பி.ஜே.பி. ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ‘நீட்’ பயிற்சி மய்யங்களின் இடமான கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு உச்சநீதிமன்றம் கண்டனம்

Viduthalai

புதுடில்லி, ஜூலை16- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடா்ந்து அதிகரித்து வருவதற்கு உச்சநீதிமன்றம் 11.7.2025 அன்று கண்டனம் தெரிவித்தது.

ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கான பயிற்சி மய்யங்களின் கூடமாக செயல்படும் கோட்டாவில் நிகழாண்டில் மட்டும் இதுவரை 14 மாணவா்களும், கடந்த ஆண்டு 17 மாணவா் களும் தற்கொலை செய்து கொண்டனா்.

நீட் தோ்வுக்கு தயாராகிவந்த மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 18 வயது மாணவி ஒருவா், மே 3-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா். அதைத் தொடா்ந்து, மே 4-ஆம் தேதி கரக்பூா் அய்அய்டியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த முகமது ஆசிஃப் கமா் (22) என்ற மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்த இரு சம்பவங்கள் தொடா்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா மற்றும் ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை நடத்தியது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘கரக்பூா் அய்அய்டி மாணவா் மே 4-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா். ஆனால், மே 8-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை (எஃப்அய்ஆா்) பதிவு செய் யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்ய 4 நாள்கள் தாமதம் ஆனது ஏன்? மாணவா்களின் தற்கொலை சம்பவங்களை மிக எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது மிகவும் தீவிரமான பிரச்னையாகும்.

நாட்டின் உயா் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவா்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதி கரித்து வருவதை கவனத்தில் கொண்டு மாணவா்களின் மனநலனை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலான பணிக் குழுவை அமைக்குமாறு மாா்ச் 24-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தற்போது மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

மாணவா் தற்கொலை செய்துகொண்டவுடன் காவல்துறையினருக்கு உடனடியாக கரக்பூா் அய்அய்டி நிா்வாகம் தகவல் தெரிவித்ததாகக் கூறப் படுவதை முழுமையாக ஏற் றுக்கொள்ள முடியவில்லை.

இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட எல்லைக் குள்பட்ட காவல் நிலைய அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். எனவே, சட்டரீதியாக முறையான விசாரணையை காவல்துறையினர் மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.

நீட் தோ்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத் தில் காவல் துறையினா் எஃப்அய்ஆா் பதிவு செய்யாதது ஏன்? நிகழாண்டு கோட்டாவில் எத்தனை மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டனா் என நீதிபதிகள் கேள்வி யெழுப்பினா்.

இதற்கு ராஜஸ்தான் மாநில அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு, ‘நிகழாண்டு மொத்தம் 14 மாணவா்கள் தற்கொலை செய்துகொண்டனா். நீட் தோ்வுக்கு தயாரான மாணவி தற்கொலை விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்அய்டி) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து பேசிய நீதிபதிகள், ‘உச்ச நீதிமன்றத் தீா்ப்பை நீங்கள் மதிக்கவில்லை. நீட் தோ்வுக்கு தயாராகிவந்த பயிற்சி மையத்தின் விடுதியில் இருந்து 2024, நவம்பரில் வெளியேறி தனது பெற்றோருடன் அந்த மாணவி வசித்து வந்தாா்.

எங்களது உத்தரவின்படி மாணவி வசித்து வந்த எல்லைக்குள்பட்ட காவல் நிலைய அதி காரிகள் முறையாக எஃப்அய்ஆா் பதிவுசெய்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரி அதைச் செய்யவில்லை. அவா் நீதிமன்ற வழிகாட்டுதல் களைப் பின்பற்றவில்லை. இதுகுறித்து அவா் ஜூலை 14-ஆம் தேதி உரிய விளக்கம் அளிக்க வேண்டும்’ என்றனா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *