வளவு பெரிய கூட்டம் நடைபெறாது.
வழக்கமாக திருச்செங்கோட்டில் கோவிலுக்கு முன்பு ஒரு மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்தில்தான் எங்களுடைய கூட்டம் நடைபெறும். தந்தை பெரியார் பங்கேற்கும் கூட்டம் உள்பட அங்கேதான் நடைபெறும்.
கூட்டத்தின் நடுவே பன்றியை விரட்டி விடுவார்கள்; மேடையில் கற்கள் வந்து விழும்!
அந்தக் கூட்டமும் இன்றைக்கு இந்தக் கூட்டம் அமைதியாக நடைபெறுவது போன்று நடக்காது. கூட்டத்தின் நடுவே பன்றியை விரட்டி விடுவார்கள். மேடையில் கற்கள் வந்து விழும்.
ஆனால், இன்றைக்கு இந்தப் பகுதியில் வெற்றி பெறப் போவது தி.மு.க. – அல்லது தி.மு.க. கூட்டணியில் உள்ள கொங்கு நாட்டு மக்கள் கட்சிதான் வெற்றி பெறும்.
காரணம் என்னவென்று சொன்னால், மக்கள் பக்குவப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
யார் என்ன வித்தைகள் செய்தாலும், அந்த வித்தைகள் இங்கே எடுபடாது. இது தமிழ் மண், பெரியார் மண், திராவிட மண், கொள்கை மண்ணாகும்.
சுயமரியாதை முதல் மாகாண மாநாடு
திருச்செங்கோட்டுக்கும், சுயமரியாதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். இன்றைய இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது, தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கம் தொடங்கி, சில ஆண்டுகளில், சுயமரியாதை முதல் மாகாண மாநாடு செங்கற்பட்டில் நடைபெற்றது. அந்த மாநாட்டைத் திறந்து வைத்த அன்றைய முதலமைச்சர் யார்? அவர் ஆற்றிய உரை என்ன? என்பதெல்லாம் ஓர் ஆவணமாகப் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.
அவர் வேறு யாருமல்ல; அவருடைய பெயரைச் சொன்னால் உங்களுக்கெல்லாம் அதிசயமாக இருக்கும். டாக்டர் சுப்பராயன் அவர்கள்தான்.
அவர், திருச்செங்கோட்டுக்கு உரியவர்.
ஜமீன்தாராக இருந்தாலும், எல்லா மக்களின் அன்பைப் பெற்றவர் அவர். சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாட்டை அவர்தான் திறந்து வைத்தார்.
அன்றைக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்தான் இன்றைக்கு சட்டங்களாகி இருக்கின்றன!
அந்த மாநாட்டில் அன்றைக்கு அவர் என்ன கருத்தைச் சொன்னாரோ, அதனை வழி மொழிந்துதான் மற்ற எல்லோரும் பேசினார்கள். அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள்தான் இன்றைக்கு மிகப்பெரிய அளவிற்கு சட்டங்களாக வந்திருக்கின்றன.
சுயமரியாதை இயக்கம் பிறகு திராவிடர் கழகமானது. திராவிடர் கழகத்திலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் வந்தது. ஒரு பெரிய சமுதாய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.
டாக்டர் சுப்பராயன் அவர்கள் வெளிநாட்டில் படித்தவர். அன்றைய காலகட்டத்திலேயே ஜாதி மறுப்பு, கலப்புத் திருமணம் செய்துகொண்டவர் அவர்.
அப்படிப்பட்ட சுயமரியாதை இயக்க உணர்வாளர் உள்ள மண் இந்த மண்.
அய்யா பொத்தனூர் க.சண்முகம் போன்றவர்களுக்கு நான் சொல்லுகின்ற செய்தி தெரியும்.
என்.கே.பி. வேல் என்பவர் திருச்செங்கோடு ஆயில் மில்ஸ் நடத்தியவர்.
நீதிக்கட்சிக்குப் பொதுச்செயலாளராக இருந்தவர் திருச்செங்கோடு பரமசிவம்தான். தந்தை பெரியார்மீதும், அவருடைய இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டவர்.
திருச்செங்கோட்டில், சுயமரியாதை இயக்க மாநாடுகள் பல நடைபெற்று உள்ளன. பச்சை அட்டைக் ‘குடிஅரசு’ ஏட்டில் அவையெல்லாம் பதிவாகி இருக்கின்றன.
அதேபோல, முனியப்பன் அவர்கள், சங்கரலிங்கம் அவர்கள், தராசு மணியம் அவர்கள், சாந்தலிங்கம் அவர்கள், முத்தையா உணவு விடுதி நடத்திய அங்க முத்து அவர்கள். அவருடைய பிள்ளைகள் எல்லாம் வந்து என்னை சந்தித்தார்கள், எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி
இந்த இயக்கத்தை அழித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்!
சில பேர் நினைக்கிறார்கள், இந்த இயக்கத்தை அழித்து ஒழித்துவிடலாம் என்று. கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, எல்லாவற்றையும் காட்டி, இந்த ஆட்சி தமிழ்நாட்டில் வேரூன்றிவிட்டதே, இதை எப்படியாவது வெளியில் அனுப்பவேண்டும் என்று நினைத்து, இன்றைக்கு யார் யாரையோ அழைக்கின்றார்கள்.
ஆனால், இது ஆயிரங்காலத்துப் பயிர். இதை அசைக்க முடியாது.
இன்றைக்கு இந்த மேடையில் நாங்களெல்லாம் அமர்ந்திருக்கின்றோம்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் இங்கே இருக்கிறார்; எங்களுடைய கழக மாவட்டத் தலைவரும் இங்கே இருக்கிறார். ஏராளமான மக்கள் இங்கே திரண்டிருக்கிறீர்கள்.
பெரியார்தான் என்றைக்கும்
வெற்றி பெறுவார்!
அன்றைக்கு எந்த ஊரில் கூட்டம் நடைபெறும்போது மேடையில் கல்லெறிந்தார்களோ, எந்த ஊரில் கூட்டத்தின் நடுவே பன்றியை விரட்டி விட்டார்களோ, அந்த ஊரில், இன்றைக்கு என்னை அழைத்து, நீங்கள் பெரியார் உலகத்திற்குப் பணம் கொடுக்கிறீர்கள் என்றால், பெரியார்தான் என்றைக்கும் வெற்றி பெறுவார்; யாராலும் இந்த இயக்கத்தைத் தோற்கடிக்க முடியாது. எந்தக் கொம்பனாலும் இந்த இயக்கத்தை அசைத்துப் பார்க்க முடியாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நம்முடைய முதலமைச்சர் சொன்னதை நடத்திக் காட்டினாரா, இல்லையா?
‘‘சொன்னதைச் செய்வது; செய்வதைச் சொல்வது’’தான் திராவிட மாடல் ஆட்சி!
திராவிடர் இயக்கம் என்றால், ‘‘சொன்னதைச் செய்வது; செய்வதைச் சொல்வது’’தான். இன்னுங்கேட்டால், சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறேன் என்றார்.
இங்கே தாய்மார்கள், சகோதரிகள் எல்லாம் நிம்மதியாக அமர்ந்திருக்கின்றீர்கள். திராவிட மாடல் ஆட்சி வருவதற்கு முன்பு இவ்வளவு அமைதியாக நீங்கள் அமர்ந்திருக்க முடியாது.
அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அது என்னவென்றால், நாளைக்குக் காலையில், உங்க ளுடைய பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பவேண்டும் என்றால், அந்தப் பிள்ளைகளுக்குக் காலை உணவை தயார் செய்யவேண்டும். அப்படி தயார் செய்த உணவை, பிள்ளைகளின் பின்னாலேயே தட்டில் உணவை வைத்துக்கொண்டு, ‘‘சாப்பிட்டுப் போ, சாப்பிட்டுப் போ’’ என்று சொல்லக்கூடிய நிலை இருந்தது. சாப்பிடாமல் போனால், பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் பிள்ளைகளுக்கு ஆசிரியர் சொல்லிக் கொடுப்பதும் ஏறாது; மயக்க நிலையில் இருப்பார்கள்.
முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் சர்.பிட்டி. தியாகராயர்!
ஆனால், அதைக் கண்டறிந்த நிலையில்தான், முதன்முதலில் திராவிட இயக்கம் நீதிக்கட்சி, தியாகராயர் 1920 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே சென்னை மேயராக அவர் இருந்தபோது, முதன்முதலில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
அதற்குப் பிறகு, கல்வி வள்ளல் காமராசருடைய பகல் உணவுத் திட்டம். அதற்குப் பிறகு,
எம்.ஜி.ஆருடைய சத்துணவுத் திட்டம்.
சத்துணவு, உண்மையிலேயே சத்துணவாக இருக்கவேண்டும் என்பதற்காக நூற்றாண்டைத் தாண்டி இருக்கின்ற நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், எம்.ஜி.ஆரால் கொண்டுவரப்பட்ட சத்துணவுத் திட்டத்தை நிறுத்தவில்லை. அந்தப் புத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்றைக்கும் இருந்ததில்லை. ஜெயலலிதா அம்மையார் படம் போட்டு நலத் திட்டத்திற்காக செய்யப்பட்டு இருக்கிறது. அதற்காக 16 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு இருக்கிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், அரசு அதிகாரிகள் இந்தத் தகவலை சொல்வதற்குத் தயங்கி நின்றனர்.
‘‘என்னங்க தயக்கம்? வாங்க!’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
‘‘இல்லீங்க, சென்ற ஆட்சியில், நலத்திட்டத்திற்காக வழங்கப்படுவதில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா படம் அச்சடிக்கப்பட்டு இருக்கிறது’’ என்றனர் அரசு அதிகாரிகள்.
‘‘அவர்கள் படம் இருந்தால், அப்படியே இருக்கட்டும்; அதற்குமேல் வேறு படம் ஒட்டவேண்டாம்’’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
அரசியல் நாகரிகம் உள்ளவர்கள் நாங்கள்!
