திருவள்ளூர் ஜூலை 13 திருவள்ளூர் அருகே இன்று அதிகாலை டீசல் ஏற்றி வந்த டேங்கர் ரயில் தடம் புரண்டதில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று மோதியதால் ஏற்பட்ட தீ, பலத்த காற்றின் காரணமாக சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக வேகமாக எரிந்து வருகிறது. இந்த விபத்து காரணமாக சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த விபத்துபற்றிய விவரம் வருமாறு: இன்று அதிகாலை 5:30 மணியளவில் சென்னை மணலியில் இருந்து திருப்பதி நோக்கி டீசலை ஏற்றிச் சென்ற டேங்கர் ரயில் திருவள்ளூர் அருகே தண்டவாள விரிசல் காரணமாக திடீரென தடம் புரண்டது. தடம் புரண்டதால் ஏற்பட்ட உராய்வு காரணமாக ஒரு டேங்கரில் தீப்பிடித்திட, பின்னர் தீ மற்ற பெட்டிகளுக்கும் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. இதனால் பல மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்ற டேங்கர் பெட்டிகளைத் தனியாகப் பிரித்து, 500 மீட்டர் தொலைவில் நிறுத்தி வைத்தனர். பிரித்து வைக்கப்பட்ட டேங்கர்களில் அதிக வெப்பம் காரணமாக தீப்பிடிப்பதைத் தவிர்க்க, அவற்றின் மீது தொடர்ந்து தண்ணீர் ஊற்றி குளிர்விக்கும் பணிகளும் நடைபெற்றன. சிறப்பு இராசாயனம் மற்றும் நுரைகளைக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவிலேயே தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்ல வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
ரயில் சேவை பாதிப்பு
இந்த தீ விபத்து காரணமாக வானுயர எழுந்த அடர்ந்த புகைப் படை, திருவள்ளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் தோல் அரிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தால், உறங்கிக் கொண்டிருந்த மக்கள் புகையால் எழுப்பப்பட்டு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டதால் பீதியடைந்தனர். சுற்றியிருந்த மக்கள் வீடுகளை விட்டு தொலைவுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
பொதுமக்கள் அவதி
விபத்து காரணமாக ரயில் பாதையில் உள்ள சிக்னல் போர்டுகள் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்தன. இதனால் சென்னை – அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் சென்னை நோக்கி வந்த விரைவு ரயில்கள் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
சென்னை – மைசூர் வந்தே பாரத் (20607), சென்னை மைசூர் சகாப்தி (12007), சென்னை – கோவை இன்டர்சிட்டி (12675), கோவை சகாப்தி (12243) ஆகிய விரைவு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப் பட்டுள்ளன.
இதேபோல், சென்னை – மைசூர் (20607) சென்னை – மைசூர் (12007) சென்னை – கோயம்புத்தூர் (12675) சென்னை – கோயம்புத்தூர் (12243) சென்னை – திருப்பதி (16057) சென்னை – பெங்களூர் (22625) சென்னை – பெங்களூர் (12639) சென்னை – நிஜாமாபாத் (16003) உள்ளிட்ட ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தீவிபத்து ஏற்பட்ட உடன்திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கோரிக்கையை ஏற்று, தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 60 பேர் கொண்ட இரண்டு குழுவினர் ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அலுவலகம் செல்வோர் உட்பட ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் சரக்கு ரயில் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரயில்வே ஏ.டி.ஜி.பி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.