மன்னார்குடி, ஜூலை 16– திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையில் நரிக்குறவர் சமூகத்தினருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கீழடி விவகாரம்:
கீழடி அகழாய்வு குறித்த தி.மு.க.வின் கேள்விக்கு அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலளிக்காமல் தி.மு.க.வையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், கட்சியின் கொள்கைகளையும் விமர்சிப்பது ஏன்?
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்ற நிகழ்வுகள் எப்படி இருந்தன என்பதையும், தற்போது தி.மு.க. ஆட்சியில் எப்படி இருக்கின்றன என்பதையும்
ஆர்.பி.உதயகுமார் நன்கு அறிவார்.
தமிழர் தொன்மை
“கீழடியை புறந்தள்ளி தமிழர் தொன்மையை அவமதிக்கும் பா.ஜ.க.வின் போக்கிற்கு அ.தி.மு.க.வினர் துணை நிற்பது எந்த விதத்தில் நியாயம்? இந்த கேள்வியை அவர்கள் விழித்துக்கொள்ளும் வரை தொடர்ந்து கேட்போம், நிச்சயமாக விழித்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன், இல்லையென்றால் அ.தி.மு.க.வினரே அவர்களை விழிக்க வைப்பார்கள்.” தமிழர் பிரச்சனை, தமிழ்நாட்டிற்கான பிரச்சனை, தமிழுக்கான பிரச்சனை என்பதால் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சரின் எதிர்பார்ப்பு.
மதுரை மாநாடு – பா.ஜ.க.வின் மாநாடு:
மதுரையில் நடைபெற்ற மாநாடு முருகப் பக்தர்கள் மாநாடு அல்ல, அது முழுமையும் பா.ஜ.க.வின் மாநாடு. முருக பக்தர்கள் யாரும் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை என்றும், பா.ஜ.க.வினர் காசு கொடுத்து கூட்டி வந்த கூட்டம் தான் அங்கு கூடியிருந்தது.
தி.மு.க. ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு முயற்சியால் தமிழ்நாடு முழுவதும் 3000 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. “பா.ஜ.க.வினரின் இல்லங்களில் முருகனுக்கு இடம் உண்டா? முருகன் படம் கொண்ட பதாகை வைப்பதும், காகித அட்டையில் செய்யப்பட்ட வேல் வைத்துக்கொண்டு நடிப்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்” தானும் ஒரு முருகன் பக்தன்தான், ஆண்டுதோறும் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு வருகிறேன். இவ்வாறு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட தொகுப்பூதிய பணியாளர்களுக்கு
5 சதவீத ஊதிய உயர்வு!
சென்னை, ஜூலை 16– ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த ஊதிய உயர்வு பின்வரும் பதவிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குப் பொருந்தும்: புரோகிராமர் சிவில் பொறியாளர் கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர் எம்அய்எஸ் ஒருங்கிணைப்பாளர் எஸ்எம்சி கணக்காளர் தரவு பதிவு அலுவலர் அலுவலக உதவியாளர் உதவியாளர்
இந்த ஊதிய உயர்வு நடப்பாண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஊதிய உயர்வு பெற ஓராண்டு பணி அனுபவம் கட்டாயமாகும். அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஆலோசகர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இந்த ஊதிய உயர்வு பொருந்தாது என்றும் சுற்றறிக்கை தெளிவுபடுத்துகிறது.