பெங்களூரு, ஜூலை 15- கருநாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோயிலில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களைத் தானே புதைத்ததாக மேனாள் ஊழியர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புகார் கொடுத்தவர்கள்
காணாமல் போய்விடுவார்கள்
காணாமல் போய்விடுவார்கள்
கருநாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் மஞ்சுநாதர் கோயில் உள்ளது. பாஜக ஆட்சியில் அமரும் போது எல்லாம் கோவிலில் பல முறைகேடுகள் நடக்கும் என்றும், இது தொடர்பாக புகார் அளித்தால் புகார் கொடுத்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இக்கொடூர நிகழ்வுகளின் குற்றவாளி களான கோவில் நிர்வாகிகளைக் கைது செய்யக் கோரி 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கருநாடக மாநிலம் மங்களூருவில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அடையாளம் தெரியாத முறையில் மரணம் அடைந்த அனைத்து இறப்புகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்போது குரல் எழுப்பப்பட்டது. ஆனால், இது போன்று கோயிலின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பொய்ச் செய்திகளைப் பரப்பக் கூடாது என்று பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அடித்து சித்ரவதை
இதுகுறித்து மங்களூருவைச் சேர்ந்த வழக்குரைஞர் சச்சின் தேஷ்பாண்டே கூறுகையில், “தர்மஸ்தலா கோயிலில் தூய்மைப் பணியாளராகப் பணி யாற்றிய 52 வயதான நபர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், அவர் தர்மஸ்தலா கோயிலில் பணி யாற்றியபோது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர்.
அவ்வாறு கொல்லப்பட்டவர் களின் உடல்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது காவல்துறையில் புகார் அளித்த தூய்மைப் பணியாளர் பணிக்குச் சேர்ந்த அன்றே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொல்லப்பட்ட இளம்பெண் ஒருவரின் உடலைப் புதைக்குமாறு வற்புறுத்தப் பட்டிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது கோயில் நிர்வாகிகள் அடித்துச் சித்ரவதை செய்துள்ளனர். மேலும், குடும்பத்தோடு கொளுத்தி விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
உயிரோடு புதைத்தனர்
இதன் காரணமாக அந்த தூய்மைப் பணியாளர் அந்த உடலை புதைத் துள்ளார். அதன் பிறகு அவர் தொடர்ச்சியாகக் கோவிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களை எரித்துள்ளனர்.
சில பெண்களை அதிக காயத்தோடு உயிரோடு இருக்கும் போதே புதைக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். இதில் பள்ளி மாணவிகளும் அடங்குவர். ஒருமுறை பள்ளி மாணவி ஒருவரின் உடலை, அவரது பாடப் புத்தகப் பையுடன் சேர்த்து எரித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவில் வளாகத்தில் குடியிருந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கே கோயில் நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
கொலை முயற்சி
அவரைக் கொல்ல முயற்சித்த போது, அங்கிருந்து அந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்தோடு தப்பி தலைமறைவானார். அவர் தற்போது தனது தவறை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் காவல் துறையில் புகார் அளித் துள்ளார்.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் தனஞ்செய் மூலமாக கருநாடக உயர்நீதி மன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகப் புகார் அளித்த மேனாள் தூய்மைப் பணியாள ருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் காவல் துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தனஞ்செய் கோரியுள்ளார்.
3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
இதுகுறித்து காவல்துறையினரிடம் விசாரித்தபோது, “இந்தப் புகார் குறித்து 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பெண்களின் பட்டியலைக் கொண்டு விசாரணை நடத்த இருக்கிறோம்.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகளை விசாரித்து, உடல் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் நேத்ராவதி ஆற்றங்கரையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்” என தெரிவித்தனர்.
இந்த விவகாரம் கருநாடகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே பாஜக ஆட்சியின் போது அவர்களது கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரிஜ்வல் ரேவண்ணா 8ஆம் வகுப்பு மாணவி முதல் 60 வயது வீட்டு வேலைசெய்யும் பணியாளர் பெண் உட்பட நூற்றுக் கணக்கான பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் வெளியானது.
ரகசியமாக காணொலிகள்
இது தொடர்பாக ரகசியமாக எடுக்கப்பட்ட காணொலிகள் அடங்கிய பென் டிரைவ் ஆயிரக்கணக்கில் மங்களூரு மற்றும் ஹசன் மாவட்டத்தில் கிடைத்தன.
தேர்தல் நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பிரிஜ்வல் ரேவண்ணாவிற்கும் பரப்புரை செய்தார். மேலும் பிரிஜ்வல் ரேவண்ணா தொடர்பாக மோடி கூறும்போது, “இளையோர்கள் கையில் கருநாடகா உன்னத கருநாடகா” என்று மேடையில் உரக்கப் பேசினார்.
அதே போல் கருநாடகாவில் மிகவும் முக்கியமான கோவிலான தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவிலிலும் கொடூரக் கொலைகள் நடந்துள்ளமை குறித்து கோவிலில் மேனாள் பணியாளரே நீதிமன்றத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.