சென்னை, ஜூலை 12– தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரும், ஓய்வு பெற்றவருமான சிறீராமனிடம் கீழடியில் நடந்த மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையைத் தர ஒன்றிய அரசு கோரியிருப்பது தமிழ் நாகரிகத்தை உலகறிய செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கீழடியில் நடந்த மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையைத் தயாரிக்க தொல்லியல் துறையின் முன்னால் இயக்குநர் சிறீராமனுக்கு, ஒன்றிய அரசின் தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல.
கீழடியில் நடந்த 3ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்புகளோ அல்லது தொன்மைக்கு ஆதாரமோ இல்லை என்று கூறியவர் பி.எஸ். சிறீராம். தற்போது அவரிடம் அறிக்கை கேட்டிருப்பது இமாலய தவறு.
2017 முதல், தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை (TNSDA) கீழடியில் நான்காவது கட்ட அகழ்வாராய்ச்சியை நடத்தி வருகிறது. 2024-25 வாக்கில், அகழ்வாராய்ச்சி அதன் பத்தாவது கட்டத்தை அடைந்து நூற்றுக்கணக்கான தொல்பொருட்கள் இதில் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியைச் சிறப்பாக ஆய்வு செய்த அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களிடம் தனது அறிக்கையைத் திருத்தி, தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.
ஆனால் அவர் அறிக்கையைத் திருத்த மறுத்துவிட்டார். மேலும் தனது முடிவுகள் அறிவியல் பூர்வமானது என்றும் தெரிவித்தார். சங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் ஒரு நகர்ப்புற நாகரிகம் இருப்பதைக் குறிக்கும் செங்கல் கட்டமைப்புகள் மற்றும் கலைப்பொருட்களைக் கண்டுபிடித்தார்.
அமர்நாத் ராமகிருஷ்ணா தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகிறார். அசாம், டில்லியைத் தொடர்ந்து சமீபத்தில் கூட நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழடியில் முன்னர் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் தொன்மையான நாகரீத்திற்கு குறிப்பிடத்தக்க ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து வந்தவர் சிறீராமன்.
ஓய்வு பெற்றவரிடம் ஒன்றிய அரசு அறிக்கை கேட்டிருப்பது தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். தமிழர்களின் நாகரிகத்தையும், கலாச்சாரத்தையும் மறைக்க ஒன்றிய அரசு கடுமையாக முயற்சி செய்வது கடும் கண்டனத்துக்குரியது. நேர்மையான ஒளிவு மறைவற்ற புனைவு இல்லாத அமர்நாத் ராமகிருஷ்ணா அறிக்கையை ஒன்றிய அரசு அங்கீகரிக்க வேண்டும்.