மும்பை, ஜூலை 12 மகாராட்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். துணை முதலமைச் சர்களாக ஏக்நாத் ஷிண்டே (சிவ சேனா), அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) உள்ளனர்.
அடக்கு முறை
மோடி 3ஆவது முறையாக பிரதமர் பதவியில் அமர்ந்த பின்பு மற்றும் மகாராட்டிரா வில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்த பின்பும், மாநிலத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறை மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புனேவில் வகுப்புவாத மிரட்டல், சமூக-பொருளாதார புறக் கணிப்புகள் மூலமாக முஸ்லிம்களை வெளியேற்ற பாஜக – ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா குண்டர்கள் அடாவடிச் செயல்களை அரங்கேற்றி வருகின்றனர். மகாராட்டிரா பூர்வீக முஸ்லிம்கள் கடந்த மே 2ஆம் தேதி புனே மாவட்டத்தின் முல்ஷி தாலுகாவில் உள்ள பாட் பகுதியில் அன்னபூர்ணா தேவி சிலை அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மே 5ஆம் தேதி பாட் பகுதியில் பாஜக-ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட பிற வலதுசாரிக் குழுக்களால் பேரணி நடத்தப்பட்டது.
இந்த வெறுப்புப் பேரணிக்குப் பின்பு பாட் மற்றும் பிராங்குட் கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்கள் “மகாராட்டிரா பூர்வீக முஸ்லிம்கள் அல்லாதவர்கள்”. அதனால், அவர்களை புறக்கணிக்க வேண்டும் என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சுவரொட்டிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களுடன் சேர்ந்து இந்துத்துவா குண்டர்கள் ஒரு வகுப்புவாத சூழலை உருவாக்கிய நிலையில், மக்கள் சிவில் உரிமை களுக்கான அமைப்பு, புனே கிராமப்புற காவல் கண்காணிப் பாளர் சந்தீப் சிங் கில்லிடம் புகார் அளித்ததையடுத்து, சுவரொட்டிகள் அகற்றப்பட்டன.
வணிகம் செய்ய நெருக்கடி
சுவரொட்டிகள் அகற்றப்பட்டாலும் பேக்கரிகள், சலூன்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் என முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகளை திறக்க இந்துத்துவா குண்டர்கள் தொடர்ந்து நெருக்கடி அளித்தனர். முஸ்லிம் வணிகர்கள் காவல்துறையில் புகார் அளித்தும்பலன் இல்லை.
இதுதொடர்பாக பவுடில் உள்ள ரோஷன் பேக்கரியின் உரிமையாளர், “காவல்துறையிடம் பலமுறை புகார்கள் அளித்தும், எங்கள் கடைகளை மீண்டும் திறக்க எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்கவில்லை. எங்கள் குடும்பம் 40 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறது. ஆனால் என் தந்தையின் கிராமம் உத்தரப் பிரதேசத்தில் இருப்பதால் நாங்கள் வெளியாட்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளோம். எங்கள் பேக்கரியை மீண்டும் திறக்கவோ அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவோ கூடாது என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது” என கண்ணீருடன் கூறியுள்ளார்.
ரோஷன் பேக்கரியை போன்று அப்பகுதியின் மிகப்பெரிய பேக்கரிகளான நியூ சங்கம், நியூ பாரத் ஆகிய இரண்டும் இந்துத்துவா நெருக்கடிகளால் மூடப்பட்டுள்ளன.
தொழிலாளர்களின்
ஊதியம் பறிப்பு
ஊதியம் பறிப்பு
இதனால் சுமார் 400 தொழிலாளர்களின் அன்றாட ஊதியம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த பேக்கரி முஸ்லிம்களுக்கும், முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்கியது. “எங்கள் ரொட்டியை வீடு வீடாக விற்ற 5 இந்து விற்பனையாளர்கள் இப்போது வேலையில்லாமல் உள்ளனர்,” என்று 32 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நியூ பாரத் பேக்கரியின் உரிமையாளர் கூறினார்.
“இது மதத்தைப் பற்றியது மட்டுமல்ல; இது எங்கள் உயிர்வாழ்வதற்கான வழிகளை அழிப்பது பற்றியது” என அவர் மேலும் கூறினார். மேலும் மசூதி வழிபாடு, அன்றாட இயல்பு வாழ்க்கைக்கு கூட பாஜக – ஆர்எஸ்எஸ் குண்டர்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர். இதனால் முல்ஷி தாலுகாவில் உள்ள பாட் மற்றும் பிராங்குட் கிராமங்களில் முஸ்லிம் மக்கள் வேறு இடத்திற்கு மற்றும் தங்களது சொந்த மாநிலத்திற்குச் சென்றுவிட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.