ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இன்றிக் கட்டப்படும் கட்டடங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவு

2 Min Read

சென்னை, ஜூலை 17– ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது.

நடவடிக்கை

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பா.பொன்னையா அனுப்பியுள்ள கடிதம்:

நகர ஊரமைப்பு சட்ட விதிகளின்படி ஊரகப்பகுதிகளில் கட்டட வரைபட அனுமதி வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப் படாத கட்டுமானங்களின் மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைளும் விளக்கப் பட்டுள்ளன.

தற்போது, ஒற்றைச்சாளர முறையில் இணையதளம் வாயிலாக, கட்டட அனுமதியை 3 வகைகளில் வழங்க வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சுயசான்றின் அடிப்படையில் 2,500 சதுரடி மனையில், 3 ஆயிரம் சதுரடி வரையில் பரப்புள்ள குடியிருப்பு கட்டுமானங்களை கட்டிக் கொள்ள அரசு அனுமதியளித்துள்ளது.

கட்டடத்தின் பரப்பு 10 ஆயிரம் சதுரடிக்குகீழ் இருந்தால் உள்ளாட்சி அமைப்புகளிடம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இக்கட்டட வரைபடங்களின் ஆவணங்கள் உரிய அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். 10 ஆயிரம் சதுரடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு தொழில்நுட்ப அனுமதி நகர ஊரமைப்பு துறையால் பெறப்பட்டு இறுதி ஒப்புதல் கிராம ஊராட்சியின் நிர்வாக அலுவலரால் வழங்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்படாத
கட்டுமானத்தை நிறுத்த…

இவ்வாறு கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டு கட்டப்பட்ட கட்டடங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்டடங்கள் என்றும் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள் அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் என்றும் வரையறை செய்யப்படுகிறது. முறையான ஆய்வுக்கு உட்படாமல் வரைபட அனுமதியும் பெறாமல் கட்டப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களின் கட்டுமானத்தை நிறுத்த நகர, ஊரமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கிராம ஊராட்சிகளின் நிர்வாக அலுவலரின் அனுமதியின்றி கட்டுமானப்பணி மேற்கொள்பவர்களிடம் இருந்து உரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கட்டட வரைபட அனுமதி சான்று கோரி அறிவிப்பு வழங்க வேண்டும்.

அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக கள ஆய்வு செய்து, ஆய்வின் போது முழுமையாக கட்டடம் கட்டப்பட்டுள்ளதா, அல்லது பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை அறிய வேண்டும்.

கட்டட வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளதா, விதிகளை மீறி கட்டுமானங்கள் அமைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து முழு விவரத்தை ஆய்வறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

கட்டடத்துக்கு குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வசதிகள்…

கட்டுமானம் முடிவு பெற்றிருந்தால் முடிவறிக்கை உரிய தொழில்நுட்ப அலுவலரிடம் பெறப்பட்டுள்ளதா என்பதை அறிய வேண்டு்ம். கட்டடத்துக்கு சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளதா, விடுபட்டுள்ளதா, குடிநீர், மின்சாரம், கழிவுநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் குறி்ப்பிட வேண்டும். அனுமதி பெறப்படாமல் கட்டுமானம் நடைபெற்று வந்தால் அதை பூட்டி முத்திரையிடும் அதிகாரம் கிராம ஊராட்சி நிர்வாக அலுவலருக்கு உண்டு.

அதை அறிவிக்க வேண்டும். அறிவிப்பை நேரடியாக கட்டட உரிமையாளர் அல்லது அவர் குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த நபரிடம் வழங்க வேண்டும். அவர்கள் இருவரும் இல்லை என்றால், அவர் வசிக்கும் முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும், அங்கீகரிக் கப்படாத கட்டுமானங்கள் மீது வழங்கப்பட்ட அறிவிக்கையின்படி, கட்டுமானம் நிறுத்தப்படவில்லை என்றால், அக்கட்டடத்தை பூட்டி சீல் வைக்கவும், உரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாக அலுவலர், ஊராட்சி ஆய்வாளரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *