கன்வர் யாத்திரை (காவடி யாத்திரை) என்ற பெயரில் அரித்துவாருக்கு நடைபயணமாகச் செல்பவர்கள் மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
கார்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங் களை சேதப்படுத்துவது, உணவு விடுதிகளில் கறி மசாலா வாசனை இருப்பதாகக் கூறி அவற்றை அடித்து நொறுக்குவது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கவலை அளிக்கும் விஷயம், உடன் செல்லும் காவல்துறையினர், இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தவாறே இருப்பது ஆகும்.
இந்த நிலையில், வாரணாசியில் இருந்து அரித்துவாருக்கு காவடி எடுத்துப் புறப்பட்ட ஒரு காவிக்கும்பலை மாவட்ட காவல்துறை ஆணையர் மற்றும் மாவட்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூத்தூவி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வு, யாத்திரையின் போது நடைபெறும் வன்முறைகளை அதிகாரிகள் மறைமுகமாக ஊக்குவிப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கன்வர் யாத்திரை செல்பவர்கள் அரித்துவார் சென்று அங்கு கங்கை நீரை எடுத்து,மீண்டும் ஊருக்கு வந்து ஊரில் உள்ள சிவன் கோவிலில் இந்த நீரை ஊற்றுவார்கள்.
இந்த ஆண்டு, நடைபெறும் இந்த யாத்திரையில், வன்முறைச் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன
குறிப்பாக, உத்தராகண்டின் மங்களூர் பகுதியில் இஸ்லாமிய குடும்பம் காரில் சென்ற போது அவர்கள் காவடியாத்திரை சென்றவர்களை ஓரமாக செல்லுமாறு கூறி ஹார்ன் அடிக்க இதனால் வெகுண்ட காவிக் கூட்டம் வாகனத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் – பரவலாகப் பேசப்பட்டது. மேலும், உணவு விடுதிகளையும் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் வாரணாசியில் உயர் அதிகாரிகள் இந்த யாத்திரையை வழியனுப்பியது – இந்த வன்முறைகளுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாகும். காவல் துறையினர் இந்தச் சம்பவங்களைத் தடுக்க எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி!
கடவுள், மதம், யாத்திரை என்பன எல்லாமே அடிப்படையில் மூடநம்பிக்கை என்னும் கருவிலிருந்து பிறந்தவைதான்.
மக்களிடத்தில் ஆண்டாண்டுக் காலமாக ஊறிக் கிடக்கும் கடவுள் பக்தி வெறியைப் பயன்படுத்தி அடுத்த மதக் காரர்களைத் தாக்குவது, அவர்களின் வணிக நிறுவனங்களைச் சூறையாடுவது வழிபாட்டுத்தலங்களைச் சூறை யாடுவது எல்லாம் கேவலத்திலும் கேவலம் ஆகும்.
பாபர் மசூதி இடித்த கொடுமையைவிட பிஜேபி சங்பரிவார்க் கும்பலின் வன்முறைக் கலாச்சாரத்துக்கு வேறு எடுத்துக்காட்டு வேண்டுமா?
இந்தக் கும்பலின் மூத்த தலைவர்களே முன்னின்று முஷ்டியை முறுக்குவதும், வன்முறையைத் தூண்டும் வெறித்தனமான வகையில் பேசுவதும், அடிமட்ட காவிகளோ கலவரம்தான் தங்களின் கலாச்சாரம் என்று கருதிக் காலித்தனங்களிலும், வன்முறை களிலும் மூர்க்கத்தனமாக ஈடுபட்டு வரு கின்றனர்.
இந்தக் காவிகளின் வன்முறையைப்பற்றி ஒரு பிரச்சார இயக்கமாகவே நடத்தப்பட வேண்டும். காணொலிகள் வாயிலாகப் பரப்பிட வேண்டும். ஓர் ஆட்சி என்பது மக்கள் நலனைச் சார்ந்ததே தவிர, மக்களைப் பிளவு படுத்தி உயிரைக் குடிப்பதல்ல!