சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக மணிந்திர மோகன் சிறீவத்சவா நியமனம்

Viduthalai

சென்னை, ஜூலை.15- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் கே.ஆர்.சிறீராம்.  ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மணிந்திர மோகன் சிறீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிறப்பித்தார்.

மணிந்திர மோகன் சிறீவத்சவா 1964-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி சத்தீஷ்கார் மாநிலம் பிலாஸ்பூரில் பிறந்தவர். 1987-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம்தேதி மத்திய பிரதேச மாநில பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். ராய்கர் மாவட்ட நீதிமன்றம், மத்தியபிரதேச மற்றும் சத்தீஷ்கர் உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்.

2005-ஆம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி முதல் மூத்த  வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த இவர், 2009-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி சத்தீஷ்கார் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 6-ஆம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலை வாய்ப்பற்றோர்
உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருச்சி, ஜூலை 15 அரியலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ.ரத்தினாசமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற, பெறாத மற்றும் மேல்நிலை வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு கல்வித் தகுதியை பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடா்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

எழுத படிக்க தெரிந்தவா்கள் முதல் பட்டப் படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும். தாழ்த்தப் பட்ட, பழங்குடியினத்தவா்கள் 1.7.2025 அன்று தாழ்த்தப்பட்டோா் 45 வயதிற்குள்ளும், இதர அனைத்து வகுப்பினா்கள் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். மனுதாரா் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது.

தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான வரம்பு ஏதும் இல்லை.

பள்ளி கல்விச் சான்றிதழ்கள் மற்றும் கல்லூரி படிப்புச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட சான்று களுடன் மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து சமா்பிக்க வேண்டும். ஏற்கெனவே வேலை வாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வருபவா்களும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தை பூா்த்திசெய்து சமா்ப்பிக்க வேண்டும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *