தென்கொரியாவில் ஒராண்டிற்கும் மேலாக தொடர்ந்த மருத்துவ மாணவர்கள் போராட்டம் முடிவிற்கு வந்தது

2 Min Read

சியோல், ஜூலை 15- தென்கொரியா வில் முந்தைய அதிபரின் புதிய மருத்துவச் சட்டம் மற்றும் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு தொடர்பான முடிவை எதிர்த்து 17 மாதங்களாக நடைபெற்று வந்த மருத்துவ மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

மருத்துவப் பயிற்சியை புறக்கணித்து வந்த சுமார் 8,300 மாணவர்கள் மீண்டும் பாடங்களைத் தொடங்க உள்ளனர்,

மாணவர்கள் போராட்டம்

2024ஆம் ஆண்டு பிப்ரவரியில், அப்போதைய தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தலைமையிலான அரசு, மருத்துவப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 3,000 மாணவர்களுக்கு பதிலாக 5,000 மாணவர்களை சேர்க்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம், தென்கொரியாவின் வேகமாக வயதான மக்கள்தொகையைச் சமாளிக்கவும், குறிப்பாக கிராமப்புறங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் அவசியம் என்று அரசு கூறியது.

இத்திட்டத்தால், மருத்துவக் கல்வியின் தரம் குறையும், பயிற்சி மருத்துவர்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்று கூறி, சுமார் 12 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர், மேலும் மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டங்களில் பங்கேற்றனர். இந்த வேலை நிறுத்தம் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளையும் சிகிச்சைகளையும் தாமதப்படுத்தியது, இதனால் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் 16 சதவீதம் குறைந்தன, அவசர சிகிச்சை மையங்கள் சில பகுதிகளில் மூடப்பட்டன.

யூன் சுக் இயோல் 2024 டிசம்பரில் தற்காலிக தற்காப்பு சட்டம் அறிவித்து, மருத்துவர்களை வேலைக்குத் திரும்ப உத்தரவிட்டார், ஆனால் இந்த உத்தரவு 24 மணி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் தென்கொரியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய குடியரசுத் தலைவர், இந்த மருத்துவ நெருக்கடியை தீர்க்க உறுதியளித்தார், மேலும் அரசு மருத்துவ, மாணவர் சேர்க்கை உயர்வை ரத்து செய்ய முடிவு செய்தது.

முடிவுக்கு வந்தது

மருத்துவ மாணவர்கள் சங்கம் அரசின் கோரிக்கையை ஏற்று வேலை நிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்துள்ளது

ஓராண்டிற்கும் மேலாக சீர்குலைத் திருந்த தென் கொரிய மருத்துவச் சேவைகள் மீண்டும் துவங்கி உள்ளது இருப்பினும், சில மருத்துவ அமைப்பு களின் 12 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் தங்களின் போராட்டம் தொடர்வதாக அறிவித்துள்ளனர், அவர்களையும் சமாதானப் படுத்த அரசு முயல்கிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *