‘‘பகுத்தறிவோடு இருங்கள், காவடி எடுத்தால் களவாணிதான் ஆகமுடியும்; நூலை எடுங்கள் உலகை ஆளலாம்!’’ பள்ளியில் கவிதை வாசித்த ஆசிரியர்மீது வழக்குப் பதிவு, பணி நீக்கம் செய்த உ.பி. அரசு

Viduthalai

பரேலி, ஜூலை 15  உத்தரப் பிரதேசம் பரேலியில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றின் ஆசிரியரான ரஜ்னீஸ் கங்வார், நிறைய மாணவர்கள் காவடி யாத்திரைக்குச் செல்வது குறித்து காலை மாணவர் கூடலின் போது கவிதை ஒன்றை வாசித்தார். அதன் தமிழாக்கம்

“காவடி எடுக்க வேண்டாம், அறிவின் விளக்கை ஏற்று!  மனிதநேயத்தைப் பணியாக்கி, உண்மையான மனிதனாகு!”

“காவடி தூக்கி யாரும் வழக்குரைஞர், ஆட்சியர் காவல்துறை ஆணையர் ஆகவில்லை.  காவடி நீரை விற்ற யாரும் செல்வந்தர் ஆகவில்லை.  வணிகர், ஆட்சியாளர், வைத்தியர் ஆகவில்லை.  காவடியால் புத்தியும் விவேகமும் சிறிதும் வளராது.  பாங்க்(கஞ்சாபால்), ததூரா (புகையிலைச்சாறு), கஞ்சா, மதுவால் எவரும் மீட்பு பெறவில்லை ஜாதி-மத வெறியை விடுத்து, உன் நலத்தை நீ காப்பாய்!

பாங்க் (கஞ்சா பால்), ததூரா (புகையிலைச்சாறு), கஞ்சா (காவடி செல்பவர்கள் இறைவனின் பிரசாதம் என்று கூறி இந்த போதைப் பொருளைத் தாராளமாகப் பயன்படுத்துவார்கள்)

கல்விக்கூடம், நூலகத்தில் படித்து, அறிவை ஆழப்படுத்து,   நற்செயலால் மனிதப் பணி செய்து, அன்பின் விளக்கை ஏற்று!

காவடி எடுக்க வேண்டாம், அறிவின் விளக்கை ஏற்று! மனிதநேயத்தைப் பணியாக்கி, உண்மையான மனிதனாகு!”

பகுத்தறிவைப் பயன்படுத்தி நூலை எடு, காவடி எடுத்தால் களவுப்பழக்கம் தொற்றிக்கொள்ளும்!’’ என்று கவிதை வாசித்தார்.

இந்த நிலையில் இவர் மீது அப் பள்ளியில் பணிபுரியும் சில ஆசிரியர்கள் ஹிந்துத்துவ அமைப்பினருக்கு அவர் கவிதை வாசிக்கும் காணொலியை அனுப்பி உள்ளனர்.

இதனைக்கொண்டு தங்களின் மத உணர்வுகளை புண்படுத்தி விட்டார் என்று ஹிந்து அமைப்பினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து ஆசிரியர் ரஜினீஸ் கங்கவார் மீது காவல்துறை வழக்குப் பதிந்து கைதுசெய்து சிறையில் அடைத்தது. உத்தரப் பிரதேச அரசு உடனடியாக அந்த  ஆசிரியரைப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஹிந்துத்துவ அமைப்பு புகார் கொடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே அரசும் காவல்துறையும் புயல்வேகத்தில் நடவடிக்கை எடுத்துள்ளன.

‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் உத்தரப்பிரதேச சாமியார் அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை போலும் அறிவியலைப் பரப்பி, படிக்கச் சொன்ன ஆசிரியருக்குக் கைது தான் பரிசோ? வெட்கக் வெட்கம்!’’ என்று சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *