அளவுக்கு மேல் ஆட்டம் போடுபவர்களைப் பார்த்து ‘அதிக ‘அகராதி’ பிடித்த ஆசாமி!’ என்று சொல்லுகிற வழமை நம் நாட்டில் உண்டு.
அது யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ கண்டிப்பாக அது தமிழ்நாடு ஆளுநராக – ‘எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன்!’ என்று பேசும் – நடக்கும் திரு.ஆர்.என். ரவிக்குத்தான் துல்லியமாகப் பொருந்தும்.
அதனால்தான் நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் மிகச் சாதுரியமாகவும், தொலைநோக்கோடும் ‘ஆளுநராக ஆர்.என். ரவியே இங்கு தொடர வேண்டும்.’ – இப்படியே நாக்கு இருக்கிறது என்பதற்காக எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் – அதனால் மக்கள் மத்தியில் ஏற்படும் வெறுப்பு, நமக்கு அரசியல் இலாபமாக முடியும்?’ என்று கூறியது – நமது முதலமைச்சரின் ஆழ்ந்து நோக்கும் திறனும் – எடை போடும் சிந்தனையின் நுணுக்கமுமாகும்.
தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே தந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் பக்குவப்படுத்தி ஊட்டி வளர்த்திருக்கிற இன உணர்வும், மொழி உணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது ஆர்.என். ரவி போன்றவர்களுக்குத் தெரியாது.
ஏற்கெனவே, ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை களால் அடுத்த தேர்தலிலும் ஆட்சிப் பீடத்துக்கு வருவது தி.மு.க. தலைமையிலான அரசுதான் என்ற மக்கள் பொது எண்ணம் செழித்து வளர்ந்துள்ள சூழ்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி வகையறாக்களின் பேச்சும், நடத்தையும் வளமான எருவாக அமையும் என்பதில் அய்யமில்லை.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய விருது நினைவுப்பரிசில் திருக்குறளிலேயே இல்லாத ஒன்றை அச்சிட்டு அது 944ஆம் எண் குறள் என்று பொறிக்கப்பட்டு இருப்பது – ஆளுநர் வட்டாரத்தின் அறிவுத் திறனுக்கும், பொறுப்பற்ற தன்மைக்கும் எடுத்துக்காட்டாகும். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழங்கிய விருதுகளை ஆளுநர் மாளிகை திரும்பப் பெற்றுள்ளது.
‘எண்ணித் துணிக’ என்ற பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர்கள் 44 பேருக்கு நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தாராம். எண்ணித் துணிந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா?
அந்த நினைவுப் பரிசில் ‘‘செருக்கறிந்து சீர்மை மயக்கும், மறுப்பொடு மன்னுஞ்சொல் மேல்வையப்பட்டு’’ என எழுதப்பட்டு அதன் கீழ் 944ஆவது திருக்குறள் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கேள்விப்படாத திருக்குறளாக இருக்கிறதே என்ற சந்தேகத்தில் விருது பெற்ற மருத்துவர்கள் 944ஆவது குறளைப் புத்தகத்தில் தேடிய போது அந்த எண்ணில் வேறு ஒரு திருக்குறள் இருந்துள்ளது. அதே நேரத்தில் நினைவுப் பரிசில் குறிப்பிட்டதைப் போன்று எந்த திருக்குறளும் இல்லை என்பதும் தெரியவந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து 44 விருதுகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
தவறு சரி செய்யப்பட்டு 3 நாட்களில் விருதுகள் திருப்பி வழங்கப்படும் என ஆளுநர் மாளிகை தரப்பில் கூறப்பட்டுள்ளது. தவறான திருக்குறளை எழுதியது யார், தவறுக்கு காரணமானவர் யார் என்பது குறித்தும் ஆளுநர் மாளிகை தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.
‘‘அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து’’ (குறள் – 944).
மேலே கூறியதுதான் வள்ளுவனின் உண்மையான குறள். ஆனால், இந்த ஆளுநர் நடத்திய பாராட்டு விழாவில் வழங்கப்பட்ட வெள்ளித்தட்டில் விருப்பம் போல் ஏதோ ஒன்றைக் கிறுக்கி திருக்குறள் என்று கூறியிருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஆளுநர் மாளிகையில் திருவள்ளு வருக்குக் காவி சாயம் பூசினர். இப்பொழுது குறளின் குரல் வளையையே நசுக்குகின்றனர்.
திரிப்பதும், திரிபுவாதம் செய்வதும் அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல!
44 விருதுகள் திரும்பப் பெறப்பட்டு வேறு விருதுகள் வழங்கப்படுமாம்.
யார் வீட்டுப் பணத்தில்? அரசுப் பணத்திலா, ஆளுநரின் சொந்த பணத்திலா? பரிதாபம்! சங்கிகள் எந்த முகத்தோடு மக்களைச் சந்திப்பார்களோ!