ஜெனீவா, ஜூலை 16- உலகம் முழுவதும் 2024ஆம் ஆண்டில் 1.4 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்று அய்.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குந்தைகளுக்கு தடுப்பூசி
2020 இல் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று மற்றும் பொது முடக்கத் தின் காரணமாக குழந்தை களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தடைப்பட்டன. அதன்பிறகு குழந்தைகளுக் கான தடுப்பூசி செலுத்தும் விகிதம் இன்னும் முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னாட்டு அளவில் தடுப்பூசி அளிப்பது தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று (15.7.2025) வெளியிடப்பட்டது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் யுனிசெஃப் (UNICEF) அமைப்புகளின் அதிகாரிகள் தெரிவித்ததா வது:
டிப்தீரியா, டெட் டானஸ், கக்குவான் இருமல்:
கடந்த ஆண்டு, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 89 சதவிகித பேர் டிப்தீரியா, டெட்டானஸ், கக்கு வான் இருமல் ஆகியவற்றின் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 85 சதவிகித பேர் மூன்று தவணை தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். இந்த விகிதம் 2023 ஆம் ஆண்டிலும் இதே அளவிலேயே இருந்தது. இந்த வகை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் 35 லட்சம் முதல் 50 லட்சம் மரணங்களைத் தடுக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தட்டம்மை தடுப்பூசி: உலகம் முழுவதும் 76 சதவிகித தட்டம்மை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், அதிகப்படியான பரவலைத் தடுக்க இது 95 சதவிகிதத்தை எட்ட வேண்டும். கடந்த ஆண்டு, 60 நாடுகளில் தட்டம்மை பாதிப்பு அதிகரித்திருந்தது. அமெரிக்காவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குத் தட்டம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. அய்ரோப்பாவில் கடந்த ஆண்டு சுமார் 1,25,000 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டனர்.
உலகில் தடுப்பூசி செலுத்தப்படாத மொத்த குழந்தைகளில் 52% பேர் இந்தியா, நைஜீரியா, சூடான், காங்கோ, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஏமன், ஆப்கானிஸ்தான், அங்கோலா ஆகிய ஒன்பது நாடுகளில் உள்ளனர் என்று அய்.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஒரு பெரிய சவாலாகக் கருதப்படுகிறது.
நிவாரண நிதி
உலக சுகாதார அமைப்புக்கு அளிக்கப்பட்டு வந்த மனிதாபிமான நிவாரண நிதி நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது நடப்பு ஆண்டில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் சதவீதத்தை மேலும் மோசமாக்கும் என்று அய்.நா. அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், பன்னாட்டு அளவில் நடைபெறும் ஆயுதச் சண்டைகள் காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் சமமற்ற நிலை நிலவுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்த நிலையைச் சரிசெய்ய உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.