சிகாகோ, ஜூலை 15 சிகாகோவில் சிறப்பானக் கருத்தரங்கம். சூலை 13 காலை 10:30 முதல் மாலை 3:00 வரை நடந்தது .
சிகாகோ மற்றும் அருகே வாழும் தோழர்கள் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் வந்து கலந்து கொண்டனர்.
பறை இசை மற்றும் குழல் இசையில் புரட்சிக் கவிஞரின் பாடல்கள் , இளஞ்சிங்கம் பிரபாகரனின் சிலம்பம் நிகழ்ச்சியுடன் உற்சாகமாகத் தொடங்கியது.
சோம. இளங்கோவன் நடத்திய இயக்கங்கள் அமெரிக்கத் திராவிட முன்னேற்றக் கழகம், பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் மற்றும் பெரியார் பன்னாட்டு சார்பில் சிறப்பு விருந்தினர்கள் பழ. செல்வகுமார், பேராசிரியர் சுப.வீ, புலவர் செந்தலை ந. கவுதமன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அனைவரையும் வரவேற்றார். எதிர் காலம் உலகில் மனித நேயம் மிக்க திராவிட மாடல் கொள்கைகளை வரவேற்கும் நிலை வரும். அதற்கு அனைவரும் உற்சாகத்துடன் உழைப்போம் என்றார்.
மகளிர்க்கு வாக்குரிமை
தி.மு.க. மாநிலச் சுற்றுச் சூழல் அணியின் துணைச் செயலாளர் பழ. செல்வகுமார் எவ்வாறு திராவிடச் சித்தாந்தம் மகளிர்க்கு வாக்குரிமை அளித்தது முதல் தந்தை பெரியார் அவர்களின் குடும்பக் கட்டுப்பாடு ஆதரவு பற்றி விஞ்ஞானி சந்திரசேகர் பேசி வரலாற்றை எடுத்துரைத்தார். முத்தமிழ் அறிஞர் எப்படி பெரியாரிடம் பயிற்சி பெற்றார் என்றும், இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மகளிர் பெற்று வரும் புரட்சித் திட்டங்களையும் எடுத்துரைத்தார்.
பெரியாரின் போராட்டங்கள்
செந்தலை கவுதமன் தந்தை பெரியார் அவருக்குப் பெயரிட்டதைச் சொன்னார். தந்தை பெரியாரின் போராட்டங்கள் அவற்றின் வெற்றிக் கனிகளை அவர் கண் முன்னேயே கண்டார் என்பதை அவருக்கே உரித்தான ஆணித்தரத் தரவுகளுடன் சொன்னார். பார்பபனர் வீட்டுத் திருமணம் மந்திரம் வேறு சூத்திர வீட்டுத் திருமண மந்திரம் வேறு. அவர் என்ன பணம் கொடுத்தாலும் சூத்திர வீட்டுத் திருமணத்திற்கு வர மாட்டார். நான்கு பேருக்கு மனைவியாக்கி புரோகிதர் தானமாக மணமகளை மண மகனுக்குத் தரும் மந்திரத்திற்கு இவ்வளவு பொருள் கொடுத்து இன்றும் அவமானப் பட வேண்டுமா? என்று கேட்டார்.
சுயமரியாதை திருமணச் சட்டம்
அறிஞர் அண்ணா தந்தை பெரியாருக்குப் பரிசாக ஜீவா வீட்டுத் திருமணத்தில் சுயமரியாதைச் சட்டத் திருத்தத்தை தந்ததை நயம் படச் சொன்னார். இன்றும் நாம் பல வேறு வகைகளில் சூத்திரர்களாகத் தான் உள்ளோம் அவை மாற்றப்பட வேண்டும் என்று முழங்கினார். அதைத்தான் திராவிட மாடல் என்கின்றோம் என்றார். ஒவ்வொருவரும் மனதளவிலே உணர்ந்து பெயர் வைப்பதில் இருந்து இல்லத்து நிகழ்வுகள் வரைக் கடைப்பிடிக்க வேண்டியதை நகைச்சுவையுடன் இலக்கிய மேற்கோள்களுடன் சொன்னார் .
தந்தை பெரியாரின் போராட்டங்கள் தான் நம்மை மானமுள்ள அறிவுள்ள மக்களாக வாழ வழி செய்துள்ளது. அது மேலுந்தொடர பாடு படுவோம் என்றார்.
திராவிடந்தான் உண்மைத் தமிழ்தேசியம்
பேராசிரியர் சுப வீர பாண்டியன் ‘‘திராவிட இயக்கமும் தமிழ்ச் சமுதாயமும்” என்ற தலைப்பிலே எப்படி நாம் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், தாழ்த்தப் பட்டவர்களாகவும் ஆக்கப் பட்டோம் , அதை எதிர்த்து நடேசனார் போன்றவரகள் ஆற்றிய கல்விக் கொடைகள் பற்றி அவருக்கே உரித்தான நாள், மாதம், ஆண்டு என்பதைப் பட்டியலிட்டு 1916இன் முக்கியத்தை எடுத்துரைத்தார். ஆங்கிலேயர் கல்வி கொடுத்ததற்காக அவரை எதிர்க்கும் கூட்டம் இன்றும் நமது கல்வியைப் பறிக்கும் கொடுமையை விளக்கினார். நாம் இன்று பெற்றிருக்கும் உரிமைகளுக்காக எவ்வளவு போராட்டங்கள் அவற்றைப் பறிக்க இன்று நடக்கும் சூது முறியடிக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொன்னார். திராவிடந்தான் உண்மைத் தமிழ் தேசியம், இதை மறைக்க முயலும் போலிகளை மக்கள் உணரச் செய்ய வேண்டும். தமிழர் தலைவர் ஆசிரியரின் பேருழைப்பைப் பாராட்டி நாம் அனைவரும் பலவற்றையும் மக்களுக்கு புரிய வைக்க வேண்டுமென்றார். தமிழ் உணர்வை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் பணியாற்றுகின்றோம். தொடரட்டும். வெற்றி பெறுவோம். தளபதி மு.க.ஸ்டாலின், உதயநிதி போன்றோர் உழைப்பு கட்டாயம் மீட்டெடுக்கும் என்றார்.
இராவண காப்பிய உரைகள்
ம.வீ. கனிமொழியின் “இராவண காப்பிய உரைகள” நூல் வெளியிடப் பட்டது.
விசுகான்சின் சிவா்அனைவர்க்கும், பிரியாணி மற்றும் சுவைமிகு உணவு படைத்தார்.
பின்னர் சோம. இளங்கோவன் பெரியார் பன்னாட்டுக் கூட்டங்கள், மாநாடுகள், ஆஸ்திரேலியா மெல் போர்னில் நவம்பர் 1, 2இல் நடக்கவிருக்கும் மாநாடு பற்றிச் சொன்னார்.
பெரியார் உலகம் – ஒளிப்படம்
திருச்சிக்கு அருகே அமைய உள்ள “பெரியார் உலகம்” ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது. அனைவரும் ஆர்வத்துடன் பார்த்தனர்.
“பெரியார் ஓட்டம்” படங்கள் காணபிக்கப்பட்டு வரும் செப்டம்பரில் மீண்டும் கலந்துகொள்ள பல மாரத் தான்கள் ஓடிய தோழர் அனைவரையும் அழைத்தார்.
பெரியார் ––- அம்பேத்கர் படிப்பு வட்டம் பற்றி தோழர் சுதாகர் எடுத்துரைத் தார். வட அமெரிக்கத் தி மு க விரைவாக வளர்ந்து வருவது விசுகான்சுன் சிவா போன்றோர் உழைப்பால் அகன்று பாராட்டப் பட்டது.
இயக்கப் புத்தகங்கள் தோழர்கள் பெற்றுச் சென்றனர்.
டல்லாசிலிருந்து வந்திருந்த கால்டுவெல் வேள்நம்பி அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்தார்.
உற்சாகத்துடன் உழைத்தத் தோழர்களுக்கு கழுத்தில் மெடல்கள் அணிவிக்கப்பட்டன.
ஒரு நாள் உற்சாகக்கருத்தரங்கம் மன நிறைவுடன் முடிவுற்றது.