அமெரிக்க-இஸ்ரேல் ஆயுத வணிகத்தை அம்பலப்படுத்திய அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் மீது அமெரிக்கா நடவடிக்கை

3 Min Read

ஜெனீவா, ஜூலை 12– காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை ஒரு இனப்படுகொலை என்று வெளிப்படையாகக் கூறி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கக் இத்தாலிய மனித உரிமை ஆர்வலரும் மூத்த வழக்குரைஞருமான அல்பானீஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அண்மையில் அவர் அய்நா பாதுகாப்பு கவுன்சிலில் சமர்ப்பித்த அறிக்கையில் காசா இனப்படுகொலையை வைத்து உலகளாவிய பெரு நிறுவனங்கள் லாபம் ஈட்டி வருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இஸ்ரேல் செய்த போர்க்குற்றங்கள், அதன் மூலம் லாபம் ஈட்டிய பெறுநிறுவனங்கள், அதன் நிர்வாகிகள் மீது வழக்கு தொடர்ந்து குற்றவியல் விசாரணை நடத்த பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை அவர் வலியுறுத்தினார். எனவே அல்பானீஸை மவுனமாக்க டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.

இந்நிலையில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் எதிராக “அரசியல் மற்றும் பொருளாதாரப் போருக்குப் பிரச்சாரம் செய்வதாக” குற்றம் சாட்டி, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அல்பானீஸ் மீது தடை விதிப்பதாக அறிவித்தார்.

இதன்மூலம் அமெரிக்காவில் அல்பானீஸ் வைத்திருக்கும் எந்தவொரு சொத்துக்களும் முடக்கப் படுகின்றன. மேலும் அவர் நாட்டிற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை குறித்த செய்தி வெளியிடப்பட்ட பிறகு, எப்போதும் போல நீதியின் பக்கம் உறுதியாக நிற்பதே முடிவு என்று அல்பானீஸ் கூறினார். அய்.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் அமெரிக்காவின் நடவடிக்கையை விமர்சித்தார்.

டிரம்பின் புதிய வரிவிதிப்பு:

கனடா உள்ளிட்ட நாடுகளுடனான
வர்த்தக உறவில் விரிசல்

நியூயார்க், ஜூலை  12– அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தார். பின்னர், இந்த வரிவிதிப்பை ஜூலை 9 ஆம் தேதி வரை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்தக் காலக்கெடு முடிவடைய இருந்தபோது, அதனை ஆகஸ்டு 1 ஆம் தேதி வரை ஒத்திவைத்தார்.

ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல், ஜப்பான், வங்காளதேசம், மலேசியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது குறித்து அந்த நாடுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்களை அனுப்பி வைத்தார். இந்தப் பட்டியலில் கனடா இடம்பெறவில்லை.  இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். அதில், கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 35 சதவீதமாக உயர்த்தப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

‘பென்டானில்’ என்ற வலி நிவாரண மருந்தின் கடத்தலைத் தடுக்க கனடாவை வலியுறுத்தும் முயற்சியாக இது கருதப்படுகிறது. இருப்பினும், இது மட்டுமே கனடாவுடனான சவால் இல்லை என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த வரிவிதிப்பு, அமெரிக்கா-கனடா இடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

பாலஸ்தீன காவல்துறையினருக்கு நவீன பயிற்சி

சிங்கப்பூர் அறவிப்புக்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

சிங்கப்பூர், ஜூலை 12–  2026ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் அரசு பாலஸ்தீன காவல்துறைக்கு பயிற்சி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கவுள்ளது, மேலும் பாலஸ்தீனத் தலைவர்களுக்கு சிங்கப்பூரின் நிர்வாக மற்றும் பொது நிர்வாக பயிற்சி வளங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பாலஸ்தீன மேம்பாட்டிற்கான கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மாநாட்டில் (CEAPAD) தெரிவித்தார்.  மேலும், பாலஸ்தீன மாணவர்களுக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்  துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையை அதிகப்படுத்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.

இஸ்ரேல் கடும் எதிர்ப்பு

2013ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் வழங்கி வரும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவி மூலம் 10 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி(இந்தியா ரூ மதிப்பில் 70 கோடி) முதலீடு செய்யப்பட்டு, சுமார் 800 பாலஸ்தீன வட்டார அதிகாரிகள் பயிற்சி மற்றும் கல்வி வாய்ப்புகளால் பயனடைந்துள்ளனர்.

சிங்கப்பூரில் இத்தகைய மனிதாபிமான உதவிக்கு இஸ்ரேல் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. வெளிநாட்டு அரசுகளின் இத்திட்டங்கள் பாலஸ்தீன மக்களை மேலும் இஸ்ரேலுக்கு எதிராக மோசமான நடவடிக்கை எடுக்க ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று இஸ்ரேல் கூறியுள்ளது

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *