அகமதாபாத் விமான விபத்து எரிபொருள் சப்ளை நின்றதே விபத்துக்கு காரணம் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

viduthalai

புதுடில்லி, ஜூலை 13– விமான இன்ஜினுக்கான எரிபொருள் சப்ளை எதிர்பாராத வகையில் திடீரென நின்றதுதான் அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்று புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ள முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம் கடந்த மாதம் 12ஆம் தேதி புறப்பட்டு சென்றது. ஓடு பாதையில் இருந்து வானில் பறந்த விமானம் திடீரென கீழே இறங்கி, விமான நிலையத்தின் அருகில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.

விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், 15 பக்க முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஅய்பி) நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12ஆம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787 ரக விமானம், ஓடுபாதையில் இருந்து மணிக்கு 283 கி.மீ வேகத்தில் மேலெழும்பியது. வானில் 3 விநாடிகள் வரை பறந்து 333 கி.மீ வேகத்தை எட்டியதும், விமானத்தின் என்-1, என்-2 ஆகிய இரு இன்ஜின்களின் எரிபொருள் சுவிட்ச்கள், ஒரு விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து செயலிழந்து ‘ஆஃப்’ ஆனதால், இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் செல்லவில்லை.

எரிபொருள் சிக்கல்

எரிபொருள் செல்வது திடீரென நின்றுபோனதால், இன்ஜினுக்குள் சுழலும் விசிறியின் வேகம் குறைந்தது. இதனால், உந்து சக்தி கிடைக்காததை உணர்ந்த ஒரு விமானி, அனைத்து சுவிட்ச்களும் சரியாக உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது எரிபொருள் சுவிட்ச்‘ஆஃப்’ ஆகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மற்றொரு விமானியிடம், ‘‘எரிபொருள் சுவிட்ச்களை ஏன் ‘ஆஃப்’ செய்தீர்கள்?’’ என்று கேட்கிறார். ‘‘நான் ஆஃப் செய்யவில்லை’’ என்று அவர் அதிர்ச்சியுடன் கூறுகிறார்.

இந்த நிலையில், சுவிட்ச் ஆஃப் ஆன 10 விநாடிகளுக்கு பிறகு, விமானத்தின் முதல் எரிபொருள் இன்ஜின் மீண்டும் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. அடுத்த 4ஆவது விநாடியில் 2ஆவது இன்ஜினின் எரிபொருள் சுவிட்ச் ‘ஆன்’ செய்யப்பட்டது. இதனால் விமானத்தின் முதல் இன்ஜின் மீண்டும் இயங்கத் தொடங்கியது. 2ஆவது இன்ஜின் இயங்குவதற்குள், 213.4 டன் எடை மற்றும் 54,200 கிலோ எரிபொருளின் எடையுடன் விமானம் மீண்டும் வானில் எழும்புவதற்கு தேவையான உந்து சக்தி கிடைக்காமல் கீழே இறங்கியது.

அடுத்த 9ஆவது விநாடியில் பைலட் ‘‘மே டே, மே டே, மே டே’’ என விமான கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, விமானியிடம் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரி, விவரம் கேட்கிறார். ஆனால் பதில் இல்லை. சிறிது நேரத்தில் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் மேலெழும்பிய 26 விநாடிக்குள் அனைத்தும் நடந்து விபத்து நிகழ்ந்துள்ளது. விமான இன்ஜினின் வேகம், குறைந்தபட்ச அளவை விட குறைந்ததால், விமானத்தில் உள்ள ‘ரேம் ஏர் டர்பைன்’ (ஆர்ஏடி), விமானத்தில் இருந்து வெளியே வந்துள்ளது. பறவைகள் மோதியதற்கான அறிகுறி எதுவும் இல்லை.

விமான நிலைய சுற்றுச்சுவரை தாண்டுவதற் குள்ளாகவே, விமானத்தின் உயரம் குறையத் தொடங்கியுள்ளது. விமான இறக்கையில் உள்ள பிளாப் தகடுகள்5 டிகிரியில் இருந்துள்ளன. விமானசக்கரம் கீழ் நோக்கியே இருந்துள்ளது. இவை எல்லாமே விமானம் மேலெழும்பும் போது பின்பற்றப்படும் விதிமுறைகள்தான். விமானத்தின் பராமரிப்பு ஆவணங்களை ஆய்வு செய்தபோது, விமானத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் கருவி (விடி-ஏஎன்பி) கடந்த 2019 மற்றும் 2023இல் மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காரணத்துக்கும், எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களுக்கும் தொடர்பு இல்லை. எரிபொருள் சுவிட்ச்சில் பாதிப்பு உள்ளதாக கடந்த ஆண்டில் இருந்து எந்த புகாரும் தெரிவிக்கப்படவில்லை.

விமானத்தின் விமானிகள், கேபின் பணியாளர்கள் லண்டன் செல்வதற்கு முதல் நாளே அகமதாபாத் வந்துவிட்டனர். அவர்கள் போதிய ஓய்வும் எடுத்துள்ளனர். அவர்கள் மது அருந்தியுள்ளனரா என்ற பரிசோதனையும் விமான நிலையத்தில் செய்யப்பட்டு, விமானத்தை இயக்குவதற்கு தகுதியானவர்கள் என ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறுதி அறிக்கை அல்ல: இந்த அறிக்கை குறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:

ஏஏஅய்பி தாக்கல் செய்திருப்பது இறுதி அறிக்கை அல்ல. ஆரம்ப கட்ட அறிக்கைதான். இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. ஏஏஐபியுடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களுக்கு தேவையானதை செய்து வருகிறோம். இறுதி அறிக்கை விரைவில் வெளியாகும். அப்போதுதான், விபத்து குறித்து ஒரு முடிவுக்கு வரமுடியும். நாம் உலகிலேயே மிகச் சிறப்பான விமானிகள், விமான ஊழியர்களை வைத்துள்ளோம். அவர்கள்தான் நமது விமான போக்குவரத்து தொழிலின் முதுகெலும்பாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *