புதுடில்லி, ஜூலை 19 2014ஆம் ஆண்டு மக்கள வைத் தேர்தலில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமராக மோடி பொறுப்பேற்றார். ஆனால், தேர்தலுக்கு முன் பாஜக மூத்த தலைவரும், மேனாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பார்கள் என எதிர்பார்த்திருந்தார். அத்வானிக்கு ஆதரவாக முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
ஆனால், ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் மோடி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பிரதமர் இருக்கையில் அமர்ந்தார். மேலும் தனக்கு எதிராக காய் நகர்த்திய அத்வானி, ஒன்றிய அமைச்சர் பதவியில் கூட அமரக் கூடாது என்பதற்காக பாஜகவில் 75 வயதை அடைந்தால், அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் மூலமாக புதிய விதியைக் கொண்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட தலைவர்களைக் கட்டாயப்படுத்தி, அவர்களை ஓய்வு பெற வைத்தார் பிரதமர் மோடி. மேலும் அத்வானியை பொதுக்கூட்ட மேடைகளில் மோடி மேனாள் துணைப் பிரதமர் என்று கூட பாராமல் அவமானப்படுத்தினார்.
மோகன் பகவத்
இத்தகைய சூழலில், மகாராட்டிரா மாநிலம் நாக்பூரில் ஜூலை 9 அன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “75 வயது ஆகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்” எனக் கூறினார். மோகன் பகவத்துக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் 75 வய தாகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் அதே மாதத்தில்தான் 75 வயதைத் தொடவுள்ளார்.
மோடி, பிரதமர் பதவியில் இருந்து பதவி விலக வேண்டும் என்பதை குறிப்பிட்டுத்தான் மோகன் பகவத் கருத்து தெரிவிக்கிறாரா என்று காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. தொடர்ந்து 2 நாள்களுக்கு முன் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி ‘‘எது எப்படி இருந்தாலும் செப்டம்பர் மாதத்தில் மோடி பணி ஓய்வு பெறுவார். எனவே, சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் இந்திய அரசை மோடி யால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது” எனக் கூறினார்.
சுப்பிரமணியன் சாமியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் மோடி ஓய்வு பெறுவது உறுதி என செய்திகள் வெளியாகத் தொடங்கின.
பாஜக 150 தொகுதிகளில்கூட வெற்றி பெறாது
இந்நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், “2029 மக்களவைத் தேர்தலுக்கு பிரதமர் மோடி தேவை. அவரது முகம் தான் பாஜகவிற்கு அடையாளம். மோடி இல்லாவிட்டால் 2029 தேர்தலில் 150 தொகுதிகளில் கூட பாஜக வெற்றி பெறாது. அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மோடி பாஜக தலைமைக்கு தேவை. அரசியல் தலைவர்கள் 75 வயதானால் ஓய்வுபெற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்து மோடிக்கு பொருந்தாது” என அவர் கூறினார்.
நிஷிகாந்த் துபேவின் இந்த பேச்சு மூலம் மோடிக்காக 75 வயது விதியை முடிவுக்கு கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வ மற்ற செய்திகள் வெளியாகி யுள்ளன.
அதிகார மோதலா? நாடகமா?
மோடி பிரதமர் மட்டுமல்ல. பாஜகவின் விளம்பரத் தூதரும் அவரே. தற்போதைய சூழலில் 75வயதை நெருங்கிய மோடியை, பிரதமர் பதவியில் இருந்து நீக்கினால், 2029 மக்களவை மற்றும் மற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்படும். அதனால் மோடிக்காக 75 வயது ஓய்வு விதியை நீக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆர்எஸ்எஸ் அமைப்புடன் வழக்கமான “மோதல் நாடகத்தை” உருவாக்கி, மோடிக்கு 75 வயது விதி பொருந்தாது என்பதை அறிவிக்கவே இத்தகைய நாடகங்கள் கையாளப்படுகிறதா என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவரை
பிரதமராக நிறுத்தத் தயாரா?
காங்கிரஸ் மூத்த தலைவரும், கருநாடக முதலமைச்சருமான சித்தராமையா, ‘‘ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், நரேந்திர மோடியின் அரசியல் ஓய்வுக்கான சமிக்ஞையை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளார்.
அடுத்த பிரதமராக ஒரு தாழ்த்தப்பட்டவரை உருவாக்க பாஜகவுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த முயற்சி உங்களிடமிருந்து தொடங்கட்டும். மற்றவர்களுக்குச் சொற்பொழி வுகளை வழங்குவதற்குப் பதிலாக, பாஜகவின் பிரதமர் முகமாக ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவரை ஏன் நீங்கள் முன்மொழியக்கூடாது? அது கோவிந்த் கர்ஜோலாக இருந்தாலும் சரி, சலவாடி நாராயணசாமியாக இருந்தாலும் சரி, அவர்களின் பெயர்களை நீங்கள் முன்மொழிந்தால், நான் முதலில் உங்களை வாழ்த்துவேன்” என அவர் கூறியுள்ளார்.