இந்தத் தைரியமும், இந்தத் துணிச்சலும் திராவிட இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு. அதுதான் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அரசியல் நாகரிகம் உள்ளவர்கள் நாங்கள்.
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தின் பெயரை மாற்றவேண்டாம். அதை உண்மையான சத்துணவுத் திட்டமாக ஆக்குவோம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள், 2 முட்டை வழங்கினார். அதனால் மிக லாபம் அடைந்தவர்கள் நாமக்கல்காரர்கள்தான்.
அதற்கு முன்பு வரை முட்டையை நம்முடைய மாணவர்கள் எங்கே பார்த்தார்கள் என்றால், தேர்வுத் தாளில்தான். உண்மையான முட்டையை பார்த்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான்.
சத்துணவில் முட்டை வழங்கினால் சும்மா இருப்பார்களா ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்?
மதத்திற்கு விரோதமாக,
ஸநாதனத்திற்கு விரோதமாக கலைஞர் செயல்படுகிறார் என்றனர்!
உடனே அவர்கள், ‘‘பார்த்தீர்களா, நம்முடைய மதத்திற்கு விரோதம்; ஸநாதனத்திற்கு விரோதம். சைவமாக இருக்கின்ற நம்முடைய பிள்ளைகளுக்கு முட்டை அளிக்கிறேன் என்று சொல்கிறார் முதலமைச்சர். இந்தத் திட்டம் வேண்டவே, வேண்டாம். நம்முடைய மதத்திற்கு விரோதமாக, ஸநாதனத்திற்கு விரோதமாக அவர் செயல்படுகிறார்’’ என்று சொன்னார்கள்.
ஈரோட்டுக் குருகுலத்தில்
பயிற்சி பெற்றவர் கலைஞர்!
கலைஞர் அவர்கள், ஈரோட்டுக் குருகுலத்தில் பயிற்சி பெற்றவர் அல்லவா! உடனே அவர் சொன்னார், ‘‘அவ்வளவுதானே, முட்டை வேண்டாம் என்பவர்கள், வாழைப்பழம் சாப்பிடுங்கள்’’ என்று சொல்லி, 2 வாழைப்பழங்களை சத்துணவில் வழங்கினார்.
இது யாருக்குப் பயன்பட்டது என்றால், வாழைப்பழ வியாபாரிகள் எல்லாம் பயன்பட்டனர்.
பிள்ளைகளும் சத்துணவு சாப்பிட்டார்கள். வாழைப்பழ விவசாயிகளும், முட்டை உற்பத்தியாளர்களும் பயன்பட்டனர்.
ஆகவே, எதைச் செய்தாலும், சிறப்பாக செய்யக்கூடியதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.
இன்றைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். அது என்னவென்றால், சொல்லதையும் செய்தார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.
‘‘காலைச் சிற்றுண்டி’’ திட்டத்தைக் கொண்டு வந்தார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இதுவரையில் மதிய உணவுத் திட்டம்தான் இருந்தது பள்ளிக்கூட மாணவர்களுக்கு. ‘திராவிட மாடல்’ ஆட்சி வந்தவுடன், ‘‘காலைச் சிற்றுண்டி’’ திட்டத்தைக் கொண்டு வந்தார். அதனால்தான், தாய்மார்கள் எல்லாம் இவ்வளவு நிம்மதியாக அமர்ந்திருக்கின்றார்கள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்
‘‘தலைவாரிப் பூச்சூடி உன்னைப் பாட
சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை
சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்’’
என்று சொன்னார்.
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது அழுது கொண்டிருக்கும் பெண் குழந்தையைப் பார்த்து பாடினார்.
அதே பெண் குழந்தை, இப்போது சிலை போலும் நிற்கவில்லை; கண்ணீரையும் சிந்தவில்லை. பள்ளிக்கூடத்திற்கு முதல் ஆளாகச் செல்கிறது அந்தப் பிள்ளை.
காரணம் என்னவென்றால், தன்னுடைய நண்பர்களோடு வரிசையில் அமர்ந்து காலைச் சிற்றுண்டியை சாப்பிடுகிறது.
‘‘உங்களை அப்பா என்று கூப்பிடலாமா?’’
அதனால்தான் நன்றி உணர்ச்சியுள்ள ஒரு பிள்ளை கேட்கிறது, ‘‘உங்களை அப்பா என்று கூப்பிடலாமா?’’ என்று.
இந்த உணர்ச்சியை உலகத்தில் எந்த ஆட்சி உரு வாக்கியிருக்கிறது.
கனடா நாட்டுக்காரர்கள், ‘திராவிட மாடல்’ ஆட்சியில் வழங்கப்படும் காலைச் சிற்றுண்டி திட்டத்தைப் பார்த்துவிட்டுச் சென்று, அங்கே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறார்கள்.
எனவே, ஆர்.எஸ்.எஸ். சகோதரர்களே, உங்கள் வித்தைகள் இங்கே பலிக்காது. ஏனென்றால், இது தமிழ் மண்.
(தொடரும்)