புதுடில்லி, ஜூலை.18– பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் ஓட்டுகளை திருடி தேர்தல் ஆணையம் கையும், களவுமாக பிடிபட்டுள்ளது என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெவிருக்கிறது. இதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து வருகிறது. 2003-ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட 3 கோடிபேர், தங்களது குடியுரிமையை நிரூபிப் பதற்காக பிறப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டுள்ளன.
இதற்கிடையே, பீகாரைச் சேர்ந்த அஜித் அஞ்சும் என்பவர் தனது’யூடியூப்’ சேனலில், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ஒரு தொடர் ஒளிபரப்பி வருகிறார்.
ராகுல்காந்தி பகிர்ந்தார்
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் முறைகேடு நடப்பதாக அவர் கூறியிருப்ப தாக தெரிகிறது. அதனால், பெகுசாரை மாவட்டத்தில் அவர் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.
இந்நிலையில் அஜித் அஞ்சும் வெளியிட்ட பதிவை நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்ற பெயரில், பீகாரில் தேர்தல் ஆணையம், ஓட்டுகளை திருடி கையும், களவுமாக பிடிபட்டுள்ளது. அதன் பணி, திருட்டு மட்டும்தான். அதற்கு ‘சிறப்பு தீவிர திருத்தப்பணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தேர்தல் திருட்டு கிளை
அதை அம்பலப்படுத்தியவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப் படும் என்று கருதுகிறேன்.
தேர்தல் ஆணையம் இன்னும் தேர்தல் ஆணையமாகத்தான் இருக்கிறதா? அல்லது முற்றிலும் ‘பா.ஜனதாவின் தேர்தல் திருட்டுகிளையாக’ மாறிவிட்டதா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.