வாசிங்டன், ஜூலை 17- அமெரிக்காவில் 17 குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகளை டிரம்ப் நிர்வாகம் பதவி நீக்கம் செய்துள்ளது.
சட்டவிரோத குடியேற்றம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், குடியேற்ற கொள்கையை கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து குடியேற்ற நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.
குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவின்பேரில், அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த மே மாதம், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். அதை எதிர்த்து அங்கு போராட்டமும் வெடித்தது. போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை பயன்படுத்த டிரம்ப் உத்தரவிட்டார்.
நீதிபதிகள் நீக்கம்
இந்நிலையில், அமெரிக்காவில் 17 குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை அவர்களுக்கான சங்கமான ‘பன்னாட்டு தொழில் முறை மற்றும் தொழில்நுட்ப பொறியாளர்கள் கூட்டமைப்பு’ தெரிவித்தது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் மாட் பிக்ஸ் கூறியதாவது:-
எந்த காரணமும் இல்லாமல் கடந்த 11ஆம் தேதி 15 நீதிபதிகளும், 14ஆம் தேதி 2 நீதிபதிகளும் நீக் கப்பட்டுள்ளனர். அவர்கள் கலிபோர்னியா, இலினாய்ஸ், லூசியானா, மேரிலேண்ட், மசாசுசெட்ஸ், நியூ யார்க், ஓஹியோ, டெக்சாஸ், உடா, விர்ஜினியா ஆகிய 10 மாகாணங்களில் பணியாற்றி வந்தனர்.
பொதுநலனுக்கு எதிரானது
ஒருபக்கம் 800 குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு புறம், எந்த காரணமும் இல்லாமல் அதிகமான குடியேற்ற நீதிமன்ற நீதிபதிகளை நீக்குவது பொதுநலனுக்கு எதிரானது. அபத்தமானது. புதிதாக நீதிபதிகளை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்க ஓராண்டு ஆகும். இந்த நேரத்தில் நீதிபதிகளை நீக்குவது, நிலுவை வழக்குகளை அதிகரித்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார். சட்டவிரோதமாக குடியேறிய வர்களை நாடு கடத்தும் நட வடிக்கைக்கு எதிராக தீர்ப்பு அளிக்கும் நீதிபதிகளும், எதிர்க் கட்சியான ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர் டிக் டர்பினை சந்தித்த நீதிபதியும் நீக்கப்பட்டதாக கருதப்படுகிறது.