சிம்லா ஜூலை 13– ஹிமாசல பிரதேசத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் 92 பேர் உயிரிழந்துள்ளனர்; மேலும் 172 பேர் காயமடைந்துள்ளனர் என மாநில அவசர கால செயல்பாட்டு மய்யம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 249 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில், மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தில் மட்டும் 207 சாலைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், சுமார் 463 மின்மாற்றிகள் மற்றும் 781 குடிநீர் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில், ஜூலை 18 வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.