பா.ஜ.க. ஆளும் ஒடிசாவில் கொடூரம்

viduthalai
2 Min Read

பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்த மாணவி
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புவனேசுவரம், ஜூலை 14-  பாஜக ஆட்சியில் அமர்ந்த  பின்பு ஒடிசா மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமான அளவில்  அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம்  ஒரே வாரத்தில் 3 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் ஒரு சிறுமி படுகொலை செய்யப் பட்டார். தொடச்சியாக பாலியல் வன் கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் நாட்டு  குடிமக்களை,“ஒடிசா மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம்” என அறிவுறுத்தியுள்ளன.

மாணவிக்கு மிரட்டல்

ஒடிசாவின் பாலசோரில் உள்ள பக்கீர் மோகன்  கல்லூரியில் ஒருங்கிணைந்த பி.எட்.  படிப்பு படித்து வந்த மாணவி ஒருவருக்கு, அவரது துறைத் தலைவரான சமீர் குமார் சாஹு என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். தான் சொல்வதை கேட்காவிட்டால், எதிர்காலத்தை பாழாக்கி விடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த  மாணவி ஜூலை ஒன்றாம் தேதி கல்லூரியின் உள்விசாரணைக் குழுவிடம் புகார்  அளித்துள்ளார். 7 நாட்களில் நடவடிக்கை எடுக்கப் படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சம்பவத்தன்று மாணவி தன்னைச் சந்தித்து,  மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகக் கூறிய தாகவும், துறைத் தலைவரை அழைத்து விசாரித்தபோது அவர் குற்றச் சாட்டுகளை மறுத்ததாகவும், மாணவி தனது புகாரில் உறுதியாக இருந்ததாகவும், கல்லூரி முதல்வர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.

தீ பற்றி எரிய வளாகத்தில் ஓடிய மாணவி

இந்நிலையில், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, 12.7.2025 அன்று சக மாணவர்களு டன் கல்லூரி வாயிலில் பாலியல் துன்புறுத்ததலால் பாதிக்கப்பட்ட மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது திடீரென கல்லூரி முதல்வர் அலுவலகம் அருகே ஓடிய மாணவி, தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத் துக்கொண்டார். தீப்பற்றிய நிலையில் கல்லூரி வளாகத்தில் ஓடும் அவரது  காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் காப்பாற்ற முயன்ற சக மாணவர் ஒருவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.

இந்தக் கோர சம்பவத்தில், மாணவிக்கு 95 சதவீத தீக்காயங் களும், அவரைக் காப்பாற்ற முயன்ற மாணவருக்கு 70 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. இருவரும் புவனேசுவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அம்மாநில உயர்கல்வித் துறை, துறைத் தலைவர் சமீர் குமார் சாஹு மற்றும்  முதல்வர் திலீப் கோஷ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும் துறைத் தலைவரை காவல்துறை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *