மரு. நா.மோகன்தாஸ்
இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மேனாள் தலைவர்
குருதிக் கொடை வழங்கலாமா? இரத்தம் கொடுத்தால் உடல் சோர்வு ஏற்படுமோ? என்ற பயம் எல்லோரிடமும் பொதுவாக காணப்படுகிறது. யார் யார் இரத்த தானம் செய்யலாம் என்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது, என்பது பற்றியும் பார்ப்போம்.
உடல் நலத்துடன் உள்ள ஆண், பெண் யாவரும் இரத்ததானம் வழங்கலாம்.
18 வயதுக்கு மேல் 60 வயதான, குறைந்தது 45 கிலோ எடையுள்ளவர்கள் இரத்தமளிக்கலாம்.
ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் வழங்கலாம்.
பொதுவாக இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமுக்கு மேலும், இரத்த அழுத்தம் இயல்பானதாகவும் (100-140/60-90 மி.மி./மெர்குரி) இருக்க வேண்டும்.
நமது உடலில் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. அதில் கொடையாக நாம் கொடுக்கும் இரத்தத்தின் அளவு 350 மில்லி மட்டுமே. இரத்ததானம் செய்ய பத்து நிமிடங்கள்தான் தேவை. இரத்தம் கொடுத்த அடுத்த 15 நிமிடங்களுக்குப் பிறகு நாம் இயல்பான வழக்கமான அலுவல்களைத் தொடங்லாம்.
பத்திலிருந்து இருபத்தொரு நாட்களில் நமது உடலில் புது இரத்தம் ஊறி வழங்கப்பட்ட இரத்தத்தினை ஈடுசெய்கின்றது.
ஆணுக்கு ஒரு கிலோகிராம் எடைக்கு 76 மில்லி லிட்டர் இரத்தம் உள்ளது. பெண்ணுக்கு ஒரு கிலோகிராம் எடைக்கு 66 மில்லி லிட்டர் இரத்தம் உள்ளது. ஒருவர் 12 சதவீத இரத்த இழப்பை எவ்வித பாதிப்பும் இன்றி சமாளித்துவிட முடியும். இரத்த தானம் செய்யும்போது ஏற்படும் இரத்த இழப்பு 8 சதவீதம் மட்டுமே.
பொதுவாக நமது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் 120 நாட்கள் வரைதான் உயிருடன் இருக்கும். பிறகு அவை தானாகவே அழிந்து புதிதாக உற்பத்தியாகி விடும் என்பதை நாம் நினைவில் கொண்டால் இரத்தம் வழங்குவதில் நமக்கு பயம். சோர்வு ஏற்படாது.
இரத்தானம் கொடுப்பதற்கு முன் உங்கள் உடல் பரிசோதிக்கப்பட்டு எடை இரத்தக் கொதிப்பு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அறியப்படுகிறது. உங்கள் முழு ஒத்துழைப்பு மற்றும் சம்மதத்துடன் தான் இரத்தம் எடுக்கப்படுகிறது. உங்களுக்கு ஏதாவது நோய் இருந்தால் அல்லது போதை மருந்து சாப்பிடும் பழக்கம் அல்லது ஏதாவது மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிடுபவராக இருந்தால் மருத்துவரிடம் முன்பே கூறிவிட வேண்டும். விமானப் பணியாளர்கள், நீண்ட தூரம் கனரக வாகனங்கள் செலுத்தும் ஓட்டுநர்கள், மிக உயரமான கட்டடங்களில் பணி புரிவோர் இவர்களெல்லாம் வேலைக்குச் செல்வதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாக இரத்தம் வழங்கலாம். நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து இரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. இரத்த தானம் செய்ய 10 நிமிடங்களே ஆகும்.
யார் இரத்தம் கொடுக்கலாம்?
சிலருக்கு இரத்த தானம் கொடுக்க விருப்பமிருக்கும். ஆனால், நமக்கு வியாதி இருக்கின்றதே நாம் இரத்தம் கொடுக்கலாமா என்று சந்தேகம் வரும். அவர்களுடைய சந்தேகத்தினை தெளிவுபடுத்த கீழே உள்ள அட்டவணை உதவும்.
சளி, புளு, இருமல், மூக்கடைப்பு – கொடுக்கலாம்
ஆஸ்மா உள்ளவர்கள் – மூச்சுத் திணறல், நெஞ்சுவலி நின்ற பிறகு கொடுக்கலாம்.
ஆஸ்மாவிற்கு கார்டிசோன் மாத்திரை சாப்பிடுபவர்கள் – கொடுக்க வேண்டாம்.
பிரசவம் அல்லது குழந்தை பிறந்தவுடன் – – குழந்தை பிறந்த 6 மாதம் கழித்துக் கொடுக்கலாம்.
கருச்சிதைவு (அபார்ஷன்) – 6 மாதம் கழித்து கொடுக்கலாம்.
குழந்தைக்கு பால் கொடுப்பவர்கள் – குழந்தைக்கு பால் கொடுப்பதை நிறுத்திய பின் கொடுக்கலாம்.
பெரிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் – 6 மாதத்திற்கு பிறகு கொடுக்கலாம்.
சிறிய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் – 3 மாதத்திற்கு பிறகு கொடுக்கலாம்.
புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் – கொடுக்கவே கூடாது.
பல் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் – 1 மாதம் கழித்து கொடுக்கலாம்.
பல் பிடுங்கிய பின் இதய வலி, இதய நோய்க்காக மாத்திரை சாப்பிடும்போது – 3 நாட்களுக்குப் பிறகு கொடுக்க வேண்டாம்.
அதிக இரத்தக் கொதிப்பு இருந்து மாத்திரை சாப்பிட்டபின் சரியான நிலையில் இருக்கும்போது – பரிசோதனையின்போது இரத்தக் கொதிப்பு சரியாக இருந்தால் கொடுக்கலாம்.
பைபாஸ், திறந்த இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் – கொடுக்கவே கூடாது.
மையோகார்டியல், இதயத்தமனி கார்டியோ வாஸ்குலர் பாதிப்பு உள்ளவர்கள் – கொடுக்கவே கூடாது.
வலிப்பு, நரம்பு கோளாறு ஏற்பட்டவர்கள் – வலிப்பு மாத்திரையை நிறுத்திய பின் 2 ஆண்டுகளில் வலிப்பு ஏற்படாமல் இருந்தால் கொடுக்கலாம். இல்லையென்றால் கூடாது.
அடிக்கடி மயக்கம், நாளமில்லா சுரப்பு குறைபாடு – கொடுக்க வேண்டாம்.
ஆன்டிடெட்டனஸ், ஆன்டிவெனம், ஆன்டி டிப்தீரியா போன்ற தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் – 4 வாரங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.
நாய் கடிக்கான சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களும், மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு இம்யூனோ குளோபுலின், காமாகுளோபுலின் எடுத்துக் கொண்டவர்கள் – 12 மாதங்களுக்குப் பிறகு கொடுக்கலாம்.
மஞ்சள் காமாலை பி மற்றும் சி இரத்தம் அல்லது கூறுகள் பெற்றுக் கொண்டவர்கள் – கொடுக்க வேண்டாம். 12 மாதங்களுக்கு பிறகு கொடுக்கலாம்.
எச்.அய்.வி. – கொடுக்கவே கூடாது.
மலேரியா – சிகிச்சைக்குப் பிறகு நல்ல நிலையில் இருந்தால் 3 மாதத்திற்குப் பிறகு கொடுக்கலாம்.
காசநோய் – 5 ஆண்டுகளுக்கு கொடுக்க வேண்டாம்.
சிறுநீரில் சீழ், சிறுநீர் பை புண் – 6 மாதத்திற்கு கொடுக்க வேண்டாம்.
சிறுநீரக செயலிழப்பு – கொடுக்க வேண்டாம்.
குடல் புண் அழற்சி, இரத்த வாந்தி – கொடுக்க வேண்டாம்.
கல்லீரல் நோய் – கொடுக்க வேண்டாம்.
டிப்திரியா, கக்குவான் போன்ற வகைக்கு – தடுப்பு ஊசி போட்டபின் கொடுக்கலாம்.
டைபாய்டு, காலரா, போலியோ, பொன் அம்மை சின்ன அம்மை,
– இரண்டு வாரம் கழித்து கொடுக்கலாம்.
இரத்த வங்கிகள் முழு இரத்தத்தையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த பல்வேறு கூறுகளாகப் பிரிக்கின்றன. முக்கிய கூறுகள்சிவப்பு இரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள், பிளாஸ்மா மற்றும் கிரையோபிரிசிபிடேட் ஒவ்வொரு கூறுகளும் பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கு உதவுகின்றன.
முக்கிய கூறுகளின் முறிவு இங்கே:
இரத்த சிவப்பணுக்கள் (RBCs):
இந்த செல்கள் உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கொண்டு செல்கின்றன மற்றும் இரத்த சோகை மற்றும் இரத்த இழப்பைக் குணப்படுத்துவதற்கு முக்கியமானவை.
பிளேட்லெட்டுகள்:
இந்த கூறுகள் இரத்த உறைதலுக்கு உதவுகின்றன மற்றும் இரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் த்ரோம்போசைட்டோபீனியாவுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன.
பிளாஸ்மா:
இரத்தத்தின் திரவப் பகுதியான பிளாஸ்மா, உறைதல் காரணிகள் மற்றும் புரதங்களைக் கொண்டுள்ளது, மேலும் கல்லீரல் நோய், தீக்காயங்கள் மற்றும் உறைதல் காரணி குறைபாடுகள் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.
கிரையோப்ரிசிபிடேட்:
இரத்தப்போக்கு மற்றும் உறைதல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் சில உறைதல் காரணிகளின், குறிப்பாக ஃபைப்ரினோஜனின் செறிவூட்டப்பட்ட மூலமாகும்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு இரத்ததானம் செய்வது அவசியம். மேலும், பிரசவ நேரம், அறுவை சிகிச்சையின்போதும் இரத்த தானம் உயிரைக் காக்க பயன்படுகிறது.