புதுடில்லி, ஜூலை 17 பிகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது குல்குலியா சைத்பூர் கிராமம். இங்குள்ள இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதைத் தடுக்க அதன் கிராமப் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை துவங்கும் முன்பு வரை வெளி ஆட்கள் பலரும் இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்து சென்றபடி இருந்துள்ளனர். இவர்களைப் பற்றி கிராம மக்கள் விசாரித்தபோது அவர்கள் போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் எனத் தெரியவந்தது. இதை தடுத்து நிறுத்த முடிவு செய்த கிராம மக்கள் நூதன ஏற்பாட்டை செய்தனர். அதன்படி
கிராம எல்லையில் காவல்
கிராமத்தில் நுழைவதற்காக இருக்கும் ஒரே ஒரு சாலையில் மூங்கில் தடுப்பை போட்டு மூடினர். அங்கு இரவு பகல் என 24 மணி நேரமும் பலர் காவல் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தை கடந்து செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதுகுறித்து விசாரித்து அவர்களின் பெயர் விவரங்கள் ஒரு பதிவேட்டிலும் எழுதி வைத்தனர்.
இதுகுறித்து குல்குலியா சைத்பூர் கிராம பிரமுகர் சத்யேந்தர் மண்டல் கூறும்போது, “பிரவுண் சுகர் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருள்கள் பயன்பாடு குறித்த அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, இதற்காக 15 முதல் 28 வயது கொண்டவர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். வெளியிலிருந்து இருசக்கர வாகனங்களில் வரும் அடையாளம் தெரியாத வெளிநபர்கள் இவர்களிடையே போதைப் பொருட்களை விநியோகித்து வந்தனர். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காவல் நிலையத்தை நம்பி பலனில்லை. இதனால், இதை தடுத்து நிறுத்தும் பணியில் கிராம மக்களே முன்வந்து இப்பணியில் இறங்கி விட்டோம்” என்றார்.
உயிரிழப்பு
சுமார் 8 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட குல்குலியா சைத்பூர் கிராமத்தினருக்காக 3 கி.மீ. தொலைவில் காவல் நிலையம் உள்ளது. இந்த கிராமத்திலும் குறிப்பிட்ட ஒரு சிலர் போதை பொருட்களுக்கு அடிமையகி உள்ளனர். இதற்கு நடுத்தர வயது கொண்ட அய்ந்து பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளனர்.
வேறு வழியின்றி குல்குலியா சைத்பூர்வாசிகள் இந்த புதுவிதமான முயற்சியை செய்து வருகின்றனர். இதற்கு நல்ல பலன் கிடைப்பதாகவும், பாகல்பூர் மாவட்டத்தின் இதர சில கிராமத்தினரும் இதுபோல் காவல் பணி செய்ய யோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.