சினேகா பர்வே: துணிவின் மறு உருவம்
மகாராட்டிரா மாநிலம் புனே நகரின் ‘சமர்த் பாரத்’ (Samarth Bharat) பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் 27 வயதான சினேகா பர்வே, அச்சுறுத்தல்களையும், தாக்குதல்களையும் மீறித் தனது கடமையைச் செய்து வரும் ஒரு துணிச்சல்மிக்கப் பெண்மணி. களத்தில் நேர்மையாகச் செய்தி சேகரிக்கும்போது அண்மையில் அவர் சந்தித்த தாக்குதல் மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்கள், உள்ளூர் பத்திரிகையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களின் அசைக்க முடியாத உறுதியையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
சமீபத்திய கொடூரத் தாக்குதல்:
ஜூலை 4 உள்ளூர் ஓடை ஒன்றை ஆக்ரமித்து அதன் மீது கட்டுமானம் பற்றி செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, கொடூரமாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் சுயநினைவை இழந்து, தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தாக்குதலுக்கு முக்கியக் காரணமான, அப்பகுதியில் இரண்டு மதுபானக் கடைகளை வைத்திருக்கும் பாண்டுரங் மோரேட் என்பவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.இவர் மராட்டிய துணை முதலமைச்சர் அஜித்பாவாரின் கட்சிப் பிரமுகர் என்று மராட்டி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள்:
இது சினேகா பர்வே மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் அல்ல.
பிப்ரவரி 2025இல், சினேகா பர்வே புனே நகரில் சாஸ்நரோடி சாலைகளின் மோசமான நிலை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டார். அந்த சாலையை அமைத்த ஒப்பந்தக்காரரால் தூண்டிவிடப்பட்டு சில நபர்கள் அவரது அலுவலகத்திற்கு வெளியே அவரைத் தாக்கி செருப்பு வீசினர்.
ஜூலை 2024இல், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஏ. பாட்டீல் குறித்து சினேகா ஒரு விமர்சன அறிக்கையை வெளியிட்ட பிறகு, அவருக்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்ததாக மன்சார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும், தான் அழைத்துப் பேசியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
காயங்களும், மீண்டு வரும் உறுதியும்:
சமீபத்திய தாக்குதலில், சினேகா பர்வேவுக்குத் தலை மற்றும் கீழ் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவருக்கு உள் இரத்தப்போக்கு அறிகுறிகள், வலிப்புத் தாக்கம் போன்றவை ஏற்பட்டன. ஆரம்பத்தில் அவரால் பேசவோ, அமரவோ, பதிலளிக்கவோ முடியவில்லை. தற்போது மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அவர், நியூஸ்லவுண்ட்ரி (Newslaundry) ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.
“உள்ளூர் பிரச்சினை களைப் பற்றிப் புகாரளித்த தற்காகவே நான் அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் எதிர் கொள்கிறேன். ஆனால் நான் அமைதியாக இருக்க மாட்டேன்… என் காயங்களிலிருந்து மீண்டு வருவதில் கவனம் செலுத்துகிறேன், ஆனால், குணமடைந்தவுடன், நான் மீண்டும் களத்திற்குச் சென்று என் வேலையைச் செய்வேன்,” என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கில் சம்பாதித்து, 365 நாட்களும் தேசத்தைப் பிளவுபடுத்தும் தேசிய ஊடக ஆங்கர்களை (Anchors) விட, சினேகா பர்வே போன்ற உள்ளூர் பத்திரிகையாளர்கள் ஆயிரம் மடங்கு துணிச்சல் மிக்கவர்கள் என்பதை இச்சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவரது அசைக்க முடியாத மன உறுதியும், சமூகத்தின் மீதான அர்ப்பணிப்பும் பாராட்டுதலுக்குரியவை.
மகாராட்டிரா மாநிலத்தில் பெண் ஊடகவியலாளர் பட்டப்பகலில் குண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தும் அம்மாநில முதலைமைச்சரும், இரண்டு துணை முதலமைச்சர்களும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. காவல்துறையோ முக்கிய குற்றவாளியைக் கைது செய்யாமல் அமைதி காத்து வருகிறது.
அம்மாநில ஊடகவியலாளர் அமைப்புகளும் இந்த விவகாரத்தில் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றன!