திருவனந்தபுரம், ஜுலை 13- தமிழ்நாட்டில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி என்று கேரளாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசினார். இதற்கு பதிலடியாக, தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. அரசு அமையும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. – பா.ஜனதா கூட்டணி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க மெகா கூட்டணி அமைக்க
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கூட்டணி சேர்ந்துள்ளது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்தக் கூட்டணியை உறுதி செய்ததுடன், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இதற்கு விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும் என்றார்.
ஆட்சியில் பங்கு
பின்னர் மதுரை வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று மீண்டும் கூறினார்.
சமீபத்தில் ‘தினத்தந்தி’க்கு அமித்ஷா அளித்த சிறப்புப் பேட்டியிலும் இதே கருத்தை உறுதிபட தெரிவித்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அதில் பா.ஜனதாவின் பங்கு இருக்கும் என்றார்.
தற்போது ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘சட்டமன்றத் தேர்தலும், தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். ஆட்சியில் பா.ஜனதா பங்கேற்கும் என்று கூறியிருந்தார்.
கேரளாவில் அமித்ஷா
இந்தநிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்த பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலக கட்டடம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-
பா.ஜனதாவை வடமாநிலக் கட்சி என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் சித்தரித்து வருகின்றன. அசாம், திரிபுரா மற்றும் ஒடிசாவில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் என்று நாங்கள் கூறியபோது இவர்கள் ஏளனம் செய்தனர். ஆனால் இப்போது அந்த மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி
2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம். தமிழ்நாடு, கேரளாவில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும். அப்போது தான் கட்சிக்காக உயிர் தியாகம் செய்த தொண்டர்களின் கனவு நனவாகும்.
கேரளாவை மாறி, மாறி ஆட்சி செய்த காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் வரலாற்று சாதனை ஊழல் மட்டுமே. ஊழலில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல. அதற்கு ஏராளமான உதாரணங்களை கூறலாம். ஊழலில், காங்கிரசும், கம்யூனிஸ்டு கட்சிகளும் அண்ணன், தம்பிகள்.
மூடப்படும் நிலைக்கு காங்கிரஸ் வந்து விட்டது. மத்தியில் கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடந்து வருகிறது. கேரளாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பா.ஜனதாவால் மட்டுமே முடியும். அது வரும் தேர்தலில் சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனிசாமி பதிலடி
ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து விட்டு 11.7.2025 அன்று இரவு புதுவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார். நேற்று அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று கூறியிருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இந்த பதில் கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.