பெரியார் மருந்தியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

viduthalai

திருச்சி, ஜூலை 13– திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன் நேற்று முன்தினம் (11.07.2025) மருந்தியல் துறை வளர்ச்சியில் ‘செயற்கை நுண்ணறிவின் தாக்கம்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் துவக்க விழா காலை 10 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமை வகித்து மருந்தியல் துறை வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். சென்னை மருத்துவக் கல்லூரியின் மருந்தியல் துறை உதவிப் பேராசிரியரும், பெரியார் மருந்தியல் கல்லூரியின் மேனாள் மாணவியுமான முனைவர் ஆர்.விஜயபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத் தேவைகள் குறித்து உரையாற்றினார். முன்னதாக படித்து முடித்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கல்லூரிக்கு வருகை தந்திருப்பதில் தாம் பெருமகிழ்ச்சி யடைவதாகவும் இப்பெரும் வாய்ப்பை வழங்கிய கல்லூரியின் நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் தம்முடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மருந்தியல் துறை வளர்ச்சிக்கு…

மேலும் தமக்கு கல்வி கற்பித்த பேராசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்ததோடு தாம் பெற்ற பல்கலைக்கழக பதக்கம் பாராட்டுகள் அனைத்திற்கும் காரணம் பெரியார் மருந்தியல் கல்லூரி என்பதனை மிகவும் பெருமிதத்துடன் கூறினார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதியுதவியுடன் இக்கருத்தரங்கம் நடைபெறுவது மிகவும் பாராட்டுக்குரியது என்றும் ஆராய்ச்சித் துறையில் பங்கெடுக்க ஆர்வமுள்ளமாணவர்கள் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் இணையதள பதிவுகளை தொடர்ந்து கவனித்து தமக்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து மருந்தியல் துறை வளர்ச்சிக்கு துணை நிற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அது மட்டுமல்லாமல், மாணவர்கள் முதலில் தங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். துரித உணவுகளை கட்டாயம் தவிர்த்து, சத்தான சரிவிகித உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் வாசிப்புப் பழக்கம்

அதேபோல் மாணவர்கள்அதிகம் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு எப்படி உடற்பயிற்சி உதவிபுரிகின்றதோ அதேபோல் அறிவு மேம்பாட்டிற்கு வாசிப்புப் பழக்கம் துணை நிற்கின்றது. நமது கல்வி நிறுவனத்தின் தலைவர் ஆசிரியர் அவர்கள் 92 வயதைக் கடந்தும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு அத்தகைய வாசிப்பு பழக்கங்களும் ஒரு காரணம். இன்றைய மாணவ சமுதாயம் எங்கு சென்றாலும் ஒளிப்படம் எடுப்பது பதிவுகளை உடனடியாக அலைபேசியில் போடுவது. மற்றவர்களின் பதிவுகளை கண்டு களிப்பதையும் அவர்களோடு ஒப்பிடுவதையும்தான் செய்து கொண்டிருக்கின்றனர்.

சூழ்நிலைகளை இரசிக்கப் பழக வேண்டும். அனைத்திலும் இருக்கக் கூடிய நேர்மறைகளை பார்க்கும் பொழுதுதான் நம்முடைய வளர்ச்சி எளிதாகின்றது. நமக்கென்று ஒரு தனித்திறனை வளர்த்துக் கொண்டு, உண்மை, நேர்மை மற்றும் கடின உழைப்புடன் செயல்பட்டால் நிச்சயம் சாதிக்க முடியும். திரைப்படங்களில் வருபவர்கள் உண்மையான கதா நாயகர்கள் அல்ல. நாட்டின் பாதுகாப்பிற்காக உழைப்பவர்களும் நோயிலிருந்து காக்கக்கூடிய நலவாழ்வுத் துறையினரும், ஆராய்ச்சியாளர்களும்தான் உண்மையான கதாநாயகர்கள். அப்படிப்பட்ட மாணவர்கள் மருந்தியல் துறையில் அதிகம் உருவாக வேண்டும். அதற்கு இதுபோன்ற கருத்தரங்குகள் துணை நிற்கும் என்றும் உரையாற்றினார்.

இவ்விழாவில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்து உரையாற்றினார். முன்னதாக மருந்தாக்கவியல் துறைத் தலைவர் முனைவர் இரா.இராஜகோபாலன் வரவேற்றார். பேராசிரியர் எஸ்.பிரிய தர்ஷினி நன்றி கூறினார்.

தமிழ்நாடு

புதுமைகளைப் படைக்கும் செயற்கை நுண்ணறிவு

தொடர்ந்து முதல் அமர்வில் சிறப்பு விருந்தினர் முனைவர்
ஆர்.விஜயபாரதி, “மூலிகை மருந்துகள் தயாரிப்பிற்கான ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” என்ற தலைப்பில் தமது முதல் அமர்வினை நிறைவு செய்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இரண்டாவது அமர்வாக கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வி.சங்கர் மருந்து தயாரிப்பு மற்றும் விநியோக முறைகளில் புதுமைகளை படைக்கும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

உள்கட்டமைப்பு வசதிகளை…

கருத்தரங்கின் நிறைவு விழா மாலை 4.30 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை  தலைமையில் நடைபெற்றது. நிறைவு விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் கோயம்புத்தூர் பிஎஸ்ஜி மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் வி.சங்கர் 200க்கும் மேற்பட்ட மருந்தியல் துறை சார்ந்த மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கெடுத்தமைக்கு தமது பாராட்டுகளை தெரிவித்ததோடு மருந்தியல் துறையில் மிக அருமையான உள் கட்டமைப்பு வசதிகளை மாணவர் களுக்கு வழங்கியுள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிர்வாகத்தினையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் 90களில் இதுபோன்ற கருத்தரங்குகள், மாநாடுகள் மாணவர்களுக்கு கிடைத்ததில்லை. தற்போதுள்ள மாணவர்களுக்கு இப்படிப்பட்ட நல்வாய்ப்புகள் அதிகம் கிடைத்திருக்கின்றது. ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்வதற்கு தடையாக சமூக ஊடகங்கள் அவர்களை ஆக்கிரமித்துள்ளன. சுயக்கட்டுப்பாடுள்ள மாணவர்களால்தான் அதிகம் சாதிக்க முடியும். அத்தகைய சுயக்கட்டுப்பாட்டை அடைய நீங்கள் உங்கள் பெற்றோரையும் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தினை எண்ணிப் பார்த்தாலே போதும். அது தானாக வந்துவிடும்.

கற்பித்தலை…

தாயின் அன்பையும் தந்தையின் அக்கறையினையும் ஆசிரியர்களின் உணர்வு கலந்த புரிதல் மற்றும் கற்பித்தலை செயற்கை நுண்ணறிவு கொடுத்துவிட முடியாது.

அறிவார்ந்த புதுமைகள் நாளுக்குநாள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அதற்கேற்ற அறிவாற்றலை நாம் வளர்த்துக் கொண்டால் நிச்சயம் நாமும் ஒரு வெற்றியாளர்தான் என்று உரையாற்றி சிறந்த வாய்மொழி ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தலில் சிறந்த 5 கட்டுரைகளுக்கு பரிசுகளை வழங்கி, கருத்தரங்கில் பங்குகொண்ட மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஒருநாள் கருத்தரங்கிற்கான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் மற்றும் குறுந்தகடு வெளியிடப்பட்டது. இந்நிறைவு விழா நிகழ்ச்சியில் மூலிகை மருந்தியல் துறைத் தலைவர் முனைவர் எஸ்.ஷகிலா பானு அனைவரையும் வரவேற்றார். பேராசிரியர் ஏஞ்சலினா ஜெனிபர் சாமி நன்றி கூறினார். தேசிய அளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் 10 மருந்தியல் கல்லூரிகளிலிருந்து 214 பேர் பங்கு கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *