நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி கேரளா – தமிழ்நாடு இடையிலான அனைத்து வழிகளிலும் தீவிர கண்காணிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 12– கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழ்நாடு வரும் 20 சாலை வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு

கேரளாவின் மலப்புரம், பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வருவோருக்கு காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்யவும், தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (11.7.2025) கூறியதாவது:

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு உள்ளது. பொதுவாகவே விதிமுறைகளின்படி, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோவை பகுதியில் 10 சாலை வழிகள், நீலகிரி மாவட்டத்தில் 9 சாலை வழிகள், திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சாலை வழி என மொத்தம் 20 வழிகளில் வரலாம். இந்த அனைத்து வழிகளிலும் கண்காணிப்பை பொது சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நாய்க்கடியால் ஏற்படும் ரேபிஸ் வைரஸ் தொற்று பாதிப்பு பெரிய அளவில் இல்லை. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *