நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: தேர்தல் ஆணையம் திட்டம்

viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூலை 14 பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்த்த 3 கோடி பேர் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்காக பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம்

இதன் மூலம், சிறுபான்மையினர், பட்டியல் இனத்தினர் ஆகியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அவர்களது வாக்குரி மையைப் பறிக்க முயற்சி நடப்ப தாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி யுள்ளன. பீகாரைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்த தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதை விசாரித்த நீதிபதிகள், குடியுரி மையைப் பரிசோதிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேசன் அட்டை ஆகிய வற்றையும் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தனர். எனினும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம், அரசியல் சாசனப்படி கட்டாயம் எனக்கூறிய நீதிபதிகள் இந்த நடவடிக்கையைத் தொடர அனுமதி அளித்தினர். மேலும் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை இம்மாதம் 28-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், மேற்படி நடவடிக்கையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் நாடு முழுவதும் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்த வழக்கின் அடுத்த விசா ரணை 28-ஆம் தேதி நடை பெறும் நிலையில், அதன் மீது பிறப்பிக்கப்படும் உத்தரவைப் பொறுத்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக சில மாநிலத் தேர்தல் அதிகாரிகள், அங்கு கடைசியாக சிறப்புத் திருத்தம் செய்யப்பட்டதன் அடிப்படையிலான வாக்காளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு உள்ளனர். அந்த வகையில் டில்லி தேர்தல் அதிகாரி 2008-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார். உத்தரகாண்டில் 2006-ஆம் ஆண்டு பட்டியலும் அந்த மாநில தேர்தல் ஆணையை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

பல மாநிலங்களில் 2002 மற்றும் 2004-ம் ஆண்டுக்கு இடையே தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. முன்னதாக வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாகக் குடியேறியிருப்பவர்களை அவர்களது பிறப்பிடத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்காக நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *