மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய மு.ந.நடராசன் கொள்கைப் பிரச்சாரகராக இருந்தவர்! சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது அறிவுக் கொள்கை, சிக்கனக் கொள்கை, சிறப்புக் கொள்கை, தன்மானக் கொள்கை, தொண்டறக் கொள்கையாகும்! புதுவையில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை

8 Min Read

புதுவை, ஜூலை 12 –  இந்தக் குடும்பத்தினுடைய தலைவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய மு.ந.நடராசன் அவர்கள் கொள்கைப் பிரச்சாரகராக இருந்தவர். சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது அறிவுக் கொள்கை, சிக்கனக் கொள்கை, சிறப்புக் கொள்கை, தன்மானக் கொள்கை, தொண்டறக் கொள்கையாகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மணமக்கள்: பா.தமிழ்ச்செல்வன் – ச.சியாமளாதேவி

கடந்த 8.6.2025 அன்று புதுவையில் நடைபெற்ற பா.தமிழ்ச்செல்வன் – ச.சியாமளாதேவி ஆகியோரின் மணவிழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய அன்புச் செல்வர்கள் தமிழ்ச்செல்வன் – சியாமளாதேவி ஆகியோருடைய வாழ்க்கை இணையேற்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா ராஜலட்சுமி அம்மையார்

இந்தக் குடும்பத்தினுடைய தலைவரான மு.ந.நட ராசன் அவர்கள், இன்றைக்கு நம்மிடையே படமாக, பாடமாக இருக்கின்றார். அவருடைய மறைவிற்குப் பின்னாலும், அவர் எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாரோ, அவர் எந்தக் கொள்கைக்காக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்களோ, அந்தக் கொள்கையிலிருந்து கொஞ்சம்கூட பிறழாமல், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதனைச் சிறப்பாக நடத்துவதற்கு முதல் காரணம் என்னவென்றால், அம்மா ராஜலட்சுமி அம்மையார்தான்.

அந்தப் பிள்ளைகளை ஆளாக்கியது மட்டுமல்ல, கொள்கை வழியிலேயே நின்று, தங்களுடைய பிள்ளைகளை ஆளாக்கினார்கள்.

நடராசன் அவர்கள் இந்தக் கொள்கையில் எவ்வளவு தீவிரமாக இருந்தாரோ, அதில் கொஞ்சம்கூட பிசிறு தட்டாமல் இருக்கக்கூடியவர் அம்மா ராஜலட்சுமி அம்மையார்.

நல்ல குடும்பம்,
ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்

இந்த மண்ணில் பிறந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னார், ‘‘நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’’ என்றார்.

அதுபோலவே, இது நல்ல குடும்பம், ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்.

ஆகவே, இம்மணவிழாவில், மகிழ்ச்சியோடும், உறவோடும் நாங்களெல்லோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்த வந்திருக்கின்றோம்.

எங்களுடைய பிரச்சார செயலாளர் மூத்த வழக்கு ரைஞரான அருமைத் தோழர் அருள்மொழி அவர்கள், இங்கே ஒரு கருத்தைச் சொன்னார்.

இக்குடும்பத்தில் நான் கலந்துகொள்ளும் நான்காவது நிகழ்ச்சி!

என்னைப்பற்றி சொல்லும்போது, ‘‘இந்தக் குடும்பத்திற்கு இவர்தான் தலைமை தாங்குகிறார்’’ என்று.

இந்தக் குடும்பத்தில் நான் கலந்துகொள்ளும் நான்காவது நிகழ்ச்சியாகும். முதலாவதாக எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

எவ்வளவுதான் எனக்கு நெருக்கடி இருந்தாலும், இந்த மணவிழாவிற்குத் தேதி கேட்டவுடன் சொன்னேன், ‘‘இது நம்முடைய குடும்பம்; இந்தக் குடும்பத்து நிகழ்விற்குச் செல்லவேண்டும்’’ என்றேன்.

நேற்று காலையில் தஞ்சையில் சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு, திருவாரூரில் ஒரு நிகழ்ச்சி; மதியம் கும்பகோணத்தில் நிகழ்ச்சி. நிகழ்ச்சி முடிந்து இரவு ஒரு மணிக்கு வந்தாலும், களைப்பு, சோர்வு என்பதே எனக்குத் தெரியவில்லை.

அதற்கு என்ன காரணம் என்றால், இது கொள்கைக் குடும்பம்;  இது எங்கள் குடும்பம்; இது நம்முடைய குடும்பம். அந்தக் குடும்பத்தின் மணவிழாவில் பங்கேற்கின்றோம் என்பதுதான்.

எனவே, இந்தக் குடும்பத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் “வருக, வருக” என வரவேற்க நான் கடமைப்பட்டு இருக்கின்றேன்.

1995 ஆம் ஆண்டில்
பாஸ்கரன் – கீதா மணவிழாவினை நடத்தி வைத்தேன்!

இந்தக் குடும்பத்தில் இந்த மணவிழாவினை மட்டும் நான் நடத்தவில்லை. ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், பாஸ்கரன் – கீதா ஆகியோருடைய மணவிழாவினையும் 7.6.1995 ஆம் ஆண்டு நான் தலைமை தாங்கி நடத்தினேன்.

இப்போது அவர்களுடைய மகனுடைய மண விழாவினையும் நடத்துகின்றோம்.

நான் இங்கே வரும்போது, மகளிர் எல்லாம் சேர்ந்து வரவேற்றனர். எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அதற்காக உங்களையெல்லாம் பாராட்டுகிறேன்.

இம்மணவிழாவிற்கான நன்றியுரையை மணமகள் சொல்லவேண்டும். நான்கு வார்த்தையைச் சொல்ல வேண்டியதுதானே!

ஆணாதிக்க சமுதாயமாகவே இந்த சமுதாயம் இருக்கிறது. ஆகவே, மகளிரை முன்னிலைப்படுத்துங்கள்.

பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கவேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்!

முன்பு நம் நாட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள், ‘‘வெற்றிகரமான ஓர் ஆணுக்குப் பின்னால், ஒரு பெண் இருப்பாள்’’ என்று.

அதை பெரியார்தான் மாற்றினார், ‘‘ஏன் பின்னால் இருக்கவேண்டும்; முன்னால் இருக்கட்டும்; அல்லது பக்கத்தில் அமரட்டும்’’ என்றார். ஆகவே, பெண்களுக்குச் சம உரிமை கொடுக்கவேண்டும் என்று சொன்னார்.

இந்த மணவிழாவின் அழைப்பிதழைப் பார்த்தீர்கள் என்றால், ‘‘வாழ்க்கை இணையேற்பு விழா’’ என்றுதான் அச்சிட்டு இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் சமத்துவம், சம உரிமை, சம வாழ்வு – இதுதான் சிறப்பு. இந்த முறையில்தான் இம்மணவிழா நடைபெறுகிறது.

எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!

பாஸ்கரன் – கீதா ஆகியோருடைய மணவிழாவினை 30 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடத்தி, அவர்களுடைய மகன் மணவிழாவினையும் இன்றைக்கு நடத்துவதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறேன் நான்.

இந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் வீழ்வதில்லை; வாழுகிறார்கள் என்பதற்கு இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு.

இங்கே உரையாற்றும்போது நல்லய்யன் சொன்னார், ‘‘நாங்கள் இந்த மணவிழாவினை ஆடம்பரமாகத்தான் நடத்துகின்றோம். ஏனென்றால், இந்தக் கொள்கையைப் பின்பற்றியவர்கள் எல்லாம் தகுதிக் குறைவாக ஆகிவிடுவார்கள்  என்று யாரும் பயப்படாதீர்கள். இந்தக் கொள்கையைப் பின்பற்றி, இப்படிப்பட்ட ஒரு திருமணத்தை எங்களால் நடத்த முடியும்; அந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்கின்றோம் என்று காட்டுவதற்காகத்தான்’’ என்றார்.

அறிவுக் கொள்கை – சிக்கனக் கொள்கை – தொண்டறக் கொள்கை

இங்கே உள்ள பிள்ளைகளையெல்லாம் பாருங்கள். இந்தக் கொள்கை அறிவுக் கொள்கை, சிக்கனக் கொள்கை, சிறப்புக் கொள்கை, தன்மானக் கொள்கை, தொண்டறக் கொள்கையாகும்.

ஆகவே அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிறப்பு நிகழ்ந்த மணவிழா இது.

இப்போது இரண்டாவது தலைமுறையின் மணவிழாவினை நடத்தி வைக்கின்றோம். இந்தக் குடும்பத்தில்  நான்காவது தலைமுறைக்கும் மணவிழா வினை நடத்தியிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்கள்.

இது என்னுடைய பெருமைக்காக அல்ல; இந்தக் கொள்கைக்குப் பெருமையாகும்.

அதைவிட இன்னும் சிறப்பு என்னவென்றால், இந்தக் குடும்பத்திற்கு முதல் பெருமையாகும். ஏனென்று கேட்டால், நான்கு தலைமுறையாக இந்தக் கொள்கையை விடாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.

சில குடும்பங்களில், குடும்பத் தலைவர் இந்தக் கொள்கையைப் பின்பற்றுவார். பிறகு, அவருடைய காலத்திற்குப் பிறகு, இந்தக் கொள்கையிலிருந்து வழுவி விடுவார்கள்.

அண்மைக்காலத்தில், எங்களுக்கே ஒரு கசப்பான அனுபவம். அது என்னவென்றால், இந்தக் கொள்கையைப் பின்பற்றிக் கொண்டிருப்பார்கள். வசதி வாய்ப்புகள் பெருகப் பெருக, இந்தக் கொள்கை சுருங்கிக் கொண்டு வரும், சில பேருடைய வாழ்க்கையில்.

ஆனால், இந்தக் குடும்பத்தினர் முற்றிலும் மாறு பட்டவர்கள். ஆகவே, இந்தக் குடும்பம் பாராட்டக்கூடிய, வரவேற்கக்கூடிய ஒரு குடும்பமாகும்.

ஆகவே, இந்த மணமக்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வந்திருக்கின்ற உங்களி டையேதான் நான் பேசவேண்டும்.

நல்லயன் – சுமதி ஆகியோருடைய மணவிழாவினை 27.5.2001 இல் நான் நடத்தி வைத்திருக்கின்றேன். புத்தக வெளியீட்டிற்காகவும் வந்திருக்கின்றேன்.

உலகம் முழுவதும் பெரியாரைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, அமெரிக்காவிற்கு முதலில் சென்றோம்.

கொள்கைப் பிரச்சாரகராக இருந்தவர் மு.ந.நடராசன்

இந்தக் குடும்பத்தினுடைய தலைவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய நடராசன் அவர்கள் எங்களுக்கு முன்பாக, அவர் அமெரிக்காவில் இருப்பார். பெரியாருடைய கருத்துகள், அண்ணாவினுடைய கருத்துகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகமாக அச்சிட்டு, மாநாட்டிற்கு வருகின்ற தலைவர்களுக்கு, தமிழ் மொழி தெரியாதவர்களுக்கு, ஆங்கிலம் பேசக்கூடியவர்களுக்கு அந்தப் புத்தகங்களைக் கொடுக்கக் கூடிய கொள்கைப் பிரச்சாரகராக இருந்தவர். அவ்வளவையும் சொந்த செலவில் செய்தவர்.

இயக்கத்திற்கு இது ஒரு பணி என்று சொல்லக்கூடிய அளவில் மகிழ்ச்சியோடு செய்தவர்.

இது ஒரு கொள்கைக் குடும்பம் என்று, பெரு மைக்காகவோ அல்லது முகஸ்சுதிக்காகவோ சொல்ல வில்லை. நடைமுறை உண்மை.

இந்த மணவிழாவிற்கு இன்னொரு சிறப்பு என்ன வென்றால், இங்கே ஒரு புத்தகம் கொடுத்தார்கள். மேடையில் இருக்கும்போதே இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நல்ல அற்புதமான செய்திகளை இதில் பதிவு செய்திருக்கிறார்கள்.

திராவிடர் கழகத்திலோ, பகுத்தறிவாளர் கழகத்திலோ சேர்ந்தவர்களுடைய ஜாதி தெரியவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், வேறொரு சந்தர்ப்பத்தினால், அதைத் தெரிந்துகொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

சுயமரியாதைத் திருமணத்திற்கு முன்னோடி!

என்ன அந்த சூழ்நிலை என்றால், ‘விஸ்வகர்ம’ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தங்களை ‘பிராமணர்கள்’ என்று அழைத்துக் கொண்டாலும், அப்படிப்பட்ட ‘விஸ்வகர்ம’ சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், சுயமரியாதைத் திருமணத்திற்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் நமக்கொன்றும் பார்ப்பனர்கள்மீது கோபம் கிடையாது. மணவிழாவை நடத்தி வைக்க அவர்களை அழைக்காததற்குக் காரணம் இல்லாமல்  இல்லை.

21 ஆம் நூற்றாண்டில் நடைபெறுகின்ற திருமணத்தில், இங்கே தரப்பட்டுள்ள புத்தகத்தில், திருமண உரிமையே நமக்கு இல்லை என்று சொல்லி, 19 ஆம் நூற்றாண்டில் ஒரு போராட்டம் நடைபெற்று இருக்கிறது என்ற செய்தியை பதிவு செய்திருக்கிறார்கள். பெரியார், அண்ணா, எங்களைப் போன்றவர்களுடைய கருத்துகளை எடுத்துச் சொல்வது முக்கியமல்ல.

பார்ப்பனியக் கொடுமை எப்படி இருக்கின்றது என்பதற்கும், சமத்துவத்திற்கு விரோதமாகவும், சம வாய்ப்பு விரோதமாகவும் இருக்கிறது என்பதற்கு அடையாளம் என்னவென்றால், மிக முக்கியமான ஒரு பகுதி இந்தப் புத்தகத்தில்.

வைதீக பிராமணர்களை எதிர்த்து, வழக்காடி வெற்றி பெற்றதுதான் விஸ்வகர்மா சமுதாயம் என்ற தகவல்தான்.

மார்க்க சகாயம் ஆச்சாரி

1814 ஆம் ஆண்டு காலகட்டத்தில், ஆந்தி ராவில் உள்ள சித்தூரில் ஒரு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தை நடத்தி வைத்தவர்கள், விஸ்வகர்மா பிராமணர்கள்.

மேலே குறிப்பிட்ட சமுதாயத்திலிருந்து மார்க்க சகாயம் ஆச்சாரி என்பவர் நடத்தி வைத்தார்.

இந்த மணவிழாவிற்கு என்னை அழைத்துத் தலைமை தாங்கவேண்டும் என்று சொன்னது போல, அவர் அந்த மணவிழாவினை நடத்தி வைத்தார்.

சித்தூர் ஜில்லா அதாலத்துக்
கோர்ட் தீர்ப்பு

எப்படி நீங்கள் மணவிழாவை நடத்தலாம்? நாங்கள்தான் பிராமணர்கள்? புரோகிதம்தான் எங்களுடைய வேலை? எங்களுடைய உரிமையில் இவர் தலையிட்டு விட்டார் என்று சொல்லி, பஞ்சாங்கம் குண்டைய்யன் என்பவர், அப்போது பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த காலம் – ஒரு வழக்கினை சித்தூர் ஜில்லா அதாலத்துக் கோர்ட்டில் தொடர்ந்தார்.  1814 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கின் விசாரணை 1818 ஆம் ஆண்டில் விசாரணை முடிந்து, தீர்ப்பு சொல்லப்பட்டது.

சித்தூர் ஜில்லா அதாலத்துக் கோர்ட் தீர்ப்பைப்பற்றி இந்தப் புத்தகத்தில் சுருக்கமாகவும், எல்லோருக்கும் புரியும்படியாக எடுத்து எழுதியிருக்கிறார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்பு…

இப்படி ‘‘விஸ்வகர்மா சமூகத்தைச் சார்ந்தவர்கள் திருமணத்தை நடத்தி வைக்க உரிமையில்லாதபோது, அதை மீறி, திருமணத்தை நடத்தியிருக்கிறாய். ஆகவே, இழப்பீடு கொடுக்கவேண்டும்; அபராதம் விதிக்கவேண்டும்’’ என்று 200 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

நடராசன் அவர்கள், என்னிடம் வந்து, இந்தப் புத்தகத்தைப்பற்றி சொன்னார். பழைய புத்தகங்களை யெல்லாம் திரட்டுங்கள், மறுபடியும் மறுபதிப்பு செய்வோம் என்றேன். அதன்படியே நடராசன் அவர்க ளும் புத்தங்களைத் திரட்டி, இப்படி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

‘‘சத்ய சோதக் சமாஜ்’’

மகாராட்டிராவில், ஜோதிபாபுலே, அவர்களால், ‘‘சத்ய சோதக் சமாஜ்’’ என்ற ஓர் அமைப்புத் தொடங்கப்பட்டது.  அது அந்த ஊர் சுயமரியாதை இயக்கம்.

அவர், ‘‘மணவிழாவிற்குப் பார்ப்பனர்களை, புரோகிதர்களாக அழைக்கவேண்டிய அவசியமில்லை. அந்தந்தக் குடும்பத்தில் உள்ள பெரியவர்களோ, பார்ப்பனரல்லாதவர்களோ நடத்தலாம்’’ என்றார்.

மகாராட்டிராவில் இருக்கின்ற பார்ப்பனர்கள், இதனை எதிர்த்து  மணவிழாவினை நடத்தி வைத்தவர்மீதும், மணமக்கள், மணமக்கள் பெற்றோர்மீதும் வழக்குத் தொடுத்தனர், எங்கள் உரிமையை எப்படி நீங்கள் பயன்படுத்தலாம் என்று.

அந்த வழக்கின் முடிவில், அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று தீர்ப்புக் கொடுத்தார்கள்.

(தொடரும்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *