புதுடில்லி, ஜூலை 13 பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் 18 நாள் தங்கியிருந்த இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா நாளை மறுநாள் (15.7.2025) பூமிக்கு திரும்புகிறார். இந்திய விண்வெளி ஆய்வு மய்யமான இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் நாசா இணைந்து ஆக்சியம் -4 திட்டத்தின் மூலமாக 4 விண்வெளி வீரர்களை பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த குழு ஜூன் 26ஆம் தேதி கலிபோர்னியாவில் இருந்து பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டுச்சென்றனர்.
இந்த குழுவில் இந்திய விமானப்படையின் அனுபவம் வாய்ந்த சுபான்ஷூ சுக்லாவும் இடம்பெற்றார். இதன் மூலமாக 41 ஆண்டுகளுக்கு பின் விண்வௌிக்கு சென்ற 2வது விண்வெளி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். 18 நாட்கள் ஆய்வு பணியை முடித்த விண்வெளி வீரர்கள் குழு நாளை (14.7.2025) பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய வானூர்திமற்றும் விண்வெளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தகவலின்படி, விண்வெளி வீரர்கள் வரும் டிரான்கன் விண்கலம் ஜூலை 15ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு கலிபோர்னியா கடற்பகுதியில் விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள் 7 நாட்கள் மறுவாழ்வு பயிற்சிக்கு பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.
சுக்லாவின் பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான பயணத்துக்காக இஸ்ரோ ரூ.550கோடியை செலுத்தியுள்ளது. விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் இந்த விண்வெளி பயண அனுபவமானது 2027ஆம் ஆண்டில் மனித விண்வெளி பயணத்திட்டமான ககன்யானை திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் விண்வெளி நிறுவனத்துக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.