காரைக்குடி, ஜூலை 17 காரைக்குடி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் பெரியார் பேசுகிறார் தொடர் சொற்பொழிவு -2 இல் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘‘ஹிந்துத்துவா வேரும் விஷமும்’’ நூல் திறனாய்வு செய்யப்பட்டது.
13.7.2025 அன்று காரைக்குடி குறள் அரங்கில், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தலைமையில், மாவட்ட தலைவர் வைகறை, மாவட்ட ப. க செயலாளர் ந. செல்வராசன் முன்னிலையில் நடைபெற்றது. விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் ஆ.பழனிவேல் ராசன் வரவேற்புரை ஆற்றினார்.
69 சதவிகித இட ஒதுக்கீடு
செல்வம் முடியரசன் தலைமையுரையில் இன்றைக்கு நாம் அனுபவிக்கும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சட்டப்பிரிவை உருவாக்கிய வரலாற்றை எடுத்துச் சொல்லி, அன்றைய முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் என்ற மூன்று பார்ப்பனர்களைக் கொண்டே நிறைவேற்ற காரணமாக இருந்ததையும், ஆசிரியர் அவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியதையும் எடுத்துரைத்தார்.
‘‘ஹிந்துத்துவா வேரும் விஷமும்’’
தொடக்க உரையாற்றிய பேராசிரியர் கு.இரமேசுகுமார் தனதுரையில் நூறாண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டின் கல்வி நிலை, சமுதாய நிலை பின்தங்கி இருந்ததையும், நீதிக்கட்சி, திராவிட இயக்கம் ஏற்படுத்திய அரசியல், சமூக மாற்றத்தையும், இன்றைக்கு நான் பேராசிரியராக இருப்பதற்கு அத்தகைய சமூகநீதிதான் தான் காரணம் என்று எடுத்துரைத்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய ‘ஹிந்துத்தவா: வேரும் விஷமும்’ நூலை மாவட்டத் தலைவர் வைகறை அறிமுகம் செய்து, வெளியிட தோழர்கள் பெற்றுக் கொண்டனர்.
ஆழமான
உள்ளடக்கம் கொண்ட நூல்
உள்ளடக்கம் கொண்ட நூல்
நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றிய ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர், மாவட்ட ப. க துணைத் தலைவருமான கவிக்கோ அ. அரவரசன் தனது உரையில், ஆசிரியர் கி. வீரமணி எழுதிய ‘ஹிந்துத்தவா: வேரும் விஷமும்’ ஒரு கேப்சியூல் போன்று ஆழமான உள்ளடக்கம் கொண்ட நூல்.
ஆள்பலம், பணபலம், ஊடக பலம் என்பதன் மூலம் தான் ஹிந்துத்வ சக்திகள் அதிகாரத்தை நிலை நிறுத்துவதையும், தயானந்த சரஸ்வதி, அரவிந்தர், விவேகானந்தர், சாவர்க்கர் போன்ற சித்தாந்தவாதிகள் ஹிந்துத்துவத்தின் வேரும் விஷமாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் கூறி, ஒரு மனிதனை தனிப்பட்ட முறையில் பேசினாலோ, குடும்பத்தை பேசினாலோ, அவன் மொழியை நாட்டை பேசினாலோ, வராத உணர்ச்சியை ஜாதியும், மதமும் எவ்வாறு உருவாக்குகின்றன அதன் கட்டமைப்பு என்ன என்பதையும், இந்துத்துவத்தின் ஏக இந்தியா முழக்கத்தின் அடிப்படைக் கூறுகளையும் தெளிவாக விளக்கினார். கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் இந்த நூலை பரப்ப வேண்டியது மிகவும் அவசியம் என்று குறிப்பிட்டார்.
நிகழ்வில் முனைவர் எஸ். நடராசன், மாவட்ட
ப. க. துணைத்தலைவர் முனைவர் செ. கோபால்சாமி, திமுக பேச்சாளர் கே.வி. ராமகிருஷ்ணன், ப.க துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு. கண்மணி, மாவட்ட ப.க துணைச் செயலாளர் இரா. முத்து லெட்சுமி, தி. புருனோ என்னாரெசு, மாநகர அமைப்பாளர் ஆ.பால்கி, பன்னீர் செல்வம், தினேஷ், சி. கற்பகம், சு. ராம்குமார், நா. சாந்தி, மு. ராஜ முகமது, முகிலன், ஏ.கஜேந்திரன், சத்தியமூர்த்தி, ஆரோக்கியம் ஆகியோர் பங்கேற்றனர்